TVS: `இந்தாங்க இலவச சர்வீஸ்' - டிவிஎஸ் பைக்/ஸ்கூட்டர் வெச்சிருக்கீங்களா? உங்களுக்கான உதவிக்கரம்!

மெக்கானிக் ஷெட்களில் கால் வைக்க முடியவில்லை. அந்தளவு ஏகப்பட்ட வரிசை. அனைவரும் தங்கள் பைக்குகளை/கார்களை சர்வீஸ் சென்டரில் விட்டுவிட்டு தேவுடு காத்துக் கொண்டிருக்கிறார்கள். 

கம்பெனி சர்வீஸ் சென்டர்களில் சொல்லவே வேண்டாம்! செம பிசி! அதுவும் டிவிஎஸ் ஆத்தரைஸ்டு சென்டர்களில், ஷோரூமில் பைக் புக் செய்பவர்களைவிட, சர்வீஸ் சென்டரில்தான் ஏகப்பட்ட கூட்டம். பரபரப்புக்கு இன்னொரு காரணம் – டிவிஎஸ், தனது நிறுவன பைக்குகளுக்கு இலவச சர்வீஸ் என்று அறிவித்திருக்கிறது. 

அதாவது, லேபர் சார்ஜ் என்று சொல்லக்கூடிய சர்வீஸ் செலவை மட்டும் இலவசமாக ஆஃபர் செய்திருக்கிறது டிவிஎஸ். வெள்ள பாதிப்பு ஏற்பட்ட தமிழ்நாடு, ஆந்திரா போன்ற அனைத்து மாநிலங்களிலும் இந்த ஆஃபரை வழங்கியிருக்கிறது டிவிஎஸ். இது பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் டிவிஎஸ்–ன் ஐக்யூப் எலெக்ட்ரிக் டூவீலர்கள் இரண்டுக்குமே இந்த சர்வீஸ் பொருந்தும்.

TVS bike service

 டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கே.என்.ராதாகிருஷ்ணன், இந்த இலவச சர்வீஸ் பற்றி அறிவித்திருக்கிறார். 

‘‘இதுபோன்ற இயற்கைப் பேரிடர்களின்போது, போக்குவரத்துதான் பெரும் பிரச்னையாகி விடுகிறது. அனைத்து பைக் உரிமையாளர்களும் நிர்க்கதியாக நிற்பதுதான் நடக்கிறது. இதனால், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களைப் பழுதுபார்ப்பதற்கும், முன்னுரிமை அளிப்பதற்கும் ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம். மக்கள், வாகனங்களின் பழுது பற்றிச் சிந்திப்பதற்கான நேரமோ வாய்ப்போ இதனால் குறையும் என்று நம்புகிறோம்! இதற்காகத்தான் இந்தச் சேவைகளை டிவிஎஸ் வழங்க முடிவு செய்திருக்கிறது!’’ என்று கூறியிருக்கிறார். 

அதாவது, சர்வீஸ் சார்ஜ் மட்டும்தான் இலவசம்; உதிரி பாகங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கான செலவை வாடிக்கையாளர்கள்தான் கொடுக்க வேண்டும். அந்த அறிவிப்பில் வாகனங்களை டோ செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறார் கே.என்.ராதாகிருஷ்ணன். 

பொதுவாக, ஒரு பைக்கை ஜெனரல் சர்வீஸ் செய்ய வேண்டும் என்றால், சுமார் 1,500 ரூபாய் வரலாம். இதில் லேபர் சார்ஜ் மட்டும் 600 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதில் மீதமுள்ள செலவு – ஆயில், ஏர் ஃபில்ட்டர், ஆயில் ஃபில்ட்டர் போன்ற மற்ற உதிரிபாகங்களுக்குப் போய்விடும். இப்போது இந்த வெள்ள நேரத்தில் ஒரு பைக்கை முழுவதுமாக சர்வீஸ் செய்ய 2,500 வரை ஆகும் என்றார் இன்னொரு சர்வீஸ் சென்டர் மெக்கானிக். இதில் நமக்கு 600 ரூபாய் மீதம் என்றாலும், நமக்கு லாபம்தானே! 

டிவிஎஸ்–ல் பாராட்ட வேண்டிய விஷயம் என்னவென்றால், உங்கள் டிவிஎஸ் பைக்குகள், ஸ்கூட்டர்களை டிவிஎஸ்–ன் எந்த ஏரியாவிலும் உள்ள ஆத்தரைஸ்டு சர்வீஸ் சென்டரிலும் விடலாம். நீங்கள் அண்ணா நகரில் வாங்கிய டூவீலரை அடையாறில்கூட இலவசமாக சர்வீஸ் செய்யலாம் என்பதுதான் ஸ்பெஷல். ஒரு முக்கியமான விஷயம் – தயவுசெய்து டூ–வீலரை ஸ்டார்ட் பண்ணிக் கொண்டு போய் விட்டுடாதீங்க! டோ செய்வது அவசியம்!



from ஆட்டோமொபைல் https://ift.tt/LnRkETS

Post a Comment

0 Comments

o