டாடாவின் குட்டிக் குட்டிக் கார்கள்கூட இப்போது குளோபல் என்கேப்பில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிக் கொண்டிருக்கின்றன. அதே கிண்ணென்ற ப்ளாட்ஃபார்மில் எலெக்ட்ரிக் கார்களையும் கொண்டு வந்து கொண்டிருக்கிறது.

அந்த வரிசையில் டிகோர் (4 ஸ்டார்), நெக்ஸானைத் தொடர்ந்து இப்போது பஞ்ச் காரும் எலெக்ட்ரிக் மாடலில் வரவிருக்கிறது. பஞ்ச் எலெக்ட்ரிக்கை ஓட்டுவதற்கு இந்த வாரம் மோட்டார் விகடன் சார்பாக பெங்களூரு கிளம்ப இருக்கும் நிலையில், பஞ்ச் பற்றி முக்கியமான சில விஷயங்கள் பார்க்கலாம்.

அதென்ன Frunk?

இது பார்ப்பதற்கு நெக்ஸான்.இவி போலவே இருக்கிறது. ஃப்யூச்சரிஸ்ட்டிக் டிசைன் மொழியில் இதை யாருமே பிடிக்காது என்று சொல்லிவிட மாட்டார்கள். இந்த ப்ளாட்ஃபார்முக்குப் பெயர் New Gen2 Architecture. இதைச் செல்லமாக Acti.EV எனலாம். இதில் தயாராகும் முதல் காம்பேக்ட் எஸ்யூவி பஞ்ச். (கர்வ், சியரா, ஹேரியர் இவி எல்லாம் இனி இதில்தான்!)

டாடா கார்களில்… இந்த பஞ்ச்தான் Frunk (Front Trunk) என்று சொல்லக்கூடிய அம்சத்துடன் வந்திருக்கிறது. அதாவது, முன் பக்க பானெட்டில்தான் இன்ஜின் கிடையாதே! அதற்குப் பதில் இதிலும் பூட் ஸ்பேஸ் மாதிரி ஃப்ரன்ட் ஸ்பேஸ் 14 லிட்டர் இடவசதி கொடுத்திருக்கிறார்கள். இதற்குப் பெயர்தான் Frunk. பின் பக்கம் Trunk–ல் உள்ள 366 லிட்டர் இடவசதி தவிர்த்து, இதிலும் பொருட்கள் வைத்துக் கொள்ளலாம். டாடாவின் ஃபேவரைட்டான எல்இடி லைட் பார் செம ஸ்டைலாக இருக்கும். சார்ஜ் போடும்போது இதை வைத்து அடையாளம் கண்டு கொள்ளலாம். ஸ்ப்ளிட் ஹெட்லாம்ப்ஸ், புது அலாய் வீல் டிசைன் எனக் கலக்கல் எஸ்யூவியாக இருக்கிறது இந்த 3.75 மீீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி. 

Tata Punch.ev

இன்டீரியரும் வசதிகளும்!

காம்பேக்ட் எஸ்யூவியாக இருந்தாலும், இதில் ப்ரீமியமான இன்டீரியர் இருக்கப் போகிறது. இன்னும் இன்டீரியரைப் பார்க்கவில்லை. இருந்தாலும் இதில் ஙபுதிய டேஷ்போர்டு டிசைன், 10.25 இன்ச் கொண்ட ட்வின் டச் ஸ்க்ரீன் செட்அப் (இதில் டச் ஸ்க்ரீனும், இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் அப்படியே ஒன்றாக இருக்கும்), பேட்டரியின் ரீ–ஜெனரேஷன் லெவலைக் கட்டுப்படுத்த ஸ்டீயரிங் வீலில் பேடில் ஷிஃப்ட்டர்கள் என ஏகப்பட்ட வசதிகள் இருக்கும். இதில் Smart, Smart+ போன்ற அடிப்படை வேரியன்ட்களில் வசதிகளை எதிர்பார்க்க முடியாது. இதில் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்தான். 

