ராயல் என்ஃபீல்டு சமீபத்தில் அதன் `புல்லட் J Series' மாடலை கொண்டுவந்திருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ராயல் என்ஃபீல்டு சின்னத்தை யாராவது பார்த்தால் புல்லட்டா என்றுதான் கேட்டபார்கள்.
ராயல் என்ஃபீல்டுக்கு அப்படி ஒரு அடையாளம் இந்த மாடல் பைக். கிட்டத்தட்ட 90 ஆண்டுகளாக பைக் சந்தையின் இளைய தளபதி இப்போது தளபதியாக மீண்டும் களமிறங்குகிறது. இந்த புது புல்லட் பைக்கில் என்னென்ன வசதிகள் இருக்கின்றன. ஏன் வாங்கலாம் என ஏற்கெனவே வீடியோ வெளியிட்டிருக்கிறோம்.
இந்தக் கட்டுரை அதைப் பற்றியது அல்ல. இந்த கட்டுரை புல்லட்டை அளவின்றி நேசிக்கும், பல ஆண்டுகள் புல்லட் பைக்குடன் தன் ரைடிங் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு 84 வயது இளைஞன், இந்த புல்லட்டை பற்றி என்ன சொல்லப்போகிறார் என்பதே.

அந்த இளைஞன் டாக்டர் நந்தகுமார். கிட்டத்தட்ட 58 ஆண்டுகளாக பைக் ரைடிங் செய்துவருகிறார். புது புல்லட்டுடன் அவரைச் சந்திக்கச் சென்றிருந்தபோது தனது 1969 மாடல் புல்லட்டை கிக் அடித்து ஸ்டார்ட் செய்து ரைடுக்கு அழைத்தபடியே தன் கதையைச் சொன்னார்.
“1959ம் ஆண்டு நான் மெடிக்கல் காலேஜில் சேர்ந்தேன். அப்போது புல்லட்டின் விலை ரூ.3900. நான் 1966ல் 5500 ரூபாய் கொடுத்து புல்லட் வாங்கினேன். அப்போது சென்னையிலிருந்து கிருஷ்ணகிரி 250 கிலோமீட்டர் பைக்கில்தான் வருவேன். இப்போதும் ரைடுக்கு போகவேண்டும் என்றால் அடிக்கடி புல்லட்டை எடுப்பதுண்டு. இப்போது நான் வைத்திருப்பது என் நன்பரிடமிருந்து வாங்கிய 1969 மாடல் புல்லட். காஸ்ட் அயர்ன் G2 இன்ஜின்.”


முதலில் வின்டேஜ் 69 மாடலை சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு சாலையில் இறங்கினோம். G2 புல்லட்டை நான் ஓட்ட, நந்தகுமார் புது J-Series புல்லட்டை கிளப்பினார். புது புல்லட்டின் ஃபூயல் இன்ஜக்ஷன் தனக்கு பிடித்திருப்பதாகவும் அதிர்வே தெரியவில்லையே என்றும் ஆச்சர்யப்பட்டார் நந்தகுமார்.
“என்னைக் கேட்டால் எனக்கு புது புல்லட்டின் வேகம் பிடித்திருக்கிறது. சுலபமாக 120-130 கி.மீ வேகத்தில் செல்லமுடிகிறது. மைலேஜும் தரமாக இருக்கிறது. பழைய புல்லட்டில் அதிகபட்சம் 90 கி.மீ வரை மட்டுமே சிரமமில்லாமல் செல்லமுடியும். புது தலைமுறை ரைடர்களுக்கு இந்த J Series இன்ஜின் புல்லட்டை நிச்சயம் வாங்க பரிந்துரைப்பேன். 1980ல் ஜப்பானிய பைக்குகள் வந்த பிறகு நான் புல்லட் ஓட்டுவது கொஞ்சம் குறைந்துவிட்டாலும் முழுவதுமாக விடவில்லை. என்னுடைய 1969 புல்லட் ஆகட்டும் புது புல்லட் ஆகட்டும் இரண்டையும் நகரங்களில் கையாள்வது சுலபமாக இருக்கிறது. 54 ஆண்டுகளுக்கு பிறகும் இப்போதும் என்னுடைய புல்லட் 32-35 கி.மீ மைலேஜ் தருகிறது,” என்று தன் அனுபவத்தை முடித்தார் டாக்டர் சார்.
புல்லட், தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் பயணம் செய்துகொண்டிருக்கிறது. தாத்தாவில் ஆரம்பித்து பெயரன் வரை புல்லட்டில் பறக்கின்றனர். நந்தகுமார் மட்டுமில்லை இதே ஊரில் இருக்கும் ஷங்கர் வீட்டில் அவரின் தாத்தாவும் புல்லட் வைத்திருக்கிறார், அப்பாவும் புல்லட் வைத்திருக்கிறார். ஷங்கரிடமும் புல்லட் இருக்கிறது. J-Series புல்லட்டை ஷங்கரிடம் கொடுத்து ஓட்டிப்பார்க்கச் சொன்னோம்.

