அன்று
கார் தயாரிப்பில் பல கண்டுபிடிப்பாளர்கள் தொடர்ச்சியாக முயன்று வந்த வேளை, திடீரென புயலென உள்ளே புகுந்தார் ஒருவர். அதுவரை தள்ளாடிக்கொண்டு இருந்த ஆட்டோமொபைல் துறையில் தடம் பதித்து ஒரு மிகப்பெரும் புரட்சியை ஏற்படுத்திய அவரது கண்டுபிடிப்பு நூறு ஆண்டுகள் கழித்தும், இன்றுவரை உலகின் நம்பர் ஒன் இடத்தை தக்கவைத்துக்கொண்டு இருக்கிறது என்பதுதான் இங்கு ஹைலைட்டே! அந்த ஹீரோவின் பெயர் கார்ல் ஃபிரெட்ரிக் மைக்கேல் பென்ஸ் (Karl Friedrich Michael Benz) அவர் கண்டுபிடித்த அந்தக் கார் இன்று வரை ஆட்டோமொபைல் துறையில் அசைக்க முடியா ராஜாவாக வலம் வரும் பென்ஸ்.
ஜெர்மனியில் உள்ள பேடன் மியூல்பர்க்கில் 25 நவம்பர் 1844 அன்று, ரயில் இன்ஜின் டிரைவரின் மகனாக மிகுந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்த கார்ல் பென்ஸ்சின் வாழ்வில் தொடக்கமே துயரம்தான். தந்தை இவரது இரண்டு வயதிலேயே இறந்துவிட, குடும்பம் மேலும் வறுமைக்குள் தள்ளப்படுகிறது. ஒரு வேளை சோற்றுக்கே கஷ்டப்பட்ட போதிலும் பென்ஸின் தாயார் தன் மகன் எப்படியாவது படிக்கவேண்டும் என்பதில் மட்டும் மிகத் தெளிவாக இருந்தார். கிடைக்கும் அத்தனை வேலைகளையும் செய்து, மிகுந்த சிரமத்துக்கும் மத்தியில் அவரைப் படிக்க வைத்ததன் விளைவு, கார்ல் பென்ஸ் பள்ளிப்படிப்பை மிகத் திறமையாக முடித்து அவரது 15வது வயதிலேயே ஜெர்மனியின் மிகப் பிரபலமான கார்ல்ஸ்ரூ பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தில் (University of Karlsruhe) மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டப்படிப்புக்காக இணைந்தார். அங்கே அவருக்கு துரோணாச்சாரியாராக வந்தவர் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கின் தந்தை என்று போற்றப்படும் 'Ferdinand Redtenbacher'.

குரு ஃபெர்டினாண்ட் ரெட்டன்பேச்சரின் வழிகாட்டுதலோடு இயந்திர பொறியியலில் பல புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட கார்ல் பென்ஸ் 19 வயதில் பட்டப்படிப்பை முடித்து பின் 7 வருடங்கள் வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தாலும் பென்ஸ்சால் எங்குமே நிலையாகத் தொடர முடியவில்லை. அவரது உள்மனம் நீ சாதிக்கப்பிறந்தனவன் என்ற மந்திரத்தைத் தொடர்ந்து உச்சரித்துக்கொண்டே இருந்தது.
1871-ம் ஆண்டில், Iron Foundry and Machine Shop என்ற தனது முதல் நிறுவனத்தை சக நண்பன் ஆகஸ்ட் ரிட்டருடன் (August Ritter) இணைந்து நிறுவினார். நம்பிய நண்பன் துரோகம் இழைத்துவிட (You too Brutus!), மிகுந்த நஷ்டத்தில் மூழ்கியது அவரது நிறுவனம். மீள முடியா கடன் சுமைக்குள் மூழ்கிய பென்ஸை தக்க சமயத்தில் பண உதவி செய்து கைகொடுத்துக் காப்பாற்றினார் அவரது பணக்கார காதல் மனைவி Bertha Benz! 'மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்று ஜெர்மனி மொழியில் பாடியபடியே உற்சாகமாக மீண்டும் தனது முயற்சிகளைத் தொடர ஆரம்பித்தார் கார்ல் பென்ஸ்.
