Lokesh Kanagaraj: பின்னாடி பெரிய சினிமா ஸ்க்ரீன்; மசாஜ் சீட்! லோகியின் புது BMW கார் ரூ.2 கோடியா?

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை பென்ஸ் கார் வைத்திருக்கும் செலிபிரிட்டிகள் ரொம்பவும் குறைவு; இல்லை… இல்லவே இல்லை என்றே சொல்லலாம். நடிகர் கார்த்தி மட்டும் தனது தந்தையின் பென்ஸ் எஸ்யூவியை வைத்திருந்ததாக நினைவு. அட, விஜய் சேதுபதிகூட லேட்டஸ்ட்டாக ஒரு பென்ஸ் காரை கஸ்டமைஸ் செய்து, அந்த நிறுவன லோகோவை V-யாக மாற்றி ஓர் அதகளம் செய்திருந்தார். இருந்தாலும் தமிழ் செலிபிரிட்டிகளுக்கு பென்ஸைவிட பிஎம்டபிள்யூ மேல்தான் ஒரு தனிப்பாசம். நம் ஊர் மட்டுமில்லை; பேன் இந்தியா செலிபிரிட்டிகளுக்கும்கூட அப்படித்தான்!

BMW 7 Series
BMW 7 Series
லேட்டஸ்ட்டாக ‘விக்ரம்’, ‘லியோ’ படங்களின் இயக்குநர் லாேகேஷ் கனகராஜ், ஒரு பிஎம்டபிள்யூ சொகுசு கார் ஒன்றை அதன் அடீலர் மேனேஜரிடம் இருந்து வாங்குவது போன்ற ஒரு படம் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ‘விக்ரம்’ வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன், லோகேஷுக்கு 75 லட்ச ரூபாய் மதிப்பில் லெக்ஸஸ் ES300 எனும் சொகுசுக் காரைப் பரிசாக வழங்கியிருந்தார். இதில்தான் நமது விகடன் விருது நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தார். ஆனால், நமது மாணவப் பத்திரிகையாளர் திட்ட நிகழ்ச்சிக்கு நமது அலுவலகம் வந்திருந்த லோகேஷ், கறுப்பு நிற ரேஞ்ச்ரோவர் சொகுசு காரில் வந்து இறங்கினார். அதைத் தொடர்ந்து இப்போது லேட்டஸ்ட்டாக பிஎம்டபிள்யூ 7 சீரிஸ் காரைத் தன் சொந்தச் செலவில் வாங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 

2017–ல் ‘மாநகரம்’ படத்தின் மூலம் அறிமுகமான லோகேஷ், இந்தக் குறைந்த காலத்தில் மிகப் பெரிய ஸ்டார் இயக்குநர் ஆகியிருக்கிறார். மாஸான இயக்குநருக்கு க்ளாஸான இந்த கார், உண்மையிலேயே டாப்பாகத்தான் இருக்கும். காரணம், இந்த பிஎம்டபிள்யூயின் பிராண்ட் வேல்யூவும் சொகுசும் அப்படி! இந்த காரின் எக்ஸ் ஷோரூம் விலையே சுமார் 1.70 கோடி வருகிறது. ஆன்ரோடு விலை 2 கோடியைத் தொட்டுவிடும். ஓகே லோக்கி; நீங்க ‘லியோ’ ரிலீஸைப் பாருங்க; நாங்க உங்க பிஎம்டபிள்யூவைக் கொஞ்சம் என்னானு பார்க்கிறோம்! 

Rear Massage Seats
மொத்தம் பிஎம்டபிள்யூவில் 2, 3, 5, 6, 7 என நம்பர்களில் சீரிஸ் கார்கள் உண்டு. இதில் டாப் மாடல்தான்... அதாவது விலை அதிகமான சொகுசு மாடல்தான் இந்த 7–ம் நம்பர். இதைத்தான் 7 சீரிஸ் என்கிறார்கள். இதுதான் பெரிய செலிபிரிட்டிகளின் தேர்வாக இருக்கிறது. இது 740i M Sport எனும் சிங்கிள் வேரியன்ட்டில் கிடைக்கிறது.

