Royal Enfield Bullet 350: வாவ்! இனிமே இந்தப் புது புல்லட்டில் அந்தப் பிரச்னை இருக்காதா! ஆனால்?

‘புல்லுக்கட்டு ஓட்டத் தெரியாதவனுக்குப் புல்லட்டு எதுக்கு’ என்கிற டயலாக் காமெடியோ இல்லையோ; அதில் கொஞ்சம் உண்மையும் கலந்திருக்கும். ஒல்லி பெல்லி பார்ட்டிகள் முதல் ஜிம்மில் போய் உடம்பை ஏற்றி வைத்திருக்கும் கில்லி பார்ட்டிகள் வரை எல்லோருக்கும் புல்லட் ஓட்ட ஆசை இருக்கும்.

என்னதான் புல்லட் ஓட்டுவது பரமசுகம் என்றாலும், அதை ஓட்டியவர்களிடம் கேட்டால் ஓர் உண்மையைச் சொல்வார்கள்; ‘‘80–க்கு மேல போனா கால் தடதடக்குதுங்க!’’ என்பார்கள். நிஜம்தான்; புல்லட்டின் எக்ஸாஸ்ட் பீட்டைப்போலவே, ஹேண்ட்பாரில் நம் கைகளும், ஃபுட்பெக்ஸில் நம் கால்களும் சேர்ந்து தடதடக்கும். 

இது ஒரு குறையில்லை; இந்த இன்ஜினின் பீட் அப்படி. இனிமேல் அந்தப் பிரச்னை இருக்காது. ஆம், புல்லட்டின் ஃபெமிலியரான UCE (Unit Construction Engine) இனிமேல் புல்லட்டில் இருக்காது.

Royal Enfield Bullet 350

இந்த EFi (Electronic Fuel Injection)தான் புல்லட்டையே ஆட்சி செய்து கொண்டிருந்தது. இப்போது புல்லட்டில் புத்தம் புதிய J சீரிஸ் இன்ஜினைப் பொருத்தி வெளியிட்டிருக்கிறார்கள். ஹன்ட்டர் 350, மீட்டியார் 350 போன்ற பைக்குகளில் உள்ள அந்த இன்ஜின்தான் இது. இதன் மிகப் பெரிய ப்ளஸ்ஸே – வைப்ரேஷன்களைக் குறைப்பதுதான். ஹன்ட்டர், மீட்டியார் ஓட்டியவர்களைக் கேட்டால் இதைப் பற்றித் தெரியும். லேட்டஸ்ட்டாக ராயல் என்ஃபீல்டின் வல்லம் வடகல் தொழிற்சாலையில், J ப்ளாட்ஃபார்ம் ஆர்க்கிடெக்ச்சரில் தயாரான புல்லட்டைக் காட்சிப்படுத்தி இருந்தார்கள். 

புது இன்ஜின் என்றால், அப்போ அந்த ‘தட் புட்’ பீட்? என்று நீங்கள் கேட்பது புரிகிறது. இதில் எந்த மாற்றமும் இருக்காது என்கிறது ராயல் என்ஃபீல்டு. ‘New Heart; Same Beat’ என்றுதான் விளம்பரமே செய்கிறார்கள். புது புல்லட் பற்றி ஒரு சின்ன முன்னோட்டம்.

Bullet 350
  • இதில் முன்பு இருந்த அதே சிசி மற்றும் டெக் விவரங்கள்தான். 349 சிசி, ஏர் கூல்டு இன்ஜின்தான். இதன் பவர் 20.2bhp மற்றும் 27Nm டார்க். இது க்ளாஸிக் 350–ல் இருக்கும் அதே சமாச்சாரங்கள்தான். என்ன, ப்ளாட்ஃபார்ம்தான் ஜே சீரிஸ். பழைய புல்லட்டில் இருந்த ‘தட தட’ அதிர்வுகள் இதில் பெரிதாக இருக்காது. இந்த இன்ஜினுக்குப் புது ஃப்ரேம் கொடுத்திருக்கிறார்கள். இந்த இன்ஜின் லாங் ஸ்ட்ரோக்குக்குப் பெயர் பெற்றது. லோ எண்ட் டார்க்கில் அந்த புல்லட்டின் ‘தட் தட்’ பீட் இதிலும் தெறிக்கும்.

  • ஆனால் ராயல் என்ஃபீல்டுக்கு ஒரு கேள்வி? ஏன் இத்தனை பெரிய சிசி பைக்கில், ஒரு 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொடுக்கக் கூடாது?

Classic 350 போலவேதான் புல்லட்டின் டிசைன் இருக்கிறது.
  • டிசைனைப் பொறுத்தவரை புல்லட்டை மாற்றினால், மக்கள் ஏற்றுக் கொள்வார்களா தெரியவில்லை. அந்த க்ளாஸிக் ஸ்டைல் இதிலும் தொடர்கிறது. பழசுக்கும் புதுசுக்கும் டிசைனில் பெரிய வித்தியாசமெல்லாம் கண்டுபிடிக்க முடியாது. இதில் சிங்கிள் பீஸ் சீட் நல்ல நீளமாகக் கொடுத்திருக்கிறார்கள். இதில் கணவன் – மனைவி–  குழந்தை என்று பயணிக்க வசதியாக இருக்கும். 

