Ooty Ghat Road: ஓலா ஸ்கூட்டரில் வந்த புகை! இ-ஸ்கூட்டர்ல ஊட்டி ட்ரிப்பா? இந்த 5 விஷயங்களைக் கவனிங்க!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைப் பொருத்தவரை காசு இல்லாத நேரத்தில் கையும் கொடுக்கும்; திடீரென காலையும் வாரும். இப்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்றாலே கொஞ்சம் மரண பயம் வேறு காட்டிக் கொண்டிருக்கின்றன. சார்ஜ் போடும்போது எரியும் ஸ்கூட்டர்கள், வெயிலில் பார்க் செய்திருக்கும்போது எரியும் ஸ்கூட்டர்கள், சும்மா வீட்டில் நிறுத்தி இருக்கும்போது எரியும் ஸ்கூட்டர்கள், வண்டி ஓட்டிக் கொண்டிருக்கும்போது எரியும் ஸ்கூட்டர்கள் – என்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் எல்லா ரகங்களையும் நாம் பார்த்துவிட்டோம்.

இதில் கடைசி வகைதான் மிகவும் ஆபத்தானது. ‘என்ன நடக்குதுனே தெரியாமல் நாம் பாட்டுக்கு பைக்கில் போய்க் கொண்டே இருக்கும்போது ஸ்கூட்டரில் இருந்து புகை வந்தால்…’ – வண்டியோடு சேர்த்து கையும் ஓடாது; காலும் ஓடாது. ‘மரணபயத்தைக் காட்டிண்டாண்டா பரமா’ மொமென்ட்டைக் கடக்க வேண்டியிருக்கும். 

அப்படிப்பட்ட மொமென்ட்டைக் கடந்ததாக கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு பைக் ரைடர், வீடியோ ஒன்றை வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து ஊட்டிக்குப் போய்விட்டுத் திரும்பும்போது, ஓலா ஸ்கூட்டரில் இருந்து அப்படித்தான் மோட்டாரிலிருந்து புகை வந்ததைப் பதிவிட்டுக் கிலி ஏற்படுத்தி இருக்கிறார் ஒருவர். 

ஓலா

நல்லவேளையாக – அவர் ஸ்கூட்டரை ஓர் ஓரமாக நிறுத்தி ரிலாக்ஸ் செய்துவிட்டு ஓட்டியதால், மேற்கொண்டு ஏதும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்காமல் தடுக்கப்பட்டது கொஞ்சம் ஆறுதலான விஷயம். 

அதுவும் அவர் போன சாலை – இந்தியாவின் மோசமான / ஆபத்தான சாலைகளில் ஒன்றான ஊட்டி – கல்லட்டி வழிச்சாலை. கிட்டத்தட்ட 30 வகையான ஹேர்பின் பெண்டுகள்… அதுவும் இது மாதிரி இறக்கத்தைப் பார்த்ததே இல்லை எனும் அளவுக்கு டெரர் ஆன வளைவுகளைக் கொண்டது இந்தச் சாலை. அதனால்தான் இந்தச் சாலையில் லோக்கல்வாசிகளைத் தவிர வெளியூர்க்காரர்களுக்கு மசினகுடிக்குக் கீழே இறங்க அனுமதி இல்லை. கூடலூர் வழியாகத்தான் சுற்றி வர வேண்டும். ஆனால், இதுவே மசினகுடியில் இருந்து மேலே ஏற அனுமதி உண்டு. ஏறுவதும் ஒன்றும் சாதாரண விஷயம் இல்லை. ரொம்பவும் சூதானமாகத்தான் ஏற வேண்டும். காரணம், கீழே இறங்கும் லோக்கல் வண்டிகளுக்கு வழிவிடும் நோக்கில் நீங்கள் ஏதாவது ஒரு மேட்டில் பிரேக் பிடிக்கும்போது, வண்டி பின் பக்கம் கீழே இறங்க வாய்ப்புண்டு. 

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒரு விஷயம் உண்டு; ரீ–ஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம். இதை ஆங்கிலத்தில் Battery Energy Recuperation என்பார்கள். அதாவது, நீங்கள் பிரேக் பிடிக்கப் பிடிக்க அதன் ஆற்றல் பேட்டரியில் சேமிக்கப்படும். அதிலும் இன்ஜின் பிரேக்கிங் என்று ஒன்று உண்டு. நீங்கள் வண்டியின் வேகத்தைக் குறைக்க ஆக்ஸிலரேட்டரை ஒரு கட்டத்தில் திருகாமல் இருப்பீர்கள்தானே… இதற்குப் பெயர் De-Acceleration என்று அர்த்தம். இதை Engine Braking என்று சொல்வார்கள். இந்த இன்ஜின் பிரேக்கிங்கின்போதும், ஆற்றல் பேட்டரியில் சேமிக்கப்படும் என்பதால், பொதுவாக மலைச்சாலைகளில் கீழே இறங்கும்போது ரேஞ்ச் 2 முதல் 3 கிமீ–கள் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்க வாய்ப்புண்டு. ஆனால், இந்த வீடியோவில் அவர்கள் ஓலா ஸ்கூட்டரின் ரேஞ்ச், இந்தக் கல்லட்டி சாலையில் மிகவும் வேகமாகக் குறைகிறது என்கிறார்கள். இதுவும் உண்மைதான்!