மிஸ்டர் பென்ஸ் தனக்குச் சொந்தமான நிறுவனத்தில் முதன் முதலாக இரண்டு ஸ்ட்ரோக் பெட்ரோல் இயந்திரம் ஒன்றை வெற்றிகரமாக உருவாக்கினார். பின்னர் ஓர் எளிமையான பெட்ரோல் இன்ஜினையும் உருவாக்கி, அதை ஒரு முச்சக்கர வண்டியில் பொருத்தி, 1885-ல் உலகின் முதல் நடைமுறை எரிவாயுவில் இயங்கும் காரை உருவாக்கினார்.

ஆனாலும் அதுவரை அப்படி ஒரு வஸ்துவையே கண்டிராத பாமர சமூகம் அவர் கண்டுபிடிப்பை இடது கையால் ரிஜெக்ட் செய்தது. அவரது கண்டுபிடிப்பை முற்றாக நம்பவும் இல்லை, ஏற்றுக்கொள்ளவும் இல்லை. ஆனால் பென்ஸ்சின் அன்பு மனைவி பேர்தா மட்டும் தன் கணவனின் கண்டுபிடிப்பு நிச்சயம் சாதாரணமான ஒன்றல்ல என்று உறுதியாக நம்பினார். அதனாலேயே சமூகத்தின் தயக்கத்தையும் பயத்தையும் போக்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக யாருமே துணியாத ஒரு வீர தீரச் சாகசத்தைப் பண்ணத் துணிந்தார் சிங்கப்பெண் மிஸ்ஸஸ் பென்ஸ். அவரது அந்த துணிகர செயல் பென்ஸ்சின் முயற்சிகளை மட்டுமல்ல, கவனிப்பாரற்றுக் கிடந்த இருந்த அவரது கண்டுபிடிப்பையும் உலகப் பிரசித்தி ஆக்கியது.
அடடே! அப்படி என்ன பெருசா பண்ணிட்டாரு என்று கேட்கிறீர்களா? திருமதி பென்ஸ் தன் இரு மகன்களையும் அழைத்துக்கொண்டு 130 மைல் தொலைவில் இருக்கும் தன் பெற்றோரின் வீட்டுக்குத் தனியே காரை ஓட்டிச் செல்ல முடிவெடுத்தார். `தொட்டதுக்கு எல்லாம் அம்மா வீட்டுக்குப் போகிறேன்' என எப்போதும் பெண்கள் பண்ணும் அலப்பறையைத் தானே அவரும் பண்ணி இருக்கிறார் என்று எல்லாம் அசால்ட்டாக இதைக் கடந்து போக முடியாது. காரணம் இந்தச் சம்பவம் பென்ஸ் வாழ்க்கையின் திருப்புமுனையாக மட்டுமல்ல ஆட்டோமொபைல் வரலாற்றையே புரட்டிப் போட்டது (ஆல் லேடீஸ் நோட் திஸ் பாயின்ட்).
மிஸ்டர் பென்ஸுக்கு கூடச் சொல்லாமல் மிஸ்ஸஸ் பேர்தா பென்ஸ் தன் இரண்டு மகன்களையும் அழைத்துக்கொண்டு தைரியமாகப் புறப்பட்டுச் சென்று விட்டாலும் வழி நெடுக பல சிரமங்களை எதிர்கொண்டார். அப்போது எரிவாயு நிலையங்கள் கண்டுபிடிக்கப்படாததால் போகும் வழிநெடுக அவ்வப்போது நிறுத்தி மருந்துக் கடைகளில் (வேதியியல் கடைகளில்) எரிபொருளை வாங்கினர். அதேபோல மலைகளிலும் காடுகளிலும் வண்டி ஓடாமல் டாச்சர் பண்ணிய போது, இரண்டு சிறுவர்களும் நடுநடுவே இறங்கி வண்டியைத் தள்ள வேண்டியும் இருந்தது. வழியில் மக்கர் பண்ணிய காரை “சொன்ன படி கேளு மக்கர் பண்ணாதே” என்று பாடியவரே தனது ஹேர் பின் மற்றும் கார்டர் பெல்ட் மூலம் பேர்தா தானே சுயமாகப் பழுதுபார்க்க வேண்டியிருந்தது. இது போன்ற கல்லும் முள்ளும் நிறைந்த சாலைகளில் கடினப் பயணம் மேற்கொண்டு, கடைசியில் தன் கணவரின் கண்டுபிடிப்பு ஒன்றும் கிள்ளுக் கீரையல்ல என்றும், இனி வரும் காலங்களில் சாலைகளை ஆக்கிரமிக்கப் போகும் ஓர் அற்புத சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளார் என்று 'சூர்யவம்சம்' தேவயானி போல உலகுக்கு நிரூபித்தார் பேர்தா பென்ஸ்.