“நான் பைக் பிரியன் ஆவதற்கு முக்கியமான காரணமே என்ஃபீல்டுதான். நான் முதன்முதலில் வாங்கியது இரண்டாயிரமாம் ஆண்டில் வெளிவந்த என்ஃபீல்டு ஸ்டாண்டர்டு மாடல். கொஞ்ச காலம் மட்டுமே அந்த பைக் விற்பனையில் இருந்தது. கேம்பஸ் மாடல் என்று அதைச் சொல்வார்கள். அதை விற்றபிறகு 2011 மாடல் புல்லட் வாங்கினேன். புல்லட் என்ற பெயர் எங்களுடைய குடும்பத்திற்கு நெருக்கமானது. என் தாத்தாவிடம் மினி புல்லட் இருந்தது. அது பிடித்துப்போய் என் அப்பா 1990ல் ஒரு பழைய புல்லட் வாங்கினார். அதற்குப் பிறகு டீசல் புல்லட் வைத்திருந்தார். அதையும் விற்ற பிறகு ஒரு 5 ஸ்பீடு எலெக்ட்ரோ புல்லட் வைத்திருந்தார்.

அதற்கு பிறகு இன்னொரு டீசல் புல்லட் வாங்கினோம். கடைசியாக நான் வைத்திருக்கும் UC இன்ஜின் புல்லட். கிட்டத்தட்ட பல தலைமுறை புல்லட்டை பார்த்துவிட்டேன். புதிதாக வந்திருக்கும் புல்லட்டுக்கும், என்னுடைய புல்லட்டுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. எல்லாமே பாசிட்டிவான வித்தியாசம்தான். சீக்கிரமே நானும் ஒரு புது புல்லட் வாங்கலாம் என்றிருக்கிறேன்,” என்று சுருக்கமாக ஒரு பைக் வரலாற்றைச் சொல்லிவிட்டு கிளம்பினார் ஷங்கர்.
சிம்ரனின் தீவிர ரசிகர்களாக இருந்தவர்கள் சமந்தா வந்ததால் சிம்ரனை பிடிக்காது என்று சொல்லிவிடுவார்களா? புல்லட் விசிரிகளும் அப்படித்தானே. அதனால்தான் “ராயல் என்ஃபீல்டு எனக்குப் பிடிக்காது” என்று காலரைத் தூக்கிச் சொல்லும் ஒரு நபரிடம் புது புல்லட்டை கொடுத்து ஒரு மினி ரிவ்யூ கேட்டோம். “என்னுடைய பெயர் சத்தீஷ். என்னிடம் இருப்பது எல்லாமே ஜப்பான் பைக்குகள்தான். சுஸுகி மேக்ஸ் 100ல் பைக் ஓட்டக் கற்றுக்கொண்ட எனக்கு இதற்கு முந்தைய புல்லட் பைக்குகள் மேல் பெரிதாக ஆர்வமில்லை. இன்ஜின் நம்பிக்கையற்றது. எரிச்சலூட்டும் சத்தமும், வைப்ரேஷனும் இருக்கும். சுஸுகி, யமஹா, ஹோண்டா சிபிஆர், கவஸாகி என நான் வைத்திருந்த பைக்குகள் எல்லாமே ஜப்பான்தான். ராயல் என்ஃபீல்டின் புது J Series புல்லட் 350 பைக்கை ஓட்டிப்பார்த்தேன்.

பழைய புல்லட்டின் காலம் முடிந்துவிட்டது. இது புதுயுகம் என்று சொல்வேன். ரொட்டியில் வெண்ணையை தடவுவதுபோல செம்ம ஸ்மூத் இந்த இன்ஜின். லாங் ஸ்டிரோக் இன்ஜினாக இருந்தாலும் கவுன்டர் பேலன்ஸ் தொழில்நுட்பம் மூலம் இன்ஜினை அதிர்வுகளே தெரியாதது போல மாற்றியிருக்கிறார்கள். பாதுகாப்பு, நம்பகத்தன்மை என்று ஜப்பான் பைக்குகளுக்கு இனையாக புல்லட்டை மாற்றியருக்கிறது ராயல் என்ஃபீல்டு. எனக்கு இந்த பைக்கும் அதன் இன்ஜினும் பிடித்திருக்கிறது,” என்று ராயல் என்ஃபீல்டுக்கு ஒரு ஹார்ட் விட்டுக் கிளம்பினார் சத்தீஷ்.
அமெரிக்கர்கள் ஹார்லி டேவிட்சன், இந்தியன் என்றும் ஜெர்மானியர்கள் BMW என்றும் தங்களுடைய பைக்குகளை பெருமையாகக் காட்சிப்படுத்துவார்கள். இந்தியர்களுக்கு புல்லட்தான் பெருமை, அடையாளம். 90 ஆண்டுகளாக ராயல் என்ஃபீல்டு புல்லட் என்ற பெயரை விட்டுவிடாமல் இன்னும் உயிர்ப்புடன் அடுத்தடுத்த தலைமுறைக்குக் கடத்திக்கொண்டிருக்கிறது.
இந்தியாவில் கட்சிகளின் தலைவர்கள் மாறிக்கொண்டே இருக்கலாம், அரசியலில் அது யதார்த்தம் ஆனால், இந்தியாவில் மாறாதது புல்லட்டும், அதன் மேல் ரைடர்கள் வைத்திருக்கும் பிரியமும்தான்.
from ஆட்டோமொபைல் https://ift.tt/nmgJHGC
0 Comments