Video: ஆட்டோவாகவும் ஓட்டிக்கலாம்; ஸ்கூட்டராகவும் ஓட்டிக்கலாம்; ஹீரோவின் இன்ட்ரஸ்ட்டிங்கான e-ஆட்டோ!

இப்போது வதவதவென எலெக்ட்ரிக் ஸ்டார்ட்அப்கள் பெருகிவிட்டன. எங்கு பார்த்தாலும் எலெக்ட்ரிக் ஸ்டார்ட்அப்கள்தான்; வாகனங்கள்தான்! லேட்டஸ்ட்டாக, ஒரு எலெக்ட்ரிக் ஸ்டார்ட் அப்பின் கண்டுபிடிப்பு ஒன்று ‘வாவ்’ என்று எல்லோரையும் கமென்ட் போட வைத்திருக்கிறது. 

பார்ப்பதற்கே ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கிறது அந்த வாகனம். அது ஒரு ஆட்டோ. இந்த மில்லினியலுக்கு ஏற்றமாதிரி மாடர்னாக இருந்தது அது. திடீரென அந்த ஆட்டோவில் இருந்து ஒரு பகுதியைத் தனியாகக் கழற்றி, ஒரு டூவீலராக வெளியே இழுக்கிறார்கள். அட ஆமாங்க! இப்படி ஒரு முயற்சியை இதுவரை யாரும் செய்ததில்லை என்று நினைக்கிறேன்.

இந்த வாகனத்துக்குப் பெயர் Surge S32. இதை உருவாக்கி இருப்பது புது ஸ்டார்ட் அப் கம்பெனியெல்லாம் இல்லை. டூவீலர் மார்க்கெட்டின் ஹீரோவான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம். ஆம், Hero World 2024 என்றொரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. அந்த ஈவென்ட்டில்தான் இப்படிப்பட்ட ஒரு வாகனத்தைக் காட்சிப்படுத்தி இருக்கிறது ஹீரோ மோட்டோ கார்ப்.

‘ஹீரோ’னு சொல்றாங்க; H லோகோவைக் காணுமே’ என்று தேடிப் பார்த்தால், Surge Automobiles என்ற நிறுவனத்துடன் சேர்ந்து இதைக் காட்சிப்படுத்தி இருக்கிறது ஹீரோ. அந்த 3 முக்கோண லோகோ சர்ஜ் ஆட்டோமொபைலினுடையது. ஏற்கெனவே சர்ஜ் நிறுவனம், 3 வீலர்கள் செய்வதில் எக்ஸ்பெர்ட். இதை நிர்வகிப்பது ஹீரோ மோட்டோ கார்ப். இந்த 2 – 3 வீலர் ஐடியா இப்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது. 

இதை `World's First Adapting Vehicle’ என்று அடைமொழியுடன் அழைக்கிறார்கள். அதாவது, ஒரு ஹைபிரிட் கான்செப்ட் ஐடியாவில் இந்த வாகனம் ரெடியாகி இருக்கிறது. இதை ஸ்கூட்டராகவும் பயன்படுத்திக் கொள்ளலாம்; 3 வீலராகவும் ஓட்டிக் கொள்ளலாம். இந்த புராஜெக்ட்டுக்காக ஹீரோ மோட்டோ கார்ப் 4 ஆண்டுகளாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறதாம். இப்போதுதான் கான்செப்ட் ஆக வந்திருக்கிறது. இதற்கு Surge என்று ரீ- நேம் செய்திருக்கிறது ஹீரோ. 

Surge electric 3 wheeler

3 வீலரில் இருந்து ஸ்கூட்டராக வெளியே எடுக்க 3 நிமிடங்கள் ஆகும். ஆட்டோவின் உள்ளே… அதாவது ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் இருக்கும் சிவப்பு நிற பட்டனை அழுத்தினால் போதும். சட்டென ஆட்டோவின் முன் பக்க டூம் மேலேழும்பி, உள்ளே இருந்து ஒரு ஸ்கூட்டர் வெளியே வருகிறது. வேண்டாமென்றால், ஸ்கூட்டரை உள்ளே பார்க் செய்து 3வீலர் கமர்ஷியல் வாகனமாகவும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒரு ப்ளக் இந்த இரண்டு வாகனங்களையும் இன்டர்ஃபேஸ் செய்து இணைக்கும் பாலமாக இருக்கிறது. இரண்டுமே எலெக்ட்ரிக் வாகனம்தான். ஸ்கூட்டருக்கு ஒரு பவர்; ஆட்டோவுக்கு ஒரு பவர். 

3kW பவர் தரும் 3.5kWh சக்தி கொண்ட பேட்டரி பேக்தான் ஆட்டோவை இயக்கும். இது 60 கிமீ டாப் ஸ்பீடு வரை போகும். இதுவே 3வீலர் என்றால், 10kW பவர் தரும் 11kWh சக்தி கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக் வைத்திருக்கிறார்கள். இதன் டாப் ஸ்பீடு 50 கிமீ. இந்த ஆட்டோ, அப்படியே ஒரு மினி ட்ரக் போல… குட்டி யானை இருக்கிறதே அந்த ஸ்டைலில் கமர்ஷியல் வெஹிக்கிளாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதில் 500 கிலோ லோடு அடித்துக் கொள்ளலாம். 4 வேரியன்ட்களில் இதை விற்பனைக்குக் கொண்டு வருமாம் ஹீரோ. இதுவே ட்ரக் இல்லாமல் மக்களை ஏற்றும் ஆட்டோ ஸ்டைலிலும் இது கிடைக்குமாம். 

இந்த இ–ஆட்டோ–ஸ்கூட்டரோட விலை, தயாரிப்பு வெர்ஷனா எப்போ வருதுனு யாருக்காச்சும் தெரிஞ்சா சொல்லுங்க!


from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/sa0Um3g

Post a Comment

0 Comments

o