லேட்டஸ்ட்டாக இந்த 2023 ஜனவரியில் ஃபேஸ்லிஃப்ட் ஆன இந்த மாடல், பிஎம்டபிள்யூவின் அந்த கிட்னி கிரில்லில் மாற்றம் அடைந்திருக்கும். இதை டிஜிட்டலைஸ்டு கிட்னி கிரில் என்பார்கள். 'Iconic Glow Illuminated’ என்கிறது BMW. பிஎம்டபிள்யூவின் i7 மாடல் எலெக்ட்ரிக் காரில் இந்த கிட்னி கிரில் பிரசித்தம். இதைப் பார்க்கும்போதே ஒரு அக்ரஸிவ்னஸ் தெரியும். இந்த காரின் எல்இடி ஹெட்லைட்டை உற்றுப் பார்த்தால், ஏதோ ஒரு காட்டு விலங்கின் கண்களைப்போல் சும்மா டெரராக இருக்கும். Swarovski Crystal Headlight என்று இதற்குப் பெயர். 

பெரிய அரசியல் செலிபிரிட்டிகளின் கார்களை லிமோசின் என்பார்கள். இதுவும் ஒரு லிமோசின்தான். இதில் ஃப்ளஷ் டைப் டோர் ஹேண்டில்கள் இருக்கும். அதாவது, இந்த காருக்கு ஹேண்டிலே இருக்காது. கார் நிற்கும்போது மட்டும்தான் ஓப்பன் ஆகும். கார் நகர ஆரம்பித்துவிட்டால், அப்படியே ஆட்டோமேட்டிக்காக காரோடு ஒட்டிக் கொள்ளும். காற்றைக் கிழித்துக் கொண்டு போகும்போது, ஏரோ டைனமிக்கில் இந்தக் கதவுக் கைப்பிடிகள்கூடத் தொந்தரவாக இருக்கக் கூடாது என்பதற்கான தொழில்நுட்பம் இது.

செலிபிரிட்டிகளின் தேர்வாக இருப்பதால், இந்த ப்ளாட்ஃபார்ம், அதாங்க கட்டுமானம் வேற லெவலில் இருக்கும். முழுக்க ஹை ஸ்ட்ரென்த் ஸ்டீலில், CLAR எனும் ப்ளாட்ஃபார்மில் இது ரெடியாகிறது. ஏற்கெனவே இந்த காரில் 19 இன்ச் வீல்கள்தான் இருந்தன; ‘இந்தா புடிங்க செலிபிரிட்டீஸ்’ என்று இப்போது 20 இன்ச் வீல்களில் இந்த காரை ரெடி செய்திருக்கிறது பிஎம்டபிள்யூ. இப்போ பார்ப்பதற்கு ஆலப்புழா படகுபோல் அத்தனை நீளம் போங்கள்! இதன் பின் பக்க படுக்கைவச டெயில்லைட்கள் கூட அத்தனை வெளிச்சமாக இருக்கும்!

Kidney Grille
பிஎம்டபிள்யூவில் iX, i4 என்று சில கார்கள் இருக்கின்றன. அதை இன்ஸ்பயர் செய்து இதன் உள்ளே இதன் டச் ஸ்க்ரீன், ஒரு மாதிரி அலையடிப்பதுபோல் Curve டிசைனில் இருப்பது பார்க்கவே பரவசமாக இருக்கும். 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும், 14.9 இன்ச் டச் ஸ்க்ரீனும் சேர்ந்தது இந்த டிஸ்ப்ளே. சும்மா பெரிய டிவி போல் இருக்கும். 

