இன்ஸ்டாவில் `BTech Panipuri Vali’ என்றொரு ஐடியில் ஒரு வீடியோ வைரலாகி ஓடிக் கொண்டிருக்கிறது. முதலில் அந்தப் பெண் ஒரு ஸ்கூட்டி டூ–வீலரில் கயிறு கட்டி தனது பானிபூரி வண்டியை இழுத்து வந்து வியாபாரம் செய்கிறார்; பிறகு ராயல் என்ஃபீல்டு புல்லட்டை ஓட்டியபடி அந்த வண்டியை டோ செய்து வருகிறார்; இப்போது அந்த இடத்தில் சிவப்பு நிற மஹிந்திரா தார் ஜீப் இருக்கிறது.
ஆம், அந்தப் பெண் பானிபூரி விற்றே தார் ஜீப் வாங்கிய தனது வளர்ச்சியைச் சொல்லும் வீடியோவாக அதைப் பதிவிட, அது இப்போது எக்ஸ் வலைதளத்திலும் வைரலாகி ஓடிக் கொண்டிருக்கிறது. காரணம், ஆனந்த் மஹிந்திரா.
மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, இதுபோன்ற சுவாரஸ்யமான மக்களின் வீடியோக்களை சோஷியல் மீடியாக்களில் வெளியிட்டு, அதற்கு ஏதாவது கமென்ட் செய்து ஆக்டிவ்வாக இருப்பது வழக்கம். அந்த வகையில் அந்தப் பெண் தார் ஜீப்பில் வந்து பானிபூரி விற்கும் வீடியோவைப் பதிவிட்டு, ‘‘ஆஃப்ரோடு வாகனங்கள் என்பது, மக்கள் செல்லாத இடங்களுக்குச் செல்ல வேண்டும்! முடியாததை முடித்துக் காட்டும். குறிப்பாக, எங்கள் நிறுவன கார்கள் மக்களின் கனவுகளை நிறைவேற்ற, அவர்களை உயர்த்த உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அதனால்தான் நான் இந்த வீடியோவை விரும்புகிறேன்!’’ என்று அவர் பதிவிட, அந்தப் பானிபூரி கேர்ள்தான் இப்போது வைரல். ஜனவரி 23–ம் தேதி ஆனந்த் மஹிந்திரா இதைப் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 6 லட்சம் வியூஸ் தெறித்தது.
அவர் பெயர் டாப்ஸி உபாத்யாய். 22 வயதே ஆன இவர், பிடெக் படித்தவர். வேலைக்கு எதுவும் போகப் பிடிக்காமல், பானிபூரி கடை ஆரம்பிக்க முடிவெடுத்தார். ஆரம்பத்தில் ஒரு ஸ்கூட்டரில் டெல்லியில் ஒரு ஏரியாவில் பானிபூரி வண்டியை இழுத்துக் கட்டிவந்து வியாபாரம் செய்து வந்தார். வியாபாரம் சூடு பிடிக்க, அப்புறம் ஒரு ராயல் என்ஃபீல்டு புல்லட்டில் வந்து பானிபூரி விற்க… பிசினஸ் நன்றாகக் கைகொடுத்தது. மேற்கு டெல்லியில் பல கிளைகளைத் திறந்து குட்டித் தொழிலதிபர் ஆகிவிட்டார். இப்போது ராயல் என்ஃபீல்டு புல்லட் 4 வீலராக… அதுவும் 4வீல் டிரைவ் மஹிந்திரா தார் ஜீப்பாக ட்ரான்ஸ்ஃபர்மேஷன் ஆகிவிட்டது.
‘ஸ்கூட்டர்… புல்லட்.. தார்’ என்று அவரின் வளர்ச்சிக்கும்… பானிபூரிகளுக்கும்… வீடியோக்களுக்கும் இப்போது லைக்ஸ் விழுந்து கொண்டிருக்கின்றன. அவரது ஸ்டாலில் பானிபூரிக்கு சைட் டிஷ்ஷாக அவர் தரும் வெல்லம் கலந்த சிவப்பு மிளகாய்ச் சட்னிக்கு டெல்லிவாலாக்கள் அடிமையாம்.
ஆனந்த் மஹிந்திராவுக்கு இப்போது மக்களும் ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள். புல்லட் ஓட்டும்போதும் அந்தப் பொண்ணு ஹெல்மெட் போடவில்லை; தார் ஓட்டும்போதும் சீட் பெல்ட் போடவில்லை; தயவுசெய்து பாதுகாப்பு விஷயங்களையும் அவருக்கும் அறிவுறுத்துங்கள் ஆனந்த் மஹிந்திரா என்று கமென்ட் செய்து வருகிறார்கள்.
முதல்ல ஸ்கூட்டர்… அப்புறம் புல்லட்… இப்போ தார்… அடுத்து பென்ஸா… பிஎம்டபிள்யூவா டாப்ஸி?
from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/8eCgzjA
0 Comments