`TVS Scooty to Jeep' - இன்ஜினீயர் இல்லை; மெக்கானிசம் தெரியாது; ஸ்கூட்டியை ஜீப்பாக்கிய தேனிக்காரர்

சின்னமனூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சின்ன ஜீப்பில் வலம்வரும் பெரியவர், தற்போது தேனி மாவட்டத்தின் வைரல் கன்டென்ட். காரணம் மால்களில் குழந்தைகள் ஓட்டும் கார்களைப் போன்ற சிறிய வாகனத்தில் செம ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார் மனிதர். சின்னதாக இருந்தாலும், அந்த ஜீப்பை அவரே நேர்த்தியாக வடிவமைத்திருப்பது இன்னும் இன்ட்ரஸ்ட்டிங்காக இருக்கிறது. சின்னமனூர் பகுதிகளில் சின்ன ஜீப், பின்பகுதியில் மண்வெட்டி, களை கொத்து, அரிவாள் உள்ளிட்ட பொருள்களை வைத்து வியாபாரம் செய்து வரும் பெரியவரை வாகன ஓட்டிகளும், பாதசாரிகளும் ஆச்சரியமாகப் பார்க்கின்றனர்.

காரணம், அவர் மாடிஃபிகேஷன் செய்திருக்கும் வாகனம். ஒரு சாதாரண ஸ்கூட்டி பெப் ப்ளஸ் ஸ்கூட்டரை, குட்டியாக ஒரு ஜீப் மாதிரி வடிவமைத்து அதில் பொருட்களை ஏற்றிச் செல்கிறார். பல லட்சம் செலவு செய்து மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படிக்கும் இளைஞர்களால் கூட இப்படியான வடிவமைப்பைச் செய்துவிட முடியுமா எனத் தெரியவில்லை. ஆனால் பள்ளிக் கூடமே செல்லாத இந்த பெரியவர் தன்னுடைய சொந்த முயற்சியால் சின்ன ஜீப் உருவாக்கியுள்ளதைத் தேனி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

ஈஸ்வரன் தயாரித்த ஜீப்

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தைச் சேர்ந்த ஈஸ்வரனை நேரில் சந்திக்கச் சென்றோம். சின்னமனூரில் இருந்து மேகமலை ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல சின்னமனூரில் உள்ள கடைகளில் மண்வெட்டிகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த சின்ன ஜீப் பெரியவரைப் பார்த்துவிட்டோம்.

‘‘உங்களைத்தான் பார்க்க காமாட்சிபுரம் வந்தோம்’’ எனக் கூறியவுடன் ஜீப்பை ஓரம்கட்டினார். அவர் என்ன விசயம் எனக் கேட்கும் முன்னே, தேடி வந்ததன் காரணத்தை கூறியவுடன் கலகலப்பாக நம்மிடம் பேசத் தொடங்கினார். ‘‘எங்க அப்பன், ஆத்தா கூலிக்கு வேல பாத்தாக. மூணு வேல சோத்துக்கே வழியில்ல. அதனால நான் பள்ளிக்கூடத்துப் பக்கமே போல. பட்டப்படிப்பும் முடிக்கல. சின்னப்புள்ளைல குவாரில கல்லொடைக்கப் போயிட்டேன். கொஞ்சம் வளந்து எளந்தாரி பயலா ஆனதும் மம்பட்டி, அருவா செய்ற பட்டறைல சேந்தேன். அந்த அனுவத்துல எங்கூர்ல பட்டற போட்டேன். முப்பது வருசத்துக்கு மேல இந்த தொழில இருக்கேன். இப்போ எனக்கு 60 வயசுக்கு மேல ஆச்சு!

மேகமலை ரோட்டில் பயணித்த ஈஸ்வரன்

என் பட்டறையில செய்ற பொருள மொத்த வெலைக்குக் கொடுத்தா பெருசா லாபம் இல்ல. அதான் நானே சுத்துப்பட்டுல ஏவாரத்துக்கு எடுத்துட்டு போயி வித்துட்டு வருவேன். பொருள எடுத்துட்டு போயி கொடுக்க முடியல. வாடக வண்டிய புடிச்சா ரொம்ப காசாகுது. அதனால பத்து வருசத்து முன்னாடி ஒரு ஆட்டோ மாறி வண்டி செய்தேன். அது சரியா அமையல. அதுக்கப்பறம் அடுத்தடுத்து 3 வண்டிகள செஞ்சு பாத்தேன்!

இப்போ கடைசியா 30 நாளுக்கு முன்னாடி ஸ்கூட்டி பெப் வண்டிய ஜீப் போல மாத்தத் தொடங்குனேன். நல்லபடியா வந்துச்சு. எல்லாம் என்னோட அனுமானம்தான். வெளக்கமாத்துக் குச்சிய தான் அளக்க வச்சுக்குவேன். டேப்புகூட என்ட்ட கிடையாது. என் பட்டறைல இருக்க பொருள வச்சே செஞ்சு முடிச்சேன். இதைச் செய்யவே 40 ஆயிரமாகி போச்சு. இன்னும் தேவையான பொருளுங்க கெடைச்சா வண்டிய சோடிச்சுப்புடலாம். சரி நேரம் மங்கிப் போச்சு... எனக்கு நேரமாச்சு! எங்கூருக்கு இந்நொருனா வாங்க பேசுவோம்’’னு டாட்டா காட்டிக் கிளம்பிவிட்டார்.

ஜீப்பாக மாறியுள்ள ஸ்கூட்டி பெப்


from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/8Lyrvie

Post a Comment

0 Comments

o