அன்று
சென்ற வாரம் யூரோ டெக்கில் அதுவரை வசதி படைத்த செல்வந்தர்களுக்கு மட்டுமே சொந்தமாக இருந்த கார்களை ஒருவர் சாமானியர்களுக்கும் கொண்டு சேர்த்தார் என்று சொல்லி இருந்தேன் அல்லவா? அவர் வேறு யாருமே இல்லை, அமெரிக்காவைச் சேர்ந்த ஹென்றி ஃபோர்டு!
சிறுவனாக இருந்ததிலிருந்தே கடிகாரங்களைப் பழுதுபார்ப்பது, இயந்திரங்களில் டிங்கரிங் வேலைகளைச் செய்வது என ஹென்றி ஃபோர்டு இயந்திரங்களை மிகவும் நேசித்தார். குதிரை வண்டிகளை எல்லாம் ஓரம் கட்டி விட்டு, சாதாரண மனிதர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் எளிய, விலை குறைந்த அதே நேரம் சிறப்பான கார்களை உருவாக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது.

அதற்காக படிப்படியாக உழைத்த ஃபோர்டு தனது சொந்த நிறுவனமான ஃபோர்டு மோட்டார் நிறுவனத்தின் உலகளாவிய Ford T மாடல் காரை 1903-ல் முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். 20 Horsepower, நான்கு சிலிண்டர் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்த இந்த கார்கள் மணிக்கு 45 மைல் வேகத்தை எட்டின. அதுவரை செல்வந்தர்களுக்கு என்று மட்டுமே இருந்த காரை சாமானியன் கைகளுக்கும் கொண்டு சேர்த்தது ஃபோர்டு உருவாக்கிய T Model Cars.
ஹென்றி ஃபோர்டு ஆட்டோமொபைலைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், நவீன உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் திட்டங்களை உருவாக்கிய பெருமை அவரையே சாரும். கன்வேயர் பெல்ட் அசெம்பிளி லைன்களை (Moving Assembly Line) அறிமுகப்படுத்தியதன் மூலம், உற்பத்தி முறையை முற்றாக மாற்றினார். ஃபோர்டின் இந்தக் கண்டுபிடிப்பு ஆட்டோமொபைல்களை உற்பத்தி செய்வதற்குத் தேவையான நேரத்தையும் செலவையும் வெகுவாகக் குறைத்து, அவற்றின் உற்பத்தி செலவையும் குறைத்ததால், கார்களை மிகவும் மலிவு விலையில் வெகுஜனங்களுக்கு அணுகக்கூடியதாக மாற்றியது. இன்றும் பெரும்பாலும் எல்லா உற்பத்தி நிறுவனங்களிலும் பயன்படுத்தப்படும் கன்வேயர் பெல்ட் அசெம்பிளி லைன்கள் அன்று ஃபோர்டு உருவாக்கிய சக்ஸஸ் ஃபார்முலாதான்.

