‘இப்போ வரும்; அப்போ வரும்; இங்க வந்தா நல்லாருக்கும்; அங்க வந்தா நல்லாருக்கும்’ என்று ஒவ்வொரு நாளும் செய்திகளில் அடிபட்ட டெஸ்லா, ஒரு வழியாக இந்தியாவுக்கு வரப் போகிறது.
ஒவ்வொரு மாநிலங்களும் ‘நம்ம ஊருக்கே வந்துடுங்களேன் மஸ்க்’ என்று ‘முதல்வன்’ படத்தில் அர்ஜூனை வளைத்துப் போடப் பிடிக்கும் அரசியல்வாதிகள் மாதிரி, ஒவ்வொரு தொழில்துறை அமைச்சர்களும், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்கிடம் அறிவிப்புகளும், வேண்டுகோள்களுமாகத் தூள் கிளப்பிக் கொண்டிருக்க, குஜராத்துக்கு அடித்திருக்கிறது அதிர்ஷ்டம்.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், அடுத்த மாதம் குஜராத்தில் நடக்கும் `Gujarat vibrant summit’ மாநாட்டில் இதை நிச்சயம் எலான் மஸ்க் அறிவித்துவிடுவார் என்கிறார்கள்.
குஜராத் மாநில அரசின் செய்தித் தொடர்பாளர் ருஷிகேஷ் பட்டேல், குஜராத் மாநில அரசு கொடுத்துள்ள சலுகைகள் எலான் மஸ்க்கைக் கவர்ந்துள்ளதாகவும், அதனால் தனது டெஸ்லா தொழிற்சாலையை இங்கேயே அமைக்க முடிவு எடுத்துள்ளதாகவும் தெரிவித்திருக்கிறார். அடுத்த மாதம் நடக்கும் சம்மிட் மாநாட்டில் இதை மஸ்க்கே வந்து அறிவிப்பார் என்றும் தகவல் தெரிவித்திருக்கிறார்.
சாதாரணமாக அமெரிக்கா, ஜெர்மன் போன்ற நாடுகளில் இருந்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலை அமைக்க, முதலீடு ரொம்பவும் அதிகம் என்பது அவசியம். டெஸ்லாவின் முதலீடு அநேகமாக 2 பில்லியன் டாலர், அதாவது சுமார் 200 கோடி ரூபாய் எனும் அளவில் இருக்கலாம் என்கிறார்கள். அப்படியே சுமார் 15 பில்லியன் டாலர்களுக்கு ஆட்டோமோட்டிவ் உதிரிபாகங்களின் பர்ச்சேஸை இந்தியாவில் அதிகரிக்க இருக்கிறாராம் மஸ்க்.
நம் மத்திய அரசு, கடைசியாக டெஸ்லாவுக்கு இப்படி ஒரு வரிச்சலுகையை அறிவித்திருந்தது. அதாவது, இங்கு தொழிற்சாலையைத் துவக்கினால், முதல் 2 ஆண்டுகளுக்கு இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கு 15% வரித்தள்ளுபடி அளிக்கப்படும் என்பதாக அந்த அறிக்கை சொல்லியிருந்தது.

ஒரு கணக்கு – பொதுவாக இந்தியாவில் நீங்கள் ஒரு வெளிநாட்டுக் காரை வாங்க வேண்டுமென்றால், CBU (Completely Built Unit) முறையில் இறக்குமதி செய்துதான் வாங்க வேண்டும். 40,000 டாலர்களுக்குக் கீழே உள்ள கார்களுக்கு 70% இம்போர்ட் டேக்ஸும், 40,000 டாலர்களுக்கு மேல் இருந்தால் 100%–க்கு மேலும் இறக்குமதி வரி கட்ட வேண்டும். (அதாவது, காரைவிட அப்படியே இன்னொரு மடங்கு!)
அப்படியென்றால், மத்திய அரசு கொடுக்கும் 15% வரிக் குறைப்பின்படி, டெஸ்லாவின் மாடல் 3 மற்றும் மாடல் Y போன்ற கார்களின் விலை இந்தியாவில் கணிசமாகக் குறையும் என்பதைக் கவனிக்க வேண்டும்.
இப்போதைக்கு இது பெரிய கார்களை உற்பத்தி செய்யும் ஜிகா ஃபேக்டரியாக இருக்காது என்றும் சொல்கிறார்கள். அதாவது, கார்களை இறக்குமதி செய்து விற்கும் முதல் முடிவில் இருக்கிறாராம் மஸ்க். மாடல் Y, மாடல் 3 மற்றும் புதிய ஹேட்ச்பேக் கார் போன்றவற்றைத்தான் முதலில் இந்தியாவில் களமிறக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அப்படியென்றால், சுமார் 38 – 43 லட்சத்துக்குள் இந்த காஸ்ட்லியான டெஸ்லாவை வாங்க முடியும்.
ஒரு விஷயம் – தமிழ்நாடுதான் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் கொடி கட்டிப் பறக்கும் மாநிலம். ராயல் என்ஃபீல்டு, ஓலா, ஆம்பியர், ஏத்தர், யமஹா, சிட்ரன், ரெனோ, நிஸான், டிவிஎஸ், ஹூண்டாய் போன்ற ராட்சச நிறுவனங்கள் இங்குதான் பட்டை கிளப்பிக் கொண்டிருக்கின்றன. அந்த வரிசையில் டெஸ்லாவையும் கொண்டு வரப் பெரிதும் விரும்பினார் மஸ்க் என்று சொல்லப்படுகிறது. மேலும், தமிழ்நாட்டில் கர்நாடகா அளவு இல்லையென்றாலும், சார்ஜிங் கட்டமைப்புகளும் ஓரளவு சொல்லிக்கொள்ளும்படி வந்து கொண்டிருக்கிறது. அதனால், மஸ்க் முதலில் தமிழ்நாட்டுக்குத்தான் டிக் அடிப்பார் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள்.

மஹாராஷ்டிராவையும் சும்மா சொல்லக்கூடாது. பென்ஸ், மஹிந்திரா, ஸ்கோடா, பஜாஜ், கேடிஎம், டாடா மோட்டார்ஸ், ஃபோக்ஸ்வாகன் போன்ற ஜாம்பவான்கள் இங்குதான் இருக்கிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி குஜராத்தை டிக் அடித்திருக்கிறார் மஸ்க். ஒருவேளை – குஜராத்தின் முன்னாள் முதல்வர் பாசத்தில் மோடி ஏதும் பெர்சனலா போன் பண்ணியிருப்பாரோ!
இப்படித்தான் கியாவை ஆந்திராவுக்கு விட்டுட்டோம்; இப்போ டெஸ்லாவை குஜராத்துக்குக் கொடுத்தாச்சு!
from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/0U15c3P
0 Comments