காமராஜரின் செவர்லே கார் - சொந்தச் செலவில் சரிசெய்த கிருஷ்ணகிரிகாரர்! வின்டேஜ் காரில் என்ன ஸ்பெஷல்?

பெருந்தலைவர் காமராஜருக்கு ஒரு வரலாறு இருக்கிறது என்றால், அவர் பயன்படுத்திய காருக்கும் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது. அந்த செவர்லே நிறுவனத்தின் Style Line Deluxe மாடல், பெருந்தலைவரைப் போன்றே ஒரு ஆட்டிட்யூடும், கம்பீரமும் கொண்ட கார். 

கிட்டத்தட்ட 4 மீட்டருக்கு மேலே ஆலப்புழா படகுபோல் நீளமான, ஒய்யாரமான அந்தச் செவர்லே மாடல் சொகுசு கார்தான் இப்போது சென்சேஷனல் நியூஸ். (அது சரி; ‘காமராஜர் என்றாலே எளிமைதான். அவரின் முழுச் சொத்தே 4 கதர் வேட்டி – சட்டை, 350 ரூபாய் பணம்தான் இருந்தது என்பது வரலாறு. அவர் எப்படி சொகுசு கார், அதுவும் அமெரிக்க மாடல் கார் வாங்கினார்’ என்று என்னைப்போலவே உங்களுக்கும் சந்தேகம் இருந்தால், கடைசிப் பாராவைப் படிக்கவும்!) 

காமராஜர் காருடன் அஷ்வின் ராஜ் வர்மா

ஆம், நம் தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பயன்படுத்திய அந்த காரை, சுமார் ஒரு மாதத்துக்குள் புனரமைத்து (`Restoration’), புத்தம் புதுப் பொலிவில்… ஆனால் பழைமை மாறாமல் வடிவமைத்திருக்கிறார், அஷ்வின்.

கிருஷ்ணகிரியில் ‘டார்க்மேக்ஸ் ஆட்டோமேட்டிவ்’ என்கிற ஒர்க்ஷாப்பை நடத்தி வருபவர் அஷ்வின் ராஜ் வர்மா. எப்போதுமே ‘பழசுக்கு மவுசு’ அதிகம்தான். ஆனால், அந்தப் பழசை அப்படியே பழைமை மாறாமல், ட்ரெண்டாக்கித் தந்தால்… அதற்கு இன்னும் மவுசு கூடும்தானே! அதிலும் பெருந்தலைவரின் கார் எனும்போது, வேற லெவல் மவுசு இருக்கத்தானே செய்யும். காமராஜரில் இல்லத்தில், சுமார் 40 ஆண்டுகளாகத் தூசு படிந்து நின்று கொண்டிருந்த அந்த காரை, செம பளபளப்பாக… அதுவும் ஒரே மாதத்தில் ரெஸ்டோரேஷன் செய்திருக்கிறார் அஷ்வின் ராஜ். 

3 Speed Gear Box
பெருந்தலைவர் காமராஜரின் 125–வது பிறந்த நாளுக்கு இந்த காரைக் காட்சிப் பொருளாக வைக்க, அவசர அவசரமாக விருதுநகர் கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்தவரிடம் பேசினேன்.

‘‘ஒரு தடவை காமராஜர் அரங்கத்துக்குப் போயிருந்தேன். அப்போது பெருந்தலைவர் பயன்படுத்திய செவர்லே மாடல் கார், மிகவும் மோசமான நிலையில் இருப்பதைப் பார்த்தேன். அடிப்படையில் என் குடும்பம் ஒரு காங்கிரஸ் பின்னணி கொண்டது. என் தாத்தா முனுசாமி, காமராஜர் ஆட்சிக் காலத்தில் கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ-வாக இருந்தவர். எனக்கும் காமராஜரைப் பிடிக்கும். பெருந்தலைவரைப் பிடிக்காதவர்கள் யார் இருக்கப் போகிறார்கள்! அவர் காரை அந்த நிலையில் பார்த்ததும் ஒரு மாதிரியாக இருந்தது. எப்படியாவது இதை ரெஸ்ட்டோரேஷன் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சாரிடம் என் ஆசையைத் தெரிவித்தேன். ‘பெருந்தலைவரின் பிறந்த நாளுக்குள் இதைச் செய்ய முடியுமா’ என்று கேட்டார்கள். இதை நான் ஒரு டார்கெட்டாகப் பார்க்கவில்லை. என் வாழ்க்கையில் கிடைக்கக் கூடிய பாக்கியமாக நினைத்து ஓகே சொன்னேன். ஜூன் மாதம் முதல் தேதியில்தான் அந்தக் காரை கிருஷ்ணகிரியில் என்னுடைய ஒர்க்ஷாப்புக்குக் கொண்டு போய், வேலையைத் தொடங்கினேன். இதோ இப்போது புத்தம் புதுப் பொலிவில் ஜொலிஜொலிக்கும் அந்த செர்வலே மாடல் காரின் பக்கத்தில் பொதுமக்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதைவிடப் பெருமை வேறென்ன வேண்டும்!’’ எனும் அஷ்வின் ராஜ், மோட்டார் விகடன் வாசகர் மற்றும் பங்களிப்பாளர் என்பது நமக்கும் பெருமை. 