இதன் பின் பக்கம் அந்த சினிமா ஸ்க்ரீனைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். ஒருவேளை இந்த ஃப்யூச்சருக்காகத்தான் லோகேஷ் இதை வாங்கியிருப்பாரோ! இதன் ரியர் சீட்டில் 8K சினிமா ஸ்க்ரீன் ஒன்றை ரூஃபில் மவுன்ட் செய்திருப்பார்கள். இதை அப்படியே இறக்கினால், அட 31.3 இன்ச்சில் பெரிய டிவி போல் இருக்கும். அமேஸான் ஃபயர் டிவி பில்ட்–இன் தொழில்நுட்பத்துடன் இது இணைக்கப்பட்டிருக்கும். அநேகமாக லோகி, இதில்தான் ‘லியோ’வின் ஃபர்ஸ்ட் லுக் காப்பி பார்த்துக்கிட்டே வருவாரோ?

31.3 Inch Cinema Screen

அட, அதைவிட இந்த காரின் சீட்களில் வென்டிலேட்டட் ஆப்ஷன் உண்டு. வெயில் நேரத்தில் ஜில்லுனும், குளிர் நேரங்களில் கதகதப்பாகவும் இந்த சீட்கள் மாறிக் கொள்ளும். அட, அதைவிடப் பின் பக்கத்தில் மசாஜரை ஆன் செய்து கொண்டால், குளுகுளுனு மசாஜ் ஆகிக் கொண்டே டிவி பார்த்துக் கொண்டே பயணிக்கலாம். காலை நீட்டிக் கொண்டே செலிபிரிட்டிகள் வர வேண்டும் என்பதற்காக, ‘லாங் வீல்பேஸ் மாடல்’ என்கிற ஆப்ஷனில் மட்டும் இந்த 7 சீரிஸ் வருகிறது. இதில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் இருப்பதால், வெளியே எந்த ரோட்ல போறோம்னே தெரியாது! அந்தளவு சொகுசு! வேண்டுமென்றால், இந்த சஸ்பென்ஷனை நாம் காருக்குள்ளே இருந்தே மேனுவலாக அட்ஜஸ்ட்டும் செய்து கொள்ளலாம். 

மசாஜ் மற்றும் வென்டிலேட்டட் சீட்களுடன் நல்ல சொகுசு பஸ்ஸில் வருவது போல் பயணிக்கலாம்!
ஒரு முக்கியமான விஷயம் – இதில் Integral Active Steering என்றொரு தொழில்நுட்பம் இருக்கிறது. இதை வைத்து ரியர் வீல்களையும் 3.5 டிகிரி ஆங்கிளில் திருப்பிக் கொள்ளலாம். இம்பூட்டுப் பெரிய காரை ரிவர்ஸ் எடுக்கறது, யுடர்ன் அடிக்கிறதுன்னா சும்மாவா! இது சூப்பர் ஆப்ஷன்!

இன்ஜினைப் பொருத்தவரை இது டீசலில் கிடையாது பாஸ். ஒன்லி பெட்ரோல்தான். இதில் இருப்பது 2998 சிசி, 6 சிலிண்டரும், 4 வால்வுகளும் கொண்ட இன்ஜின். வண்டி ஸ்டார்ட் ஆகியிருக்கா என்பதைக் கண்டுபிடிப்பதே கஷ்டம். அந்தளவு ஸ்மூத்னெஸ். இதன் பவர் 280kW. அதாவது 380 குதிரை சக்தி. இதன் டார்க் 520Nm. பிக்அப் சும்மா கிர்ரென்று இருக்கும். வெறும் 5.4 விநாடிகளில் 100 கிமீ–யை எட்டிவிடும். இதன் டாப் ஸ்பீடு 250 கிமீ! 

BMW 7 Series

இதிலிருக்கும் 8 ஸ்பீடு ஸ்டெப்ரானிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை… அதுவும் ரோட்டரி கியர் நாப் ஸ்டைலில் இருக்கும் அதை அப்படியே D மோடுக்குத் திருகி ஓட்டினால்… இது காரை ஓட்டுவதுபோல் இருக்காது; அந்தரத்தில் மிதப்பது போல்தான் இருக்கும். 

எது எப்படியோ, இப்படி செலிபிரிட்டிகள் ஏதாவது கார் வாங்கும்போது அந்த காரும் செலிபிரிட்டியாகி விடுகிறது. 


from ஆட்டோமொபைல் https://ift.tt/pfKJ3RC

Post a Comment

0 Comments

o