Hill Driving
பொதுவாக, நீங்கள் இது போன்ற மலைச்சாலைகளில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் பயணிக்கும்போது கொஞ்சம் கவனமாகவே இருப்பது நல்லது. மலைச்சாலையில் ஏறும்போது எக்ஸ்ட்ரா பவரும் டார்க்கும் தேவைப்படும். அதனால், ஆட்டோமேட்டிக்காக ரேஞ்சும் குறைய வாய்ப்புண்டு. இ–ஸ்கூட்டர்களைப் பொருத்தவரை மலைச்சாலைகளில் எத்தனை வேகமாகப் பயணித்தாலும் பேட்டரிக்கு எதுவும் ஆபத்து இல்லை என்றாலும், மோட்டாரில்தான் விஷயமே இருக்கிறது.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் MCU (Motor Control Unit) என்பதுதான் அதன் இதயம். இதுதான் வாகனத்தின் பேட்டரிக்கும் மோட்டாருக்கும் நடுவில் பாலமாகச் செயல்படும் எலெக்ட்ரானிக் மாட்யூல். பேட்டரியில் இருந்து கிடைக்கும் DC (Direct Current)-யை, AC-யாக (Alternate Current) மாற்றி மோட்டாருக்கு அனுப்பி இயங்க வைப்பதுதான் MCU. நீங்கள் த்ராட்டில் கொடுப்பதற்கு ஏற்ப பவரை/டார்க்கைக் கூட்டவும், கட்டுப்படுத்தவும் செய்வது இந்த MCUதான். 

ரொம்பவும் ஏற்றமான சாலைகளில் பயணிக்கும்போது, நீங்கள் எக்ஸ்ட்ரா ஆக்ஸிலரேஷன் கொடுப்பீர்கள். அப்போது MCU ஓவர்டைம் பார்க்க முடியாமல் தவித்து, ரொம்பவும் டெம்பரேச்சர் எகிறிவிடும். அந்தச் சமயத்தில் புகை வர வாய்ப்புண்டு. இந்த நேரத்தில் புகையோடு அப்படியே மலைச்சாலைப் பயணத்தைத் தொடர்வது ஆபத்து. மோட்டார் மட்டுமில்லாமல், பிரேக்ஸும் இந்த நேரத்தில் சூடாகியிருக்கும். அதனால் பிரேக் பிடிக்காமல் போகும் ஆபத்தும் உண்டு.  இதுபோன்ற நேரங்களில் சட்டென வாகனத்தை நிறுத்தி, ரிலாக்ஸ்டாக ஒரு டீயோ… டிபனோ சாப்பிட்டுவிட்டுப் பயணத்தைத்  தொடர்வதுதான் பெஸ்ட். 

Hill driving

மலைச்சாலைகளில் பயணிக்கும்போது இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

  1. பைக்கோ காரோ… பிரேக்கைப் பிடித்துக் கொண்டே சாலையில் இறங்கக் கூடாது. பிரேக் டிரம்/டிஸ்க் செம சூடாக வாய்ப்புண்டு. இதனால் பிரேக் பிடிக்கும் தன்மை போகும். ரிலாக்ஸ் செய்துவிட்டுக் கொஞ்ச நேரம் கழித்துப் பயணத்தைத் தொடருங்கள். 

  2. சில பேர் க்ளட்ச்சையும் பிடித்துக் கொண்டே இறங்குவார்கள். இதுவும் ரொம்பத் தப்பு. 

  3. மலைச்சாலைகளில் கீழே இறங்கும்போது, 2–வது கியருக்கு மேலே இறங்கக் கூடாது. 3–வது கியருக்கு மேலே போகும்போது, வண்டி பாய்வதுபோல் ஒரு ஃபீலிங் இருக்கும். நமக்குக் கன்ட்ரோல் கிடைக்காது. 

  4. எலெக்ட்ரிக் வாகனங்களில் போகும்போது, அதிக த்ராட்டில் கொடுக்காதீர்கள். ஸ்போர்ட் மோடு தவிர்த்துவிட்டு, சாதாரண எக்கோ மோடில் போவது பெஸ்ட்.

  5. சரிவுகளில் இறங்கும்போது சரியான கியரிலேயே இறங்குங்கள். முக்கியமாக பெட்ரோல் சேகரிக்கிறேன் பேர்வழி என்று நியூட்ரலில் இறங்கவே கூடாது. அதைவிட இன்ஜினை ஆஃப் செய்துவிட்டு இறங்கவே இறங்காதீர்கள். இதுபோன்ற நேரங்களில் பிரேக்ஸ் 40%தான் வேலை செய்யும். 



from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/HRZ5e4v

Post a Comment

0 Comments

o