Video: 200 கிமீ வேகத்தில் லாரி மீது மோதிய ரோல்ஸ் ராய்ஸ் கார்! பயணிகள் ஓகே! ஆனால் டிரைவர்/க்ளீனர்?

சொகுசு கார் விபத்து கொஞ்சம் மோசமாகவே இருக்கும். அந்த வகையில் இந்தியாவில் மிக மோசமான ஒரு சொகுசு கார் விபத்து ஒன்று டெல்லி – மும்பை எக்ஸ்ப்ரஸ் ஹைவேஸில் நடந்திருக்கிறது. சில நாள்களுக்கு முன்பு நடந்த இந்த விபத்தில் இதில் லாரி ஓட்டுநரும், க்ளீனரும் அநியாயமாக உயிர் விட்டிருக்கிறார்கள்.

குர்கான் – தெளசா எனும் எக்ஸ்டென்ஷில் இருக்கும் அந்த நெடுஞ்சாலையில் யாருக்குமே வேகமாகப் போக ஆசை வரும். அப்படித்தான் காஸ்ட்லியான ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று அதிவேகமாக வந்திருக்கிறது. அதன் வேகம் 200 கிமீ என்று சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருக்கிறது. வேகமாகப் போய் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில், ரோல்ஸ் ராய்ஸ் கார் உருக்குலைந்து சிதைந்து போனாலும், காரில் பயணித்த மூன்று பேரையும் காப்பாற்றி இருக்கிறார்கள். ஆனால், பின் பக்கம் மோதியும் அத்தனை டன் எடை கொண்ட லாரியில் இருந்த டிரைவர் ராம்ப்ரீத் என்பவரும், உடன் கோ டிரைவர் சீட்டில் பயணித்த க்ளீனரும் (க்ளீனரின் பெயர் தெரியவில்லை) சம்பவ இடத்திலேயே பலியாகி இருப்பதுதான் கொடூரமான விஷயம். 

ஆரம்பத்தில் அந்த லாரி மீதுதான் தவறு இருப்பதாகச் சொல்லப்பட்ட நிலையில், சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த பிறகு அந்தக் காரின் மீதுதான் தவறு இருப்பதாகக் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த லாரி போக்குவரத்து விதிகளை மிகச் சரியாகக் கடைப்பிடித்ததாகவும் ஆதாரங்கள் காட்டுகின்றன. 

விபத்துக்குச் சில விநாடிகள் முன்பு வரை அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரின் வேகம் 200 கிமீ என்று பதிவாகியிருக்கிறது. ஆனால், உண்மையான வேகம் 130 – 150 கிமீ இருக்கலாம் என்றும் விவாதம் போய்க் கொண்டிருக்கிறது. அதேபோல், அந்த கார் ஒரு பேரணியில் கலந்து கொண்டது என்றும், அது பேரணியில் இருந்து விலகி இந்த நெடுஞ்சாலையில் பிரிந்து வந்ததாகவும் சொல்கிறார்கள். அதற்கு முன்பு வரை 20 ரோல்ஸ் ராய்ஸ் கார்கள் பேரணியாகப் போயிருக்கின்றன. அதிலிருந்து பிரிந்து வந்த இந்த கார் மீண்டும் அந்தப் பேரணியில் இணைய வேண்டும் என்று அதிவேகத்தில் வந்ததாகச் சொல்லப்படுகிறது. அதாவது, வெறும் 12 நிமிடங்களில் 40 கிமீ–யைக் கடந்திருக்கிறதாம் அந்த ரோல்ஸ் ராய்ஸ். 

உருக்குலைந்த ரோல்ஸ் ராய்ஸ்

பின் பக்கத்தில் மோதிய வேகத்தில் நல்லவேளையாக – லாரியில் டீசல் வெளியே லீக் ஆகவில்லை என்றாலும், டிரைவரும் அப்பாவி க்ளீனரும் பலியானதுதான் கொஞ்சம் தாங்க முடியாத விஷயமாக இருக்கிறது. அதீத வேகத்தில் வந்து மோதியதால், அந்தக் கார் உருக்குலைந்து போனதோடு, தீ விபத்தும் ஏற்பட்டிருப்பதால், அந்த கார் ரோல்ஸ் ராய்ஸின் என்ன மாடல் கார் என்று கூடக் கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறதாம். இருந்தாலும், காரில் பயணித்த 3 பேருக்கும் காயங்கள் மட்டும் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்களாம். 

கட்டுமானம், சொகுசு, வேகம் எல்லாமே ரோல்ஸ்ராய்ஸ் மாதிரியான கார்களுக்கு நற்பெயர்தான்; எமனே வந்தாலும் டாட்டா காட்டி விடலாம்தான்; ஆனால், இது காரில் பயணிப்பவர்களுக்கு மட்டும்தான்; மற்றவர்களின் உயிருக்கு இந்த வேகமே எமனாக மாறும் வாய்ப்புண்டு என்பதையும் கவனத்தில் கொண்டு கார் ஓட்ட வேண்டும். 


from ஆட்டோமொபைல் https://ift.tt/T195Jcv

Post a Comment

0 Comments

o