Euro Tech - Cars: எலெக்ட்ரிக் கார்கள்தான் எதிர்காலமா? இனி கார்லயே இத்தனை வசதிகள் இருக்குமா?

இன்று

கடந்த மூன்று வாரங்களாகவே யூரோ டெக்கில் ஆட்டோமொபைலின் ஆரம்பக் காலங்களைச் சுற்றி ஒரு ரவுண்டு வந்தோம். இன்று ஆட்டோமொபைல் துறையில் என்னென்ன மாற்றங்கள் வந்துள்ளன என்று பார்க்கலாமா?!

நாளொரு தேவை, பொழுதொரு அப்டேட் என அதி வேகமாக மாறிவரும் இன்றைய உலகின் பொருளாதார வளர்ச்சியில், மக்களின் தேர்வு, சமூக அந்தஸ்து எனப் பல காரணிகள் நவீன வாகனங்களின் தேவையை அதிகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை உணர்ந்து, எல்லா நிறுவனங்களுமே பல்வேறு கூடுதல் அம்சங்களுடன் தொடர்ந்து புதிய கார் மாடல்களை சந்தையில் அறிமுகப்படுத்தி வருகின்றன. பிரீமியம் ஒலி அமைப்புகள், வயர்லெஸ் ஸ்மார்ட் போன் இணைப்பு, நிலையான 6 ஏர்பேக்குகள், Automatic Emergency Braking, All digital instrument cluster, AI போட் & அலெக்சா, டிஜிட்டல் கார் சாவிகள், காற்றோட்டமான இருக்கைகள் எனப் பல புதிய அம்சங்கள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டே வருகின்றன.

எலெக்ட்ரிக் கார்கள்

அந்த வகையில் இன்று ஆட்டோமொபைல் துறையில் மிக வேகமாக வளர்ந்து வரும் மாற்றங்களில் ஒன்றுதான் எலெக்ட்ரிக் கார்கள். இவை இன்னுமே ஆட்டோமொபைல் துறையில் ஒரு முக்கிய சந்தையாக மாறவில்லை என்றாலும் உலகம் முழுவதும் பெருமளவில் மக்கள் பெட்ரோல், டீசலில் ஓடும் வாகனங்களைக் கைவிட்டு எலெக்ட்ரிக் கார்களுக்கு மாறத் தொடங்கியுள்ளார்கள். இதனால் பல கார் நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களைப் பெருமளவில் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளன.

அடுத்தடுத்த CO2 உமிழ்வுகளிலிருந்து சுற்றுச்சூழலைக் காப்பாற்றும் என்ற ஒரே காரணத்திற்காகப் பல நாடுகளும் எலெக்ட்ரிக் கார்களை மக்கள் மத்தியில் ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன. இதற்கான வரிச் சலுகை, காப்பீட்டுச் சலுகை எனப் பல சலுகைகளை வழங்கி மக்களை எலெக்ட்ரிக் கார் பக்கம் திருப்பும் முயற்சியில் ஒவ்வொரு நாட்டு அரசும் தீவிரம் காட்டி வருகிறது.

என்னதான் இதற்கு முன்னர் BMW உட்பட சில நிறுவனங்கள் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும் இந்தப் புரட்சியை ஆரம்பித்து வைத்த பெருமை டெஸ்லாவையே சாரும். சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்பட்ட உயர் செயல்திறன் கொண்ட மின்சார கார்களை உற்பத்தி செய்வதன் மூலம் டெஸ்லா ஆட்டோமொபைல் தொழில்துறையை அப்படியே திருப்பிப் போட்டது.

உண்மையில் டெஸ்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்ட கதை மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. 1996 முதல் 1999 வரையான காலப்பகுதியில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் முதன் முறையாக வெகுஜன உற்பத்தி மற்றும் வியாபார நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்ட மின்சாரக் கார்களைப் பெரியளவில் உற்பத்தி செய்தது. ஆனால் அந்த மின்சார கார்களில் ஏற்பட்ட சில பல தொழில்நுட்பப் பிரச்னைகளால் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்த மொத்த கார்களையும் திரும்பப் பெற்று அழித்துவிட்டது.

டெஸ்லா எலெக்ட்ரிக் கார்
அப்போது பரபரப்பாகப் பேசப்பட்ட இந்த நிகழ்வு GM நிறுவனத்துக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியது. `கார் உற்பத்தியில் ஜாம்பவான் இவருக்கே இந்த நிலை என்றால் நாமெல்லாம் எந்த மூலைக்கு?' என்று அஞ்சி ஏனைய நிறுவனங்களும் மேற்கொண்டு எலெக்ட்ரிக் கார்கள் தயாரிக்கும் ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை.

