Hyundai Nexo: `EV -ஐ விட செம' ஹைட்ரஜன் கார்; 666 கி.மீ ஓடும்; இந்தியாவுக்கு வருமா?

இந்தியாவில் ஏதாவது நிகழ்ச்சி என்றால், கார் நிறுவனங்கள் வெளிநாடுகளில் ஓடிக் கொண்டிருக்கும் தங்கள் கார் மாடல்களை இங்கே ஷோகேஸ் செய்து பரபரப்பாகி விடுவார்கள்.

டொயோட்டா என்றால், தனது மிராய் காரை ஷோகேஷ் செய்து பேசுபொருளாகி விடும். லேட்டஸ்ட்டாக சென்னையில் நடந்து கொண்டிருக்கும் TN GIM (Tamil Nadu Global Investors Meet) மாநாட்டில் ஹூண்டாய் நிறுவனம், காஞ்சிபுரத்தில் ICE கார்கள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் / பேட்டரி தயாரிக்க தமிழ்நாட்டு அரசுடன் சுமார் 6,180 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்யப் போவதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 

எலெக்ட்ரிக் மட்டுமில்லை; சென்னை ஐஐடியுடன் இணைந்து ஹைட்ரஜன் எரிபொருள் புத்தாக்க மையத்துக்கும் (Hydrogen Resource Centre) ஹூண்டாய் அடித்தளம் இட்டுள்ளது. அதனாலோ என்னவோ, ஹூண்டாய் தனது ஸ்டாலில் நெக்ஸோ எனும் மாஸான ஒரு காரைக் காட்சிப்படுத்தி இருந்தது. நெக்ஸோ ஒரு FCEV (Fuel Cell Electric Vehicle), அதாவது ஹைட்ரஜன் ஃப்யூல் செல் கார் என்பதுதான் ஸ்பெஷல். 

Nexo FCEV

போன ஆண்டு நொய்டாவில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலேயே ஹூண்டாய் இந்த நெக்ஸோவைக் காட்சிப்படுத்தி இருந்தது. இப்போது சென்னையிலும் நெக்ஸோவை வைரலாக்கி விட்டிருக்கிறது ஹூண்டாய். ‘நீங்க எம்புட்டு வேணாலும் இன்வெஸ்ட் பண்ணுங்கப்பா… இது என்ன கார்னு பார்ப்போம்’ என்று நெக்ஸோ பக்கத்தில் பலர் செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. அவர்களுக்காக நெக்ஸோ பற்றி ஒரு ஷார்ட் நியூஸ்!

ஹூண்டாயின் ஃப்யூச்சரிஸ்ட்டிக் டிசைன் மொழியின்படி தயாரிக்கப்பட்டிருக்கும் ஒரு க்ராஸ்ஓவர் கார் இந்த நெக்ஸோ. இதன் நீளம் 4,760 மிமீ; அகலம் 1,860 மிமீ; உயரம் 1,630 மிமீ. இதன் வீல்பேஸ் 2,790 மிமீ. அதாவது, இது ஒரு மிட்சைஸ் எஸ்யூவி செக்மென்ட்டில்… பொசிஷன் செய்யப்படலாம் என்று நினைத்திருந்தால்… இல்லை; இது ரேஞ்ச்ரோவர் இவோக், ஆடி Q3, பிஎம்டபிள்யூ X3, மெர்சிடீஸ் பென்ஸ் GLA, டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற பெரிய ப்ரீமியம் எஸ்யூவிகளுடன் போட்டி போடப் போகிறது. ஆம் - லண்டன், அமெரிக்கா, ஐரோப்பா, கொரியா போன்ற நாடுகளில் இதன் விலை சுமார் 65,000 டாலர்கள். இந்தியாவுக்கு இது வந்தால், இதன் விலை அநேகமாக 65 லட்சத்துக்கு மேல்தான் இருக்கும். 

ஹைட்ரஜன் கார்கள் எப்படிச் செயல்படுகின்றன?

எலெக்ட்ரிக்குக்குப் பிறகு ஹைட்ரஜன் கார்கள்தான் அதிகம் பிரபலமாகலாம். எலெக்ட்ரிக் கார்களில் எக்ஸாஸ்ட் புகையே… அதாவது டெயில்பைப்பே (சைலன்ஸர்) இருக்காது என்றால், ஹைட்ரஜன் கார்களைப் பொருத்தவரை எக்ஸாஸ்ட் இருக்கும். ஆனால், இதில் தண்ணீர் கலந்த புகைதான் வெளியே வரும் என்பதால், சுவாசப் பிரச்னை, மாசுப் பிரச்னை ஏற்படாது என்பதுதான் இதன் பெரிய பலம். 

Hydrogen Car Technology

ஹைட்ரஜன் கார்களைக் கிட்டத்தட்ட எலெக்ட்ரிக் கார் என்றே சொல்லலாம். அதனால்தான் இதன் பெயரே FCEV. ICE (Internal Combustion Engine) கார்களில் பெட்ரோல்/டீசல் என்பது எப்படி முக்கியமான எரிபொருளோ… அதேபோல், இந்தக் கார்களில் ஹைட்ரஜன் வாயுதான் (H2) பிரதான எரிபொளாக இருக்கும். இதை ரொம்பவும் டெக்னிக்கலாக இல்லாமல், ரொம்ப சிம்பிளாக 5 ஸ்டெப்களில் சொல்லலாம். 

1. நெக்ஸோ போன்ற கார்களில் இந்த ஹைட்ரஜனை நிரப்புவதற்கென்றே 3 டேங்க்குகள் இருக்கும். 