பல அமெரிக்கர்களுக்கு மட்டுமல்ல உலகெங்கிலும் மலிவு விலையில் கார்களை உருவாக்க முதல் விதையைப் போட்டது ஃபோர்டு நிறுவனம்தான். இவர்கள் தங்கள் கார்களுக்குத் தனியாக விளம்பரம் செய்யவில்லை, மாறாக அதிலும் புதுமையைப் புகுத்தி, முதன் முதலாக அவர்களின் டீலர்ஷிப்கள் மூலம் தமக்கான விளம்பரத்தை மக்கள் மத்தியில் தேடிக்கொண்டார்கள்.
ஆட்டோமொபைலில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்த ஃபோர்டு கார்களைத் தொடர்ந்து பல புதிய நிறுவனங்கள் கார் உற்பத்திச் சந்தையில் குதித்தன. அதில் மிக முக்கியமான ஒன்று BMW. கார் என்று வரும் போது எப்படி பென்ஸ் என்ற பெயரே ஒரு பிரமிப்பையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்துகிறதோ அதற்குச் சிறிதும் குறைவில்லாத மரியாதையையும் சிலிர்ப்பையும் கொடுக்கும் இன்னொரு பெயர் BMW.
உலக ஆட்டோமொபைல் ராஜ்ஜியத்தின் அசைக்க முடியா பேரரசன், இன்றும் கோடிகளில் விலை நிர்ணயம் செய்தாலும் முன் பதிவு செய்யவே உலகக் கோடீஸ்வரர்கள் கூட்டம் முண்டியடிக்கும் 'Prestigious Iconic Brand' இது. கப்பல் போல மிதக்கும் சொகுசு காரோ இல்லை சாலைகளில் தீப்பிடிக்கப் பறக்கும் ரேசிங் காரோ எதுவானாலும் உலகின் ஜாம்பவான்களோடு நேருக்கு நேர் மோதும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் கொண்ட இது, ஆட்டோமொபைல் துறையில் யாரும் தொட முடியாத உயரத்தில் இன்று வரை நிலைத்து நிற்கிறது. அப்படிப்பட்ட இந்தப் பெருமைமிகு BMW பிறந்ததும் ஜெர்மனியில்தான்!
முதலாம் உலகப் போர் சமயத்தில், ஜெர்மனியின் முனிச் நகரின் தொடங்கப்பட்ட BMW நிறுவனம் உண்மையில் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே ஜெர்மனியின் விமானப் படையின் போர் விமானங்களுக்குத் தேவையான இன்ஜின்களைத் தயாரிக்கத்தான். முதல் உலகப்போரின் முடிவில் ஜெர்மனி தோல்வியின் பின்னர் போடப்பட்ட வேர்சயிள்ல்ஸ் உடன்படிக்கையில் ஜெர்மனி போர் விமானங்களைத் தயாரிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. சரி இப்போது என்ன பண்ணலாம் என்று யோசித்த BMW, 1928 முதல் கார் உற்பத்தியை ஆரம்பித்தது. BMW Dixi என்ற முதல் காரே அதிரி புதிரியாக வெற்றி பெற்றது. அன்று முதல் உலகப்போர் உச்சக் கட்டத்திலிருந்த போது சீறிப் பாய்ந்த ஜெர்மனின் போர் விமானங்களின் இன்ஜினாகட்டும், இல்லை ஃபார்முலா 1 பந்தயத்தில் தீப்பொறி பறக்க வெற்றி பெற்ற கார் இன்ஜினாகட்டும் எல்லாமே BMW-தான்.

இப்போதுதான் எலெக்ட்ரிக் கார்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரபலமாகிக்கொண்டு வருகின்றன. ஆனால் 1972களிலேயே BMW முதல் எலெக்ட்ரிக் கார்களைத் தயாரித்துவிட்டது. அதேபோல பணக்காரர்களின் சாய்ஸாக இருக்கும் மினி கூப்பர், ரோல்ஸ் ராய்ஸ் கூட BMW-வின் தயாரிப்பே! ஸ்திரத்தன்மை, கட்டுப்பாடு, வேகம் போன்ற காரணங்களுக்காகவே இரும்புக் குதிரை என்று அழைக்கப்படும் BMW-வின் இடத்தை இதுவரை யாராலுமே எட்டிப் பிடிக்க முடியவில்லை.
அதேபோல 1900-களில் ஆட்டோமொபைல் துறையில் புரட்சிகரமான மற்றொரு மைல்கல்லைப் பதித்தது ஜெர்மனியின் மற்றுமொரு அதிரடி தயாரிப்பான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen). அதன் எளிமையான தொடக்கத்திலிருந்து, ஆட்டோமொபைல் தொழில்துறையில் ஓர் அதிகார மையமான தற்போதைய நிலை வரை வளர்ந்த ஃபோக்ஸ்வேகனின் வரலாறு ஒரு ரோலர் கோஸ்டர் போலப் பல மேடு பள்ளங்களால் நிறைந்தது.
ஹிட்லரின் கை ஜெர்மனியில் ஓங்கியிருந்த சமயம், அமெரிக்கர்கள் போல என் நாட்டிலும் ஒவ்வொரு வீட்டிலும் கார் இருக்க வேண்டும் என்று விரும்பினார் ஹிட்லர். ஆனால் அப்போதைய நிலையில் சந்தையிலிருந்த கார்கள் எல்லாமே மிகவும் விலை கூடியதாகவும், சாமானியர்களுக்கு எட்டாத தூரத்திலும் இருந்தன.