ஆனால் எப்போதும் போல ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்கு சாப்பிடுவது போல என மின்சார கார்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்திலே துணிந்து களத்தில் குதித்தார் எலான் மஸ்க். ஆரம்பக் காலங்களில் பல்வேறு சமயங்களில் டெஸ்லா நிறுவனம் நிதி சிக்கலில் தவித்து திவாலாகின்ற நிலைக்குத் தள்ளப்பட்ட போது எலான் மஸ்க் தனது சொந்த பணத்தை முதலீடு செய்து நிறுவனத்தைக் கைதூக்கி விட்டார். இன்று டெஸ்லாவின் பெருமதிப்பு 85 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. உலகின் அதி நவீன ஆட்டோபைலட் முறையைக் கொண்டுள்ள டெஸ்லா கார்களை உலகின் பாதுகாப்பான காராகவும் மாற்றுவதே தன் ஒரே குறிக்கோள் என்று மஸ்க் கூறியுள்ளார்.

இதுவரை காலமும் சிறந்த தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட டெஸ்லா கார்கள் கொழுத்த பணக்கார எலைட்கள் மட்டுமே வாங்கக் கூடியாளவுக்கு அளவுக்கு யானை விலை, குதிரை விலையிலிருந்தன. ஆனால், "இனிவரும் காலங்களில் நடுத்தர மக்களும் டெஸ்லா காரை வாங்கும் வகையில் பட்ஜெட் விலையில் கார்களை உற்பத்தி செய்யத் திட்டமிட்டுள்ளோம்" என்று அறிவித்துள்ளார் எலான் மஸ்க். அது மட்டுமல்ல, இந்தியாவிலும் எலக்ட்ரிக் கார் ஆலையைத் தொடங்குவதற்கான பேச்சு வார்த்தையைச் சமீபத்தில் எலான் மஸ்க் இந்தியப் பிரதமர் மோடியுடன் நடத்தியுள்ளார். இந்தியாவில் டெஸ்லா கார் ஆலையை நிறுவினால் ஆண்டுதோறும் சுமார் 5,00,000 எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்றும், இந்தியாவில் அதன் ஆரம்ப விலை ரூ.20 லட்சத்திலிருந்து தொடங்கும் என்றும் நமக்கு இன்ப அதிர்ச்சியையும் கொடுத்துள்ளார் எலான் மஸ்க். நானோ கார்கள் போல ஸ்டார்ட்டிங் எல்லாம் நல்லாதான் இருக்கு ஃபினிஷிங் சரியில்லயேப்பா ரேஞ்சுக்குப் போகாமல் திட்டமிட்டபடியே தரமான அதே சமயம் பாதுகாப்பான கார்களை மக்களுக்குக் கட்டுப்படியான விலையில் கொடுக்க முடிந்தால் நல்லதுதான்.

பெரிய நிறுவனங்களின் எலெக்ட்ரிக் கார் சார்ஜிங் பாயின்ட்ஸ்
தற்போது உற்பத்தியாகும் அனைத்து கார்களிலும் அடிப்படையான எல்லா புதிய அம்சங்களும் சேர்க்கப்பட்டிருந்தாலும் கூட, மிகச் சிறந்த மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்கள் எல்லாமே உயர்நிலை சொகுசு கார்களில் மட்டும்தான் அறிமுகப்படுத்தப்படும். அந்த விதத்தில் சமீபத்தில் பல கூல் வசதிகளுடன் அறிமுகமாகி உள்ள சொகுசு கார்கள் எல்லாம் காரா இல்லை ஃப்ளைட்டா என வாய் பிளக்க வைக்கின்றன.

நிலையான 12.3-இன்ச் தொடுதிரை, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் கார்ப்ளே ஒருங்கிணைப்பு, வைஃபை ஹாட்ஸ்பாட், அட்வான்ஸ்டு நேவிகேஷன், 12-ஸ்பீக்கர் ஆடியோ சிஸ்டம், 7-இன்ச் பின்புற இருக்கை மைய தொடுதிரை, 23-speaker Mark Levinson surround-sound stereo, போன்ற பல அட்டகாசமான அம்சங்களோடு அறிமுகமாகி உள்ள Lexus LS, Porsche Panamera, Genesis G90, Mercedes-Benz EQS, Mercedes-Benz S-Class, Tesla Model 3 போன்ற கார்கள் எல்லாம் உள்ளேறி அமர்ந்தாலே சொர்க்கத்தைக் காட்டுகின்றன.