2. இந்த ஹைட்ரஜன் எரிபொருள், Fuel Cell Stack எனும் செல் அடுக்குகளுக்கு சப்ளை செய்யப்படும். 

Heated Steering

3. பின்பு ஒரு பைப் வழியாக ஏர்ஃப்ளோ இந்த செல் அடுக்குகளுக்குப் போகும். அப்போது காற்றும் ஹைட்ரஜனும் ரியாக்ட் ஆகி, மின்சாரமும் தண்ணீரும் இங்கேதான் உருவாக்கப்படுகிறது. 

4. இங்கே உருவாக்கப்படும் மின்சாரம், காரில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டாருக்குச் சப்ளை செய்யப்படும். 

5. மூன்றாவது பாயின்ட்டில் சொன்னபடி உருவாகும் தண்ணீர்தான், காரில் உள்ள டெயில்பைப் – அதாவது சைலன்ஸர் வழியாக H2Oவாக, அதாவது தண்ணீராக வெளியேறும். இந்த ஹைட்ரஜன் நீர் சுத்தமாகவும், சுவாசப் பிரச்னைகளை ஏற்படுத்தாமலும், காற்றும் மாசுபடாமலும் இருக்கும். மின்சாரம் மூலம் உருவாவதால், இதை Zero Emission என்றும் சொல்லலாம். 

எலெக்ட்ரிக் கார்கள்போலவே இந்த நெக்ஸோ காரில் Recuperative Braking சிஸ்டம் இருக்கிறது. அதாவது, நீங்கள் காரை பிரேக் பிடிக்கும்போதும், இன்ஜின் பிரேக்கிங்கின்போதும் இது பேட்டரியை சார்ஜ் ஏற்றி, SOC எனப்படும் State of Charge விஷயத்தை மெயின்டெய்ன் செய்யும். அதனால் ரேஞ்சும் பக்காவாக இருக்கும். 

Hyundai Nexo
Hyundai Nexo South Korea

நெக்ஸோ காருக்குள்ளே 12.3 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமும், 7 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரும் இருக்கின்றன. பவர்டு டெயில் கேட், சன்ரூஃப், Krell சவுண்ட் சிஸ்டம் என வசதிகளும் ஏராளம். இதில் முன் பக்க சீட்களுக்கு வென்டிலேட்டட் சீட் வசதி உண்டு. அதாவது, குளிர் நேரங்களில் கதகதப்பாகவும்… வெயில் நேரங்களில் சிலருக்கு முகுது வேர்க்கும் அல்லவா… அப்போது ஜில்லென்ற சீட்டிலிருந்து காற்று வந்து நம்மைக் குளுகுளுன்னும் வைத்துக் கொள்ளும். இன்னொரு வசதி இந்த நெக்ஸோவில், இதில் ஹீட்டட் ஸ்டீயரிங் ஆப்ஷன் இருக்கிறது. 

ஐரோப்பா போன்ற குளிர் நிறைந்த நாடுகளில் ஸ்டார்ட்டிங் ட்ரபுள் ஏற்படக் கூடாது என்பதற்காக, இந்த நெக்ஸோவில் இன்ஜின் ஸ்டார்ட்டிங் பிரச்னை ஏற்படாதவாறு ஹூண்டாய் இதில் வேலை பார்த்திருக்கிறது. 

இந்த 5 டோர் க்ராஸ்ஓவர் எஸ்யூவி, 95kW ஹைட்ரஜன் ஃப்யூல் செல்லும், 40kW பேட்டரி பேக்கும் கொண்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட எலெக்ட்ரிக் கார்கள் போலவேதான் செயல்படும். இதிலுள்ள எலெக்ட்ரிக் மோட்டாரின் பவர் 161bhp மற்றும் 395Nm டார்க். இது 0–100 கிமீ–யை வெறும் 9.2 விநாடிகளில் கடக்கும் என்கிறது ஹூண்டாய். இதன் டாப் ஸ்பீடு சுமார் 179 கிமீ. இதன்
WLTP ரேஞ்சாக சுமார், 414 மைல்கள்… அதாவது 666 கிமீ–யை க்ளெய்ம் செய்கிறது ஹூண்டாய்.

நெக்ஸோ

இந்த ஹைட்ரஜன் காரானா நெக்ஸோ, இந்தியாவுக்கு எப்போது வரும் என்கிற தகவல் இல்லை. காரணம், எலெக்ட்ரிக் கார்களுக்கே இன்னும் கட்டமைப்பு சரியாக வரவில்லை. ஹைட்ரஜன் கார்களுக்கு இன்னும் எம்புட்டு நாள் காத்திருக்க வேண்டும் என்று தெரியவில்லை.  காரணம், அதற்கான கட்டமைப்பு நம் நாட்டில் எங்குட்டு இருக்கு! அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்திலேயே சுமார் 60 ஹைட்ரஜன் ஸ்டேஷன்கள்தான் இருக்கிறதாம்!

நம் ஊரில் இன்னும் எலெக்ட்ரிக் காரை வெச்சுக்கிட்டே நிம்மதியா ஊர் சுத்த முடியலை. ‘சார்ஜ் காலியாயிடுமோ... எலெக்ட்ரிக் ஸ்டேஷன் இருக்குமோ’னு எந்நேரமும் பயம் எகிறிக் கிடக்கிறது. இதில் ஹைட்ரஜன் ஸ்டேஷன் கட்டமைப்பு இந்தியாவுக்கு வருவதற்கு எம்புட்டு வருஷங்களாகும் என்று தெரியவில்லை. உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க மக்களே!



from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/QOPIVW3

Post a Comment

0 Comments

o