இந்த நிலையை மாற்றி மக்கள் அனைவரும் வாங்கக்கூடிய வகையில் விலை குறைவாகவும் ஆனால் தரத்தில் எந்த சமரசமும் செய்து கொள்ளாமலும் ஒரு காரை உருவாக்கித் தருமாறு அப்போது இருந்த மிகச்சிறந்த பொறியியலாளரான ஃபெர்டினாண்ட் போர்ஷை நியமித்தார். ஜெர்மன் மொழியில் "மக்கள் கார்" என்று பொருள்படும் `ஃபோக்ஸ்வேகன்' என்ற வார்த்தையே அந்தக் காருக்குப் பெயராகச் சூட்டப்பட்டது. ஹிட்லரின் லட்சியத் திட்டத்தில் உதித்த ஃபோக்ஸ்வேகன் அவரின் கனவுகளுக்கு உயிர் கொடுத்தது.
1938 வாக்கில் அறிமுகமான முதல் ஃபோக்ஸ்வேகன் பீட்டில், ஒரு குட்டி லேடி பக் (பொன்வண்டு) போன்ற தனித்துவமான வளைந்த வடிவமைப்பு, Air-cooled Engine, சாமானியர்களும் வாங்க முடிந்த விலை போன்ற காரணங்களால், அறிமுகமான அடுத்த நொடியே மக்களின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 1939-ல் வெடித்த இரண்டாம் உலகப் போர் ஃபோக்ஸ்வேகன் கார்களின் தொடர் உற்பத்தியைச் சீர்குலைத்தது. எனவே யுத்த காலகட்டத்தில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கார் உற்பத்தியிலிருந்து ராணுவ வாகனங்கள் உற்பத்திக்கு மாறியது. அதில் வதை முகாமிலிருந்து 15,000க்கும் மேற்பட்ட அடிமை தொழிலாளர்கள் வேலை செய்தனர் என்பது துயரமான ஒரு செய்தி!
ஏப்ரல் 1945-ல், அமெரிக்கா ஜெர்மனி மீது குண்டு மழை பொழியத் தொடங்கியதில் ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலை முற்றாகத் தரைமட்டமாகியது. இரண்டாம் உலகப் போர் முடிவில் ஜெர்மனியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலை அமெரிக்கர்களால் கைப்பற்றப்பட்டு பிரிட்டிஷ் ராணுவ மேஜரான இவான் ஹிர்ஸ்ட் (Ivan Hirst_ என்பவரின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டது. சிறிது காலம் பராமரிப்பு கிடங்காகப் பயன்படுத்தப்பட்ட ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலையின் முக்கியத்துவம் இவான் ஹர்ஸ்ட்டுக்குத் தெளிவாகப் புரிந்தது. இது இப்படியே பராமரிப்புக் கிடங்காக இருந்து வீணாகக் கூடாது என்று முடிவெடுத்தவர், தொழிற்சாலையை மீண்டும் புதுப்பித்து உற்பத்தியைத் தொடங்க முடிவு செய்தார்.

மீண்டும் புதுப்பிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலை, போருக்குப் பிந்தைய ஜெர்மனியை இயக்க பிரிட்டிஷ் ராணுவத்துக்குத் தேவையான 20,000 வாகனங்களை முதலில் உற்பத்தி செய்தது. அதற்குப் பிறகு இவான் ஹிர்ஸ்ட், தொழிற்சாலையைப் பொறுப்பேற்று நடத்த ஃபோர்டு உட்படப் பல நாடுகளின் ஆட்டோமொபைல் முன்னோடிகளுக்குக் கோரிக்கை விடுத்தார். ஆனால் யாருமே ஏற்றுக்கொள்ள முன்வரவில்லை. எனவே இறுதியாக முன்னர் BMW ஃப்ளைட் இன்ஜின் கம்பெனியில் ப்ரொடக்ஷன் டைரக்டராக இருந்து இரண்டாம் உலகப்போருக்குப் பின் வேலையில்லாமல் இருந்த ஜெர்மனியைச் சேர்ந்த Heinz Heinrich Nordhoff எனும் ஆட்டோமொபைல் இன்