‘‘அண்ணே, நீங்க கொஞ்சம் இந்தப் பக்கம் வந்துடுங்க. அங்க ஆட்டோக்காரங்க இருக்காங்க. பிரச்னை ஆகிடும்!’’ என்றார் அந்த ஓலா ஓட்டுநர். அவரும் ஓர் ஆட்டோ டிரைவர்தான். ஊரிலிருந்து வந்திருந்த என் குடும்பத்தை வீட்டுக்கு அனுப்புவதற்காக ஓலா ஆப்பில் ஓர் ஆட்டோவை புக் செய்திருந்தேன். அப்போதுதான் அந்த ஓலா ஆட்டோ ஓட்டுநர் இப்படிச் சொன்னார்.
நிஜம்தான்; ஓலா, உபர் போன்ற டிராவல் ஆப் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், சாதாரண ஆட்டோ டிரைவர்களுக்கும் ரொம்ப நாட்களாகவே புகைச்சல்! இருக்காதா பின்னே… கால் கடுக்கக் காத்திருந்து சவாரியை பிக்–அப் பண்ணப் போகும் நேரத்தில், நோகாமல் மொபைல் ஆப் மூலம் தேடி வந்து சவாரியை பிக்–அப் செய்தால் யாருக்குத்தான் கோபம் வராது?
அதேநேரம் ஓலா, உபர், ரேபிடோ போன்ற பயணங்களில், புக்கிங்கில் காட்டுவதைத் தவிர எக்ஸ்ட்ரா கேட்பது… 50 மீட்டர் தாண்டிவிட்டால் அரிபுரி காட்டுவது… புக் ஆகிக் காத்திருந்த பிறகு கேன்சல் செய்யச் சொல்வது என்று சில அட்டூழிய ஆட்டோ ஓட்டுநர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பார்த்தார்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்… ஒரு குரூப்பாக ஒன்றுசேர்ந்து ஓலா, உபர், ரேபிடோவுக்குப் போட்டியாக ஒரு டிராவல் மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கிவிட்டார்கள்.
அந்த ஆப்பின் பெயர் Tamil Nadu Meter Auto. இது வெறும் ஆட்டோ புக்கிங்குக்கு மட்டும்தான். சென்னை, திருச்சி, மதுரை, கோவை, திருநெல்வேலி போன்ற 5 மாவட்டங்களில் மீட்டர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்துதான் இந்த டிராவல் ஆப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இதன் தலைவர் சேதுராமன் என்பவர்.
இதுபோன்ற அடிபுடி ரேட்டெல்லாம் இந்த தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ ஆப்பில் கிடையாது என்கிறார்கள். இந்த ஆப்பில், முதல் 1.8 கிமீ–க்கு அடிப்படைக் கட்டணமாக ரூ.49 வசூலிக்கிறார்கள். அதன் பிறகு வரும் ஒவ்வொரு கிமீ–க்கும் பயணிகள் 16 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதைத் தாண்டி வெயிட்டிங் சார்ஜாக ஒரு நிமிடத்துக்கு 1 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். டிராஃபிக் சிக்னல்களில் நிற்பது, கடைகளில் பார்சல் வாங்கிவிட்டுக் காத்திருக்கச் சொல்வது என எல்லா வெயிட்டிங்கும் இதில் அடங்கும்.
ஆவரேஜாக, 5 கிமீ பயணத்துக்கு சாதாரண மீட்டர் ஆட்டோக்கள் சுமார் 110 ரூபாய் வசூலிப்பார்கள். இந்த ஆப்பைப் பொறுத்தவரை சர்வீஸ் சார்ஜ் மற்றும் ஜிஎஸ்டி போன்றவை சார்பாக, 9 ரூபாய் மட்டும் டிரைவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். ‘‘அது இந்த ஆப்பை ரன் செய்வதற்காக! இதைத் தாண்டி சிங்கிள் பைசா கூட எடுப்பதில்லை. மீதமுள்ள 101 ரூபாயும் ஆட்டோ ஓட்டுநருக்கே போகுமாம்
இந்த ஆப்பை உருவாக்குவதற்கான முயற்சி 2019–ல் இருந்தே தொடங்கப்பட்டு விட்டதாம். டிரைவர்கள், கஸ்டமர்கள், ஜிபிஎஸ் என்று பல சிக்கல்களைத் தீர்ப்பதற்கு 4 ஆண்டுகள் ஆகிவிட்டதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும், இந்த ஆப்பில் ஓலா, உபர் அளவுக்கு இன்னும் முழுமையடையவில்லை என்று தெரிகிறது. காரணம், வெறும் பிக்–அப் மற்றும் டிராப் லொக்கேஷன், கட்டணம் போன்றவற்றை மட்டும்தான் இந்த ஆப் அளிக்கிறது. ‘‘இன்னும் சில குறைபாடுகளைத் தீர்த்து முழுமையடைய வைக்க வேண்டும்’’ என்கிறார் சேதுராமன். ஆம், இதில் நீங்கள் புக் செய்தபிறகு, ஆட்டோக்கள் எங்கே இருக்கிறது என்பதை ட்ராக் செய்ய முடியவில்லை.
சொல்லப்போனால் கூகுள் மேப், புக்கிங் ஆப்ஷன்கள் போன்ற நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதற்காக, மாதம் சுமார் 70,000 ரூபாய் வரை இந்த தமிழ்நாடு மீட்டர் ஆட்டோ ஆப் செலவழித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், வருமானம் என்பது 50,000 ரூபாயாகத்தான் இருக்கிறதாம். இப்போது வரை ஆப் மெம்பர்கள், ஆட்டோ டிரைவர்கள், சாஃப்ட்வேர் நண்பர்கள் போன்றவர்கள் தங்கள் சொந்தப் பணத்தை எடுத்து இதற்கு உதவுகிறார்களாம்.
இப்போது வரை மொத்தம் 4,000 டிரைவர்கள் இந்த Tamil Nadu Meter Auto ஆப்பில் பதிவு செய்திருக்கிறார்களாம். சிட்டிக்குள் மொத்தம் 85,000 ஆட்டோக்களுக்கு மேல் ஓடிக் கொண்டிருக்கின்றன. மிச்ச சொச்ச ஆட்டோ டிரைவர்களெல்லாம் எப்போ ரிஜிஸ்டர் பண்ணுவீங்க?
from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/DzixLVO
0 Comments