அட்சய திருதியை அன்று நகை வாங்கப் படை எடுப்பார்களே... அப்படி ஆடிப்பெருக்கு நாளன்று, மதுரையில் ராயல் என்ஃபீல்டு ஷோரூமுக்குப் படை எடுக்கிறார்கள். ஒரே நாளில் ஆடிப்பெருக்கு அன்று மதுரையில் மட்டும் 151 என்ஃபீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இப்படி தமிழகம் முழுவதும் 1500 ராயல் என்ஃபீல்டு பைக்குகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது.

நன்றாக நினைவிருக்கிறது. 2022 ஆகஸ்ட் மாதம்... அதாங்க ஆடி மாசம்... இதே போன்றதொரு சம்பவம் மதுரையில் நடந்தது. நல்ல சம்பவம்தான். ஆம், மதுரையில் உள்ள ஒரு ஷோரூமில் ஆடிப்பெருக்கன்று ஒரே நாளில் 100 பைக்குகளுக்கும் மேல் டெலிவரி செய்யப்பட்டன. இப்போது இந்த ஆண்டும் அப்படி ஓர் அதிசயம். இது கொஞ்சம் அதிகம். 151 பைக்குகள் புக்கிங்.
பாரம்பரியப் பண்பாட்டு நகரம், திருவிழாக்களின் நகரம் எனப் போற்றப்படுகின்ற மதுரையில், சித்திரைத் திருவிழா மாதிரி இன்னொரு திருவிழாவும் ஃபேமஸ். அது ராயல் என்ஃபீல்டு புக்கிங் திருவிழா.
கடந்த ஒரு வாரமாக, தல்லாகுளம் பெருமாள் கோயில் மைதானத்தில் ராயல் என்ஃபீல்டு புக்கிங் திருவிழாவை அந்நிறுவத்தினர் கொண்டாட்டமாக நடத்தி, ஆடிப்பெருக்கு தினத்தன்று டூவீலர் டெலிவரி செய்யும் நிகழ்வைப் பெருவிழாவாக நடத்தி முடித்துள்ளனர்.

மக்களின் நம்பிக்கையை மதிக்கும் வகையில், ஆடிப்பெருக்கு நாளான அன்று குடும்பத்துடன் வந்திருந்த வாடிக்கையாளர்கள் மகிழும் வகையில் பைக்குகளுக்குச் சிறப்புப் பூஜைகள் செய்து, போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் மூலம் ஆலோசனைகள் தெரிவித்து பைக்குகளை வழங்கினார்கள்.
இது குறித்து மதுரை ராயல் என்ஃபீல்டின் முக்கிய டீலர் ஆதிலிங்கத்திடம் பேசினேன். "நாங்கள் 20 வருடமாக ராயல் என்ஃபீல்டு பைக்குகளை விற்பனை செய்து வருகிறோம். வாடிக்கையாளருக்குச் சிறப்பான சேவை என்பதுதான் எங்கள் தொழில் மந்திரம்.

மற்ற டூவீலர் போல வாடிக்கையாளருக்கு ஆஃபரெல்லாம் கொடுக்கமாட்டோம். காரணம், என்ஃபீல்டு அந்தளவுக்கு குவாலிட்டி. அதே நேரம் வாடிக்கையாளர் ஒவ்வொருவரும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிவிடுவார்.
1500 உறுப்பினர்களைக் கொண்ட என்ஃபீல்டு கிளப்பைச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறோம். அதன் மூலம் ரைடு ஏற்பாடு செய்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வருகிறோம்.
வழக்கமாக பைக் விற்பனை நடந்து வந்தாலும், ஆடிப்பெருக்கு போன்ற முக்கிய நாட்களில் பொருள்கள் வாங்குவது சிறப்பானது என்று நம் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். அந்த அடிப்படையில் ஆடிப்பெருக்கு நாளில் வாகனங்கள் வாங்குவதை வாடிக்கையாக்கி வருகிறார்கள். இதேபோல்தான் கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கில் 100 என்ஃபீல்டு பைக்குகள் விற்பனையானது.

இந்தாண்டு ஆடிப்பெருக்கில் பைக் வாங்க வாடிக்கையாளர்கள் கடந்த ஒரு மாதமாக புக் செய்யத் தொடங்கினார்கள். அதனால், இதை ஒரு திருவிழாபோல் நடத்தத் திட்டமிட்டோம். எங்களிடம் பைக் வாங்கும் நாளை அவர்கள் எப்போதும் நினைத்திருக்கும் வகையில் ஏற்பாடுகளைச் செய்தோம். வாடிக்கையாளர்களை மேளதாளம் முழங்க வரவேற்றோம்.
மீனாட்சியம்மன் கோயில் பட்டர்கள் மூலம் அனைத்து பைக்குகளுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தினோம். இன்று ஒரு நாளில் மொத்தம் 151 பைக்குகளை விற்பனை செய்துள்ளோம். தமிழகத்தில் இது பெரிய சாதனை. தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கப் பணியாற்றுவோம்.
மதுரை எல்லாவற்றிலும் முதலிடத்தில் இருக்கும். அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு காதலர்கள் அதிகம் உள்ள நகரத்திலும் மதுரை முதலிடம் வந்துவிட்டது!" என்றார்.

அப்போ இனிமேல் ராயல் என்ஃபீல்டு சிட்டினு மதுரைக்கு ஒரு செல்லப் பேரு வெச்சிடலாமா!
from ஆட்டோமொபைல் https://ift.tt/CcMehLF
0 Comments