GOAT: அட, விஜய் பட போஸ்ட்டரில் இருக்கிறது நம்ம ஊரு பைக்கா; அட்வென்ச்சருக்கு ரெடியா இருங்க!

கேப்டனின் இறுதிச் சடங்கைக் கண்ணீரோடு முடித்துவிட்டு, அப்படியே விஜயகாந்த் ஸ்டைலில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்த கையோடு, அடுத்த கட்டமாக தனது GOAT படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு, ட்ரெண்டிங்கில் இருந்து நகரவே இல்லை தளபதி விஜய். 

ஏதோ மெக்கானிக் உடையில் இரண்டு விஜய்கள் Fist Hifi செய்வதுபோன்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரே தெறி கிளப்பியது. நேற்று செகண்ட் லுக் போஸ்ட்டர் ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் மத்தியில் இன்னும் வைரல்! காரணம், அஜித் மாதிரி ஏதோ ஓர் அட்வென்ச்சர் பைக்கில், இரட்டைத் தளபதிகள் துப்பாக்கியோடு இருப்பது ஹாலிவுட் ஸ்டைலில் பட்டையைக் கிளப்புகிறது. பைக் பிரியர்கள் மத்தியில் விவாதம் என்னவென்றால், ‘தளபதி ஓட்டுற அந்த பைக் என்னவா இருக்கும்; அது படம் முழுக்க வருமா’ என்பதுதான். இதைத் தாண்டி, அந்தப் பட போஸ்டர் மேக்கிங்குக்கான ஸ்கெட்ச் லைனில் கார், பைக் என்று அதகளம் கிளப்புகிறது.

விஜய் 68–வது படமான GOAT–யை இயக்குபவர் வெங்கட்பிரபு. இந்தப் படம் முழுக்க தாய்லாந்தில்தான் அதிகமாகப் படமாக்கப்படப் போவதாகச் சொல்கிறார்கள். அப்படியென்றால், ஏதாவது தாய்லாந்தில் அதிகமாக ஓடும் ஹோண்டா அல்லது பிஎம்டபிள்யூ பைக்காக இருக்குமா என்றெல்லாம் கமென்ட்கள் போய்க் கொண்டிருக்கின்றன. 

GOAT Poster Making
Himalayan 452

அந்த போஸ்டரில் விஜய் ஓட்டுவது நிச்சயம் க்ரூஸர் பைக் இல்லை. முன் பக்கம் டயர் ஹக்கருக்கு மேலே எக்ஸ்ட்ரா ஃபெண்டர், கொஞ்சம் அப்ரைட்டான வட்ட வடிவ இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், அறுங்கோண வடிவில் ஒரு மாதிரியாக வளைந்து நெளியும் பம்பர், முன் பக்க டிஸ்க் பிரேக், ஹேண்டில் பார், முக்கியமாக ஸ்போக் வீல் போன்றவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது, அது லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் 452 பைக் என்று அப்பட்டமாகத் தெரிகிறது. 

Tubeless Tyres optional
Himalayan 452

ராயல் என்ஃபீல்டில் ஏற்கெனவே ஒரு ஹிமாலயன் பைக் இருக்கும் நிலையில், புத்தம் புதிதாய் முதல் லிக்விட் கூல்டு இன்ஜின் செட்அப்பில், 452 சிசியில் ஓர் அட்வென்ச்சர் ஹிமாலயன் பைக்கைக் களம் இறக்கியிருக்கிறது ராயல் என்ஃபீல்டு. விஜய் மாதிரியான வாட்டசாட்டமான, உயரமான ஆசாமிகளுக்கு இந்த பைக் செமையாக இருக்கும். காரணம், இதன் சீட் உயரம். இது 825 மிமீ. இது ஸ்டாண்டர்டாகக் கிடைக்கும் உயரம். இதைத் தாண்டி 845 மிமீ உயரம் கொண்ட மாடலும் இருக்கிறது. அட, 805 மிமீ கொண்ட அட்ஜஸ்ட்மென்ட்டும் உண்டு. இதில் ஏபிஎஸ் பிரேக்ஸை ஆஃப்ரோடுக்கு வேண்டாமென்றால் ஆஃப் செய்து கொள்ளலாம்.  அட்வென்ச்சர் பயணம் மேற்கொண்டால், ஏகப்பட்ட ஆக்சஸரீஸ்களும் வழங்குகிறது ராயல் என்ஃபீல்டு. ஆனால், எக்ஸ்ட்ரா காசு! 