பேர்தா பென்ஸின் இந்தத் துணிச்சலான பயணம், பென்ஸ் உருவாக்கிய கார்களுக்கு ஓர் இலவச விளம்பரமாகிப்போனது. கார்ல் பென்சே ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு யோசித்தாலும் இந்தளவு டக்கரான விளம்பர ஐடியாவைக் கண்டுபிடித்திருக்க மாட்டார். (மறுபடியும் “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று கண்கள் வியர்க்கப் பாடிவிட்டு, கார் சாவியைக் கீழே போடுவது போலப் போட்டு அதை எடுக்கும் சாக்கில் மனைவி காலைத் தொட்டு ஆசீர்வாதம் வாங்கி இருப்பாரோ என்னவோ...)
பேர்தாவின் இந்தச் சாதனை நலிவடைந்து கிடந்த பென்ஸ் கம்பெனியை மீண்டும் டாப்புக்குக் கொண்டு சென்றது. ஊரே பென்ஸ்சை கேலி செய்த போது “போங்கடா போக்கத்த பாசங்களா... ஆடி போய் ஆவணி வந்ததும் டாப்பா வருவான் என் பிள்ளை” என மிஸ்டர் பென்ஸ்ஸின் தாயார் கூறிய வார்த்தைகள் பலித்தன. அதுவரை பென்ஸ் காரைப் பார்த்துப் பயந்தவர்கள், நாக்கு மேல் பல்லு போட்டுக் குறை பேசியவர்களுக்கு எல்லாம் சரியான பதிலடி கொடுத்தது அந்தத் தரமான சம்பவம். பென்ஸ் காரின் நம்பகத்தன்மை மேல் மக்களுக்கு நம்பிக்கை வரத் தொடங்க, மீண்டும் வியாபாரம் களைகட்டியது.
இப்போது இருந்த ஒரே பிரச்னை மேல்நோக்கிய ஸ்லோப்களில் காரை ஏற்றுவதற்கு எல்லா ஜெர்மனியர்களுக்குமே “சொன்னபடி கேளு மக்கர் பண்ணாதே” பாடல் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா! அது சாத்தியம் இல்லை என்பதால், 'பேர்தா எனக்கொரு வழி சொல்லு' என மீண்டும் மனைவியிடம் தஞ்சம் புகுந்தார் பென்ஸ்.
'மனைவி சொல்லே மந்திரம்' என பேர்தா பென்ஸ்ஸின் யோசனைப்படியே வண்டியை மலைகளில் மேல்நோக்கி ஓட்டுவதற்கு ஏதுவாக மேலதிக கியர்களைச் சேர்த்து விரைவில் வெற்றிகரமாக நான்கு சக்கர கார்களை உருவாக்கிய கார்ல் பென்ஸ், 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், உலகின் முன்னணி கார் தயாரிப்பாளராக விஸ்வரூபம் எடுத்திருந்தார்.
கீரைக் கடைக்கும் எதிர்க்கடை வேண்டும் என்று சொல்லுவார்கள் அல்லவா. கீரைக் கடைக்கே எதிர்க்கடை வரும் போது கோடிகளில் வியாபாரம் ஆகும் கார் கடைக்கு வராதா என்ன? அதே நேரத்தில் இன்னொரு ஜெர்மனியரும் ஆட்டோமொபைல் துறையில் குதித்து கல்லா கட்டத் தொடங்கியிருந்தார். அவர்தான் Gottlieb Daimler.