Restoration

அமெரிக்க நிறுவனமான செவர்லேவின் இந்த Style Line Deluxe கார், 1952–ம் ஆண்டு மாடல் கார். ஜெனரல் மோட்டார்ஸ் கம்பெனிதான் இதன் தயாரிப்பாளர். இதைச் செல்லமாக செவி என்றழைப்பார்கள். 4 டோர் செடான் காரான இதில் இருப்பது, 3,547 சிசி, 6 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின். இதன் பவர் 63bhp. அமெரிக்க மாடலாக இருந்தாலும், இது நம் இந்தியாவுக்கு ஏற்ற வலது பக்க ஸ்டீயரிங் கொண்ட மாடல். இதில் 3 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருக்கிறது. இதன் கட்டுமானம் கிண்ணென்று இருக்கும். 

இதன் சஸ்பென்ஷன் புஷ்கள் அனைத்தும் மெட்டல் பாகங்கள். பல கார்களில் ரப்பர் பாகங்கள்தான் இருக்கும். அதனால், கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் ஆகியும் அப்படியே இருக்கிறதாம். 

அமெரிக்காவில் இந்த செக்மென்ட் காரை – ஃபுல் சைஸ் கார் என்றழைப்பார்கள். இதுவே லண்டனில் எக்ஸிக்யூட்டிவ் கார் எனவும், ஆஸ்திரேலிய நாட்டில் Large Car எனவும், ஐரோப்பாவில் E-Segment எனவும் வெரைட்டியாக அழைக்கிறார்கள். 
செவர்லே Style Line Deluxe
செவர்லே Style Line Deluxe

பொதுவாக, கார்களைப் புனரமைக்கும்போது, அதன் பழைமை மாறாமல், பாரம்பரியம் மாறாமல் செய்வதில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது. பம்பர், ஹெட்லைட்கள், பின் பக்க டெயில் லைட்கள், காரின் லோகோ போன்றவற்றில் மாற்றம் செய்தால், அதன் பாரம்பரியமே கெட்டுவிடும். அதை உணர்ந்து மிகச் சரியாக காரை ரெஸ்டரோஷன் செய்திருக்கிறார் அஷ்வின். முக்கியமாக சில மிஸ் ஆன ஸ்பேர்களைக் கஷ்டப்பட்டு தேடி அலைந்து வாங்கிப் பொருத்தி, காரின் விண்ட்ஷீல்டைக்கூட ஸ்பெஷல் ஆர்டர் செய்து அப்படியே வாங்கிச் சேர்த்திருக்கிறார். ஓல்டு மாடல் காரில் இருந்த டயர்களை மாட்டி, துருப்பிடித்த பாகங்களை முடிந்தவரை மாற்றாமல் அதைச் சரி செய்து அப்படியே பொருத்தி, ஓடாமல் இருந்த இன்ஜினில் சில ஒரிஜினல் ஸ்பேர் பார்ட்ஸ்களைச் சேர்த்து, அதை ஓடவும் வைத்திருக்கிறார் அஷ்வின்.

காங்கிரஸ் மீதும், காமராஜர் மீதும், கார்கள் மீதும் அதீதப் பற்றுக் கொண்ட அஷ்வின் ராஜ் வர்மா, இதை ஒரு வேலையாக நினைக்கவே இல்லை. காரணம், இந்த ரெஸ்ட்டோரேஷன் வேலைக்காக அவர் பணம் எதுவும் வாங்கவில்லை. முழுக்க முழுக்க அஷ்வின், காமராஜர் மேலிருந்த பற்றில் தனது சொந்தச் செலவிலேயே இதைச் செய்து முடித்திருக்கிறார். இதைச் செய்து முடிப்பதற்கு அவருக்குச் சில பல லட்சங்கள் ஆகியிருக்கலாம். ‘‘எவ்வளவு அஷ்வின் ஆச்சு!’’ என்றேன். ‘‘கர்மவீரருக்கு எப்படிங்க விலை பேச முடியும். அதெல்லாம் எதுக்கு! நானே இதைப் பண்ணும்போது, இங்கதான பெருந்தலைவர் உட்கார்ந்திருப்பாரு… இந்த ஸ்டீயரிங்கைத் தொட்டிருப்பாருல்ல என்று புல்லரிச்சுப் போய் பண்ணேன்… நீங்க வேற!’’ என்கிறார் அஷ்வின். 

பெருந்தலைவரின் தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துகள் அஷ்வின் ராஜ் வர்மா.

டி.வி.சுந்தரம் ஐயங்கார்

காமராஜர் எப்படி கார் வாங்கினார்?

பொதுவாக, பெருந்தலைவர் காமராஜருக்கு சைக்கிள் அல்லது நடைப்பயணம்தான் பிடிக்குமாம். அரசாங்க வாகனங்களிலேயே யோசித்துத்தான் பயணிப்பாராம் காமராஜர். இருந்தாலும், முதலமைச்சரின் பாதுகாப்பு கருதி அவருக்கு டிவிஎஸ் நிறுவனத்தின் அப்போதைய தலைவர் டி.வி.சுந்தரம் ஐயங்கார் கொடுத்த அன்புப் பரிசுதான் அந்த செவர்லே 1952 மாடல் சொகுசு கார். 


from ? ஆட்டோமொபைல் https://ift.tt/LhescKb

Post a Comment

0 Comments

o