டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத் தலைவரும், ட்விட்டரை வாங்கியவருமான எலான் மஸ்க், தன்னுடைய டெஸ்லா கார் தொழிற்சாலையை இந்தியாவில் அமைக்க, பல ஆண்டுகளாக முனைப்பு காட்டி வருகிறார். இப்படியான நிலையில், மூன்று நாள்களுக்கு முன்பு, அமெரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, எலான் மஸ்க்கைச் சந்தித்துப் பேசினார்.

‘டெஸ்லா விரைவில் இந்தியாவில்...’

இந்தச் சந்திப்புக்குப் பின் பேட்டியளித்த எலான் மஸ்க், ‘‘இந்தியா மீது பிரதமர் மோடி மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார். ஏனெனில் எங்களைப் போன்றோரை இந்தியாவில் முதலீடு செய்ய ஈர்க்கிறார். அதற்குச் சரியான நேரத்தை அறிய வேண்டும்.

எலான் மஸ்க்

சூரிய ஆற்றல் முதலீட்டுக்கு இந்தியா சிறந்து விளங்குகிறது. அடுத்தாண்டு இந்தியா செல்லத் திட்டமிட்டிருக்கிறேன். டெஸ்லா கார்கள் விரைவில் இந்தியாவில் இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்!’’ என, இந்தியாவில் தொழில் தொடங்க வேண்டுமென்ற தனது எண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் பேசியிருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள கர்நாடகா காங்கிரஸ் அரசின் தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில், தொழில் தொடங்க கர்நாடகத்தைத் தேர்வு செய்யுமாறு, எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

‘டெஸ்லாவுக்கான சிறந்த இடம் கர்நாடகா’

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எலான் மஸ்க்கை ‘டேக்’ செய்து, ‘‘முற்போக்கு மாநிலமாகவும், புதுமை மற்றும் தொழில்நுட்பத்தின் செழிப்பான மையமாகவும் கர்நாடகா உள்ளது. எலான் மஸ்க்கின் டெஸ்லா மற்றும் அவரது இதர நிறுவனங்களை ஆதரிக்கவும், வசதிகளை வழங்கவும் கர்நாடகா தயாராக உள்ளது.

தொழில்துறை அமைச்சர் எம்.பி.பாட்டில்

டெஸ்லா நிறுவனம் இந்தியாவின் அதன் பெரும் ஆற்றல் மற்றும் திறன்களைக் கொண்ட ஒரு ஆலையை அமைக்க விரும்பினால், டெஸ்லாவுக்கான சிறந்த இடம் கர்நாடகாவாத்தான் இருக்கும்!’’ எனப் பதிவிட்டு, எலான் மஸ்க்குக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவின் மூத்த ஆட்டோமொபைல் நிறுவனமான மெர்சிடீஸ் பென்ஸ் இந்தியாவின் CEO சந்தோஷ் ஐயர் இப்படிச் சொல்லி இருக்கிறார்.

"டெஸ்லா தங்கள் மாநிலங்களுக்கு வர வேண்டும் என்று ஒவ்வொரு மாநில அரசுகளும் ஆர்வம் காட்டுவதும், டெஸ்லாவை இந்தியாவில் முதலீடு செய்ய மத்திய அரசு முனைப்புக் காட்டுவதும் நல்ல விஷயம்தான். டெஸ்லா இந்தியாவில் கால் பதித்தால் இங்கு சொகுசு எலெக்ட்ரிக் கார்களுக்கான போட்டி ஆரோக்கியமானதாக இருக்கும். ஆனால் இதில் அரசு, டெஸ்லாவுக்கு என எந்தச் சிறப்புச் சலுகையும் வழங்கக்கூடாது. தொழில் தர்மம் என்பது அனைவருக்கும் ஒன்றாகவே இருக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொள்கிறேன்!" என்று பேசி இருக்கிறார்.

மெர்சிடீஸ் பென்ஸ் EQB
கடந்த 28 ஆண்டுகளாக இந்தியாவின் புனேவில் தொழிற்சாலை அமைத்து கார்களை உற்பத்தி செய்து வரும் பென்ஸ், இப்போதைக்கு இந்தியாவில் EQS, EQC, EQB என காஸ்ட்லி எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து கொண்டிருக்கிறது. டெஸ்லா இந்தியாவுக்கு வந்தால், மெர்சிடீஸ் பென்ஸ்தான் டெஸ்லாவுக்கு மிகப் பெரிய போட்டியாக இருக்கும். டெஸ்லா சீக்கிரம் வந்தால் போட்டி சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்போல!


from Automobile https://ift.tt/btfYnqv