கார்ல் பென்ஸ்சுக்கு கடும் போட்டியாளராக இருந்த காட்லீப் டெய்ம்லர், பென்ஸை விட ஐந்து மாதங்களுக்கு முன்னதாக ஒரு சிறந்த internal combustion engine-ஐ உருவாக்கி காப்புரிமை பெற்றிருந்தார். ஆனாலும் அது இரு சக்கர வாகனமாகப் போய்விட்டதால் Daimler உருவாக்கிய இன்ஜின் உலகின் முதல் மோட்டார் பைக்கை உருவாக்கவே வழிவகுத்தது.
நிகோலஸ் ஓட்டோவிற்காகப் பணியாற்றிய காட்லீப் டெய்ம்லர் மற்றும் வில்ஹெல்ம் மேபேக் இருவரும் இணைந்து பென்ஸ்சுக்கு எதிராக கார் தயாரிப்பில் இறங்கினார்கள். டெய்ம்லரின் மறைவுக்குப் பிறகு டெய்ம்லர் நிறுவனத்தின் பிரதான வாடிக்கையாளரும், ஜெர்மனியின் செல்வந்த அரசியல்வாதியுமான எமில் ஜெல்லினெக், டெய்ம்லர் நிறுவனம் தயாரித்த கார்களின் பால் மிகவும் ஈர்க்கப்பட்டார். எனவே அந்நிறுவனத்தின் பிரதான பங்குதாரராகவும் மாறினார். 1901ம் ஆண்டு தனது மகளான மெர்சிடிஸ் ஜெல்லினெக்கின் நினைவாக விசேஷ ரக கார்களை உற்பத்தி செய்து அதற்கு 'மெர்சிடிஸ்' என்று பெயரிட்டார் பாசக்கார தந்தையான எமில் ஜெல்லினெக்.
ரேஸ் பிரியரான எமிலின் மெர்சிடிஸ் ரக கார்கள் பங்குபெற்ற அத்தனை ரேஸ்களிலும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பென்ஸ் கார்களுக்குப் போட்டியாக மெர்சிடிஸ் கார்களும் உலகப் புகழ்பெற்றன. 1920கள் வரை டெய்ம்லர் மற்றும் பென்ஸ் நிறுவனங்கள் கடும் போட்டியாளர்களாகவே இருந்தன. முதல் உலகப் போரின் முடிவில் ஜெர்மனியின் படு தோல்வியும், அதைத் தொடர்ந்து ஜெர்மனியில் உண்டான பொருளாதார நெருக்கடியும் இந்த இரு நிறுவனங்களையும் பலத்த சரிவுக்குள் தள்ளியது. எனவே, 1926-ல் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கணக்கில் இருநிறுவனங்களும் ஒன்றாகக் கைகோர்த்து மெர்சிடிஸ் - பென்ஸ் என்ற பெயரில் ஒன்றாக இணைந்தன. உலகின் பணக்காரர்களின் பகட்டான சிம்பல் உருவாகியது.

20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெட்ரோல் இன்ஜின் கார்கள் வேகமானதாகவும், நம்பகத்தன்மையுடனும் இருந்தன. ஆனால் அதே நேரம் அவை கொழுத்த பணக்காரர்கள் மட்டுமே சொந்தமாக்கிக்கொள்ள முடியும் எனும் அளவுக்கு யானை விலை, குதிரை விலையில் இருந்தன. சாதாரண மக்களுக்கு கார் என்ற ஒன்று வெறும் கனவாக மட்டுமே இருந்த காலம் அது.
கார் என்றாலே செல்வந்தர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒன்றாக ஒதுக்கப்பட்டிருந்த அந்த நேரத்தில்தான், சாமானியர்களும் கார் வைத்துக்கொள்ளலாம் என்ற கான்செப்ட்டோடு களத்தில் குதித்தார் ஒருவர்... அவர் யார்? அவர் உருவாக்கிய கார் எது? ப்ளீஸ் வெயிட், அடுத்த வாரம் சொல்கிறேன்.
- Euro Tech Loading...
from ஆட்டோமொபைல் https://ift.tt/KgBziH2
0 Comments