ஏற்கெனவே இருந்த BMW, Benz, AUDI, Volkswagen, Toyota, Suzuki, KIA போன்ற கார்களுக்குப் போட்டியாகப் பல புதிய மாடல்கள் சமீபத்தில் களத்தில் குதித்திருக்கின்றன. குண்டூசி முதல் குண்டு வீசும் போர் விமானம் வரை எல்லாவற்றையுமே உற்பத்தி செய்யும் சீனா காரை மட்டும் விட்டு வைத்திருக்குமா என்ன? BYD (Build Your Dreams) என்ற சீன கார் உற்பத்தி நிறுவனம் 2003-ம் ஆண்டு முதல் எலெக்ட்ரிக் வணிக வாகனங்கள் தயாரிப்பில் பிரபலமாக இருந்து வருகிறது.

வோல்வோவிடமிருந்து பிரிந்த போலஸ்டார் (Polestar) எனும் ஸ்வீடிஷ் எலக்ட்ரிக் கார் தனது முதல் காரான Polestar 1 ஹைப்ரிட் கூபேவை 2019-ல் அறிமுகப்படுத்தியது. 2022-ல், வடிவமைப்பு மற்றும் செயல்திறனில் மேம்பட்ட Polestar 2 - எலக்ட்ரிக் கிராஸ் ஓவரை அறிமுகப்படுத்தியது. 2023 முடிவுக்குள் AUDI e-tron, Tesla Model X போன்ற முன்னணி SUV-க்களுக்குப் போட்டியாக Polestar 3 எலெக்ட்ரிக் SUV-ஐ அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

Polestar 2
சமீபத்தில் நிதி நெருக்கடி காரணமாக மஹிந்திராவிடமிருந்து முதலீட்டைப் பெற்ற தென் கொரிய நிறுவனமான SsangYong, 310 மைல்கள் வரை 108mph வேகத்தில் செல்லும் Korando e-Motion 4x4 SUV-க்களை இவ்வாண்டு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் Fisker, சீனாவின் NiO எனப் பல புதிய நிறுவனங்களும் தங்கள் புதிய உற்பத்திகளைச் சந்தையில் களமிறக்கியுள்ளன.

இன்றைய கார்களின் அட்வான்ஸ் டெக்னாலஜியைப் பற்றிப் பேசும் பொழுது தவிர்க்க முடியாத முக்கியமான ஒரு வார்த்தை ADAS. இந்த நவீன கார்களில் எல்லாம் காணப்படும் முக்கியமான அம்சமான Advanced driver-assistance systems (ADAS) எனப்படும் மேம்பட்ட ஓட்டுநர்-உதவி அமைப்புகள் நாம் சாலைகளில் செல்லும் ஒட்டு மொத்த வழியையும் அப்படியே மாற்றி அமைத்துவிட்டது. இந்த அதிநவீன ADAS அமைப்பு, ஏராளமான சென்சார்கள், கேமராக்கள் மற்றும் AI-உந்துதல் அல்காரிதம்களை ஒருங்கிணைத்து விபத்துகள் நடப்பதைப் பெருமளவில் தடுப்பது மட்டுமல்லாது அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன்-கீப்பிங் உதவி, தானியங்கி அவசரக்கால பிரேக்கிங், பாதசாரிகளைக் கண்டறிதல் மற்றும் பார்க்கிங் உதவி உட்படப் பலவிதமான செயல்பாடுகளை உள்ளடக்கி நாம் வாகனம் ஓட்டும் அனுபவத்தைப் பாதுகாப்பான அடுத்த கட்டதுக்கே நகர்த்திவிட்டது.