  • இதன் சேஸியும் புதுசு. இதற்குப் பெயர் ட்வின் டவுன்ட்யூப் க்ரேடில் ஃப்ரேம். முன்பைவிட கிண்ணென்று இருக்கும் என்கிறது ராயல் என்ஃபீல்டு. வழக்கப்படி கன்வென்ஷனலாக டெலிஸ்கோப்பிக் ஃபோர்க்கும், பின் பக்கம் ட்வின் ஷாக் அப்ஸார்பர் செட்அப்பும் இருக்கின்றன. போட்டியாளர்களெல்லாம் USD ஃபோர்க்ஸுக்குப் போய் விட்டதை நினைவுபடுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

  • அதேபோல் உட்கார்ந்து பார்த்தால், பழசைவிட கொஞ்சம் அப்ரைட்டாக ரைடிங் பொசிஷன் இருக்கிறது. ஹேண்டில்பார்கள் மாறியிருக்கின்றன. பக்கவாட்டில் செவ்வக வடிவ பாக்ஸ்கள், பின் பக்க ஃபெண்டர் கொஞ்சம் சதுர வடிவில் இருக்கிறது. வட்ட வடிவ ஹெட்லைட்டுக்குக் குட்டி வைஸர் இருப்பது அழகு.

  • இதன் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஒரு மாதிரி Heart வடிவில் ஹவுசிங் டிசைன் செய்திருக்கிறார்கள். அதற்கு நடுவே 3 வட்ட வடிவ கன்சோல்கள்.  அட, வித்தியாசமாகத்தான் இருக்கிறது. அட இதில் ஒரு யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது.

J Series Engine Bullet
  • பின் பக்கம் டெயில் லாம்ப் க்ளாஸிக் சீரிஸில் இருக்கும் அதேதான். ஆனால், அந்த லைட் இருக்கும் ஹவுசிங் புதுசு. வித்தியாசம் வேணுமில்லையா.. அதுக்காக!

  • 19 மற்றும் 18 இன்ச்களில் முன்/பின் பக்க வீல்கள் கொடுத்திருக்கிறார்கள். ஸ்போக் வீல்கள்தான். இதில் 300 மிமீக்கு முன் பக்கம் டிஸ்க் பிரேக்ஸும், பின் பக்கம் 270 மிமீ டிஸ்க் பிரேக்ஸும் கொடுத்திருக்கிறார்கள். இது ஒரு டூயல் சேனல் ஏபிஎஸ் பைக். இதுவே லோ வேரியன்ட்டில் 153 மிமீ டிரம் பிரேக்ஸ்தான் இருக்கும். இதில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ்தான். 

  • புல்லட் விரும்பிகளுக்காக பெட்ரோல் டேங்க்கில், கையினால் பெயின்ட்டிங் செய்யப்பட்ட தங்க நிற பின் ஸ்ட்ரைப்கள் இந்தப் புது ஜென் மாடலிலும் கொடுத்திருக்கிறார்கள். 

  • இதன் கெர்ப் எடை 195 கிலோ. வீல்பேஸ் 1,390 மிமீ என்பதால், வளைத்து நெளித்து ஓட்ட பக்காவாகவே இருக்கிறது. 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பதும் பக்கா! இதன் சீட் உயரம் 805 மிமீ. 

  • ராயல் என்ஃபீல்டில் MIY (Make It Yourself) என்றொரு திட்டம் உண்டு. இதன் மூலம் இந்தப் புது புல்லட்டிலும் உங்களுக்குப் பிடிக்கிற மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். ட்ரிப்பர் நேவிகேஷன் பாட் மற்றும் அலாய் வீல்கள் கூட மாற்றிக் கொள்ளலாம். 

மொத்தம் 5 கலர்களில்...
  • மொத்தம் 5 கலர்களில் இது கிடைக்கிறது. மிலிட்டரி சிவப்பு மற்றும் மிலிட்டரி கறுப்பு வெர்ஷன்கள் 1.74 லட்சம் விலையிலும், ஸ்டாண்டர்டு மரூன் மற்றும் ஸ்டாண்டர்டு கறுப்பு நிற புல்லட் 1.98 லட்சம் விலையிலும் பொசிஷன் ஆகியிருக்கிறது. இதுவே டாப் மாடல் கலக்கலாக இருக்கிறது. கறுப்பும் தங்கமும் கலந்த இந்த மாடலின் விலை ரூ.2.16 லட்சம். இவை எல்லாமே எக்ஸ் ஷோரூம் விலை. இது க்ளாஸிக் புல்லட் டாப் மாடலைடை விட சுமார் 9,000 ரூபாய் குறைவு என்பது சூப்பர். இந்த லோ மாடல் புல்லட், க்ளாஸிக் 350 பைக்கைவிட 20,000 ரூபாய் குறைவு என்பது செம! 

மொத்தத்தில், புல்லட்டின் ஆட்சி தொடரப் போகிறது. வாழ்த்துகள் ராயல் என்ஃபீல்டு!



from ஆட்டோமொபைல் https://ift.tt/SqX3m0J

Post a Comment

0 Comments

o