ராயல் என்ஃபீல்டின் முதல் லிக்விட் கூல்டு இன்ஜின் என்பதைத் தாண்டி, பல ‘முதல்’ அம்சங்கள் இதில் இருக்கின்றன. இந்த பைக்கில் எலெக்ட்ரானிக்ஸ் சமாச்சாரங்களில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறது RE. கேடிஎம் போன்ற பைக்குகளில் இருப்பதைப்போல், ‘ரைடு பை வொயர்’ என்கிற தொழில்நுட்பம் இதில் இருக்கிறது. ஆக்ஸிலரேட்டரின் பொசிஷனைத் துல்லியமாகத் துப்பறிந்து, ஆக்சுவேட்டருக்கு இன்ஃபர்மேஷன் அனுப்பி, ECM (Electronic Control Module) கொடுக்கும் ஆர்டர்படி…

அதாவது நீங்கள் ஆக்ஸிலரேட்டரைத் திருப்புவதற்கு ஏற்ப காற்றின் அளவைத் தேவையான அளவு அனுப்புவதுதான் இந்தத் தொழில்நுட்பம். இது ஓட்டுவதற்குச் செமையாக இருக்கும். ஏர்/ஃப்யூல் கலவை சரியாக நடப்பதால், இதில் நல்ல மைலேஜை எதிர்பார்க்கலாம். இது 40.02Ps பவரும், 40Nm டார்க்கும் கிடைக்கிறது. இதில் டாப் ஸ்பீடு 130 கிமீ வரை நாம் போயிருக்கிறோம். இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உண்டு. 

Tripper Navigation

நாம் மோட்டார் விகடன் சார்பாக இதை எடுத்துக் கொண்டு புனேவில் இருந்து கோவா வரை ரைடு போனபோது, இது மிகச் சரியாக 25 கிமீ–ல் இருந்து 30 கிமீ வரை மைலேஜ் கிடைத்தது. இந்த பைக்கில் 17 லிட்டர் பெட்ரோல் டேங்க் இருப்பதால், லாங் ரைடுகளில் நிறுத்தி நிறுத்தி பெட்ரோல் போடத் தேவையில்லை. ஹில் ஸ்டேஷன், ஆஃப்ரோடு என்று எல்லா டெரெய்ன்களிலும் இந்த அட்வென்ச்சர் பைக் சூப்பராக இருக்கும். இதன் கிரவுண்ட் கிளியரன்ஸ்தான் வெறித்தனம். 230 மிமீ. இது பெரிய எஸ்யூவிகளுக்கு இணையான கி.கிளியரன்ஸ். ஸ்பீடு பிரேக்கரில் இல்லை; பெரிய பாதாளச் சாக்கடைக்கு மேடை போட்டாலும் தட்டாது போங்கள்! 

காரணம், 21 இன்ச் முன் பக்க டயர்; 17 இன்ச் பின் பக்க டயர் – இதன் செக்ஷன் சூப்பராக இருக்கும். 140/80R17. முன் பக்கம் கம்மிதான். 90/90-21”. ஆனால், இன்ச் அதிகம் என்பதால், சூப்பர் கிரிப் கிடைக்கும். ‘ஸ்போக் வீல்களாச்சே; வழக்கம்போல ட்யூப் டயர்தானா’ என்று பயப்படத் தேவையில்லை.

இதில் ட்யூப்லெஸ் டயர் ஆப்ஷனலாகக் கொடுத்திருக்கிறார்கள். அதனால், பஞ்சர் பயம் இல்லை. என்ன இதன் எடைதான் கொஞ்சம் அதிகம்; 90% பெட்ரோல் போட்டிருந்தால், 200 கிலோவுக்கு 2 கிலோதான் கம்மி.  இதில் நிச்சயம் முதுகுவலி வர வாய்ப்பே இல்லை. முக்கியக் காரணம் – 

USD Forks

சாதாரண சஸ்பென்ஷன்களில் இருந்து கிண்ணென்ற 43 மிமீ கொண்ட USD (UpSide Down) ஃபோர்க்குகளுக்கு மாறியிருக்கிறது இந்த ஹிமாலயன். பின் பக்கம் மோனோஷாக். இரண்டு பக்கமும் சஸ்பென்ஷன் டிராவல் அளவு 200 மிமீ. அதாவது, நீங்கள் ஒரு பள்ளத்தில் ஏறி இறங்கினால், இது 20 செமீ வரை பயணம் செய்வதால், ‘டொம் டொம்’ என்று அந்த அதிர்வுகளை உங்கள் உடம்புக்குக் கடத்த வாய்ப்பில்லை. 

இந்த இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்ட்டரின் அளவு  4 இன்ச். இது TFT டிஸ்ப்ளே. இதில் ட்ரிப்பர் ஃபுல் மேப் நேவிகேஷன் உண்டு. பளிச்சென்று எல்இடி ஹெட்லாம்ப் கொடுத்திருக்கிறார்கள். மொத்தம் 5 கலர்களில் இந்த ஹிமாலயன் வருகிறது. இது 3.45 லட்சம் ஆன்ரோடு விலையில்  இருந்து கிடைக்கிறது. விஜய் இந்தப் போஸ்டரில் ஓட்டுவது Hanle Black எனும் மாடல். இதன் ஆன்ரோடு விலை 3.62 லட்சம் வருகிறது. 

ராயல் என்ஃபீல்டும் எது பண்ணாலும் ட்ரெண்ட் அடிக்கிறது; விஜய்யும் எது செஞ்சாலும் ட்ரெண்ட் ஆகுது! 



from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/JvLtZc5

Post a Comment

0 Comments

o