இன்னும் இருக்கு பாஸ் வசதிகள்! குளுகுளுனு பயணிக்க வென்டிலேட்டட் சீட்கள், 360 டிகிரி கேமரா, பிளைண்ட் ஸ்பாட்களைத் தெரியப்படுத்தும் பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், வயர்லெஸ் போன் சார்ஜர், (ஆண்ட்ராய்டுக்குலாம் வயர்லெஸ் கொடுக்கமாட்டீங்களா டாடா?), சன்ரூஃப், ஏர் ப்யூரிஃபையர் என எல்லாமே உண்டு. பாதுகாப்புக்கு 6 காற்றுப்பைகள், ABS உடன் ESC, 3 பாயின்ட் சீட் பெல்ட் போன்றவை உண்டு. இன்னும் 5 ஸ்டார் ரேட்டிங் இருக்கே! இதைவிட என்ன வேணும்!

Punch.ev Chassis

பேட்டரி, ரேஞ்ச், பவர்!

டாடா பஞ்ச் 2 பேட்டரி ஆப்ஷன்களில் வரப் போகிறது. 25kWh சக்தி கொண்ட சின்ன பேட்டரி. இதை Standard Range மாடல் என்கிறார்கள். MIDC (Modified Indian Driving Cycle) படி இதற்கு 315 கிமீ சிங்கிள் சார்ஜுக்கு ரேஞ்ச் தரும் என்கிறது டாடா. இதிலேயே பெரிய பேட்டரி – இது Long Range. இதன் MIDC க்ளெய்ம்டு ரேஞ்ச் 421 கிமீ. வாவ்! இது க்ளெய்ம்டு ரேஞ்ச் என்றாலும், ரியல் டைமில் ஸ்டாண்டர்டு மாடல் சுமார் 250 கிமீ தந்தாலே செம! அதேபோல், லாங்  ரேஞ்ச் சுமார் 350 கிமீ–க்கு மேல் தருமா பார்க்கலாம்! 

சார்ஜிங்கைப் பொருத்தவரை 3.3kW வால்பாக்ஸ் சார்ஜரும், 7.2kW ஃபாஸ்ட் சார்ஜரும் தருகிறார்கள். DC ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் பஞ்ச் சப்போர்ட் செய்யும். வெறும் 56 நிமிடங்களில் 10–80% சார்ஜ் ஏறிவிடும். ஆனால், இதற்கு 50kW சார்ஜரில் சார்ஜ் போட வேண்டும். மேலும் இந்த காரில் V2L (Vehicle to Load), V2V (Vehicle to Vehicle) போன்ற வசதிகளும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.

Long Range வேரியன்ட்டில் இருப்பது 122bhp பவரும் 190Nm டார்க்கும் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார். இது ஒரு ஃப்ரன்ட் வீல் டிரைவ் கார். இதுவே ஸ்டாண்டர்டு வேரியன்ட்டின் பவர் 82bhp, டார்க் 114Nm. 0–100 கிமீ–க்கு லாங் ரேஞ்ச் மாடல் 9.5 விநாடிகள் ஆகும் என்றும், ஸ்டாண்டர்டு ரேஞ்ச் 13.5 விநாடிகள் ஆகும் என்று டாடா சொல்கிறது. டெஸ்ட் டிரைவில் இது உண்மையா தெரிந்துவிடும்! மழை நேரங்களில் இந்த பஞ்ச்சை ஓரளவு தைரியமாக ஓட்டலாம் என்று நினைக்கிறேன். காரணம், இதன் வாட்டர் வேடிங் அளவு 350மிமீ. கிரவுண்ட் கிளியரன்ஸ் 190மிமீ. ஆஃப்ரோடுக்கு சூப்பராச்சே!

Punch.ev

பஞ்ச் கார் - Smart, Smart+, Adventure, Empowered, Empowered+ என 5 ட்ரிம்களில் வருகிறது. ஸ்டாண்டர்டு ரேஞ்ச் வேரியன்ட்கள் ரூ.11 – 11.50 – 12 –  12.80 – 13.30 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலைகளில் கிடைக்கிறது. இதுவே லாங் ரேஞ்ச் என்றால், ரூ13 லட்சத்தில் இருந்து 14, 14.50 லட்சம் வரை கிடைக்கிறது. லாங் ரேஞ்ச்சில் Smart –ம் Smart+ வேரியன்ட்டும் கிடையாது. 

எம்ஜி காமெட், சிட்ரன் eC3, டியாகோ EV போன்றவற்றுக்குப் போட்டியாக வரும் பஞ்ச், எல்லா எலெக்ட்ரிக் கார்களுக்கும் பஞ்ச் கொடுக்குமா பார்க்கலாம்!



from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/TE61NQv