கஸ்டமர் டிமாண்ட், மாறிவரும் சட்ட திட்டங்கள், போட்டியாளர் நெருக்கடி, உலகப் பொருளாதார அரசியல் சிக்கல்கள் எனப் பல காரணங்களால் ஆட்டோமொபைல் துறையும் பல மாற்றங்களுக்கு உட்பட்டு தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிக்கொண்டே செல்கிறது. சமகால கார்கள் எல்லாமே ஒவ்வொரு நுகர்வோரின் தேவைகள், சுற்றுச்சூழல் ஆர்வம் மற்றும் சட்ட திட்டங்களுக்குள் அமைய வெவ்வேறு பட்ட எரிபொருள் தெரிவுகளை வழங்குகின்றன. இன்னும் பெரும்பாலான கார்கள் பாரம்பரிய பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருளில் இயங்கினாலும் மின்சார வாகனங்கள் (EV-க்கள்), பெட்ரோல் அல்லது டீசல் இன்ஜின்களை மின்சார உந்துதலுடன் இணைத்து, மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் மற்றும் குறைந்த உமிழ்வை வழங்கும் Hybrid கார்கள், நீராவியை மட்டுமே உமிழ்வாக வெளியிடும் ஹைட்ரஜன் எரிபொருள் செல் வாகனங்கள் போன்றவையும் மிகப் பிரபலமாகி வருகின்றன.

பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை பறக்கும் கார்கள் எல்லாம் பள்ளிக் கட்டுரையின் கற்பனை தலைப்பாக மட்டுமே இருந்தன. ஆனால் இன்று கார்கள் இறக்கைகள் இல்லாமலேயே வானத்தில் பறக்கின்றன. நீரில் இறங்கி, சக்கரத்தை மடக்கி உள்ளே வைத்துக்கொண்டு படகு போல நீந்துகின்றன. இன்னும் நிலத்தில் பள்ளத்தைத் தொண்டி பூமிக்கு அடியில் ஊடுருவிச் செல்லாதது மட்டும்தான் பாக்கி. அதையும் அடுத்த பத்து, இருபது ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம்.
Modern Cars

ஆட்டோமொபைல் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி உண்மையிலேயே ஓர் உற்சாகமான பயணத்துக்கான எதிர்பார்ப்புக்களை எகிறத்தான் வைக்கிறது. மின்சார மற்றும் ஆட்டோ பைலட் வாகனங்களில் புரட்சிகர முன்னேற்றங்கள் முதல் AI மற்றும் ஸ்மார்ட் செயல்பாடுகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு வரை, வேகமாக முன்னோக்கிச் செல்லும் பாதை பல புதுமைகளாலும் ஆச்சர்யங்களாலும் நிறைந்திருக்கும் என்று நிச்சயம் நம்பலாம்.

கடந்த காலத்தின் பல பாரம்பரிய அம்சங்கள் எல்லாம் எல்லாம் விடைபெற, வரும் யுகத்தில் பல புதிய இன்டெலிஜெண்ட்டான புதுமைகள் சேரும் போது கார் என்பது வெறும் போக்குவரத்துக்கான வழிமுறை மட்டுமல்லாது, மனித நாகரீகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கிய வெற்றிப் பயணத்தின் உற்ற வழித்துணையாக மாறும்!

- Euro Tech Logging Out...

ஹாய் யூரோ டெக் ரீடர்ஸ்...

இந்த 21 வாரப் பயணம் ஐரோப்பாவின் பல அட்டகாசமான கண்டுபிடிப்புகளையும் அவற்றின் இன்றைய அபாரமான வளர்ச்சியையும் உங்கள் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் என்று நம்புகிறேன். தொழில்நுட்ப முன்னேற்றத்தில் கடந்த காலத்தோடு நிகழ்காலத்தை ஒப்பிட்டு, எதிர் காலத்தைக் கணக்கிட்டுக் கொள்ள இந்தத் தொடர் ஓரளவுக்கேனும் உங்களுக்கு உதவி புரிந்திருக்கும் என்றும் நம்புகிறேன்.

மனித நாகரீகம் தொடங்கிய நாள் முதல் இன்று வரை பல தொழில்நுட்பங்கள் தொடர்ச்சியாகக் கண்டுபிடிக்கப்பட்டும், மெருகேற்றப்பட்டும் வருகின்றன. அவற்றில் மனித சமூகத்துக்கு நன்மை விளைவிப்பதை மட்டும் ஆதரித்து, தீயவற்றை நிராகரித்து நம் எதிர்கால சந்ததியிடம் ஓர் ஆரோக்கியமான உலகை ஒப்படைப்போம்.

இதுவரை இந்தத் தொடருக்கு நீங்கள் வழங்கிய அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி. இத்தொடர் பற்றிய உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதிவு செய்யுங்கள். நன்றி!


from ஆட்டோமொபைல் செய்திகள் https://ift.tt/3KDPOw8

Post a Comment

0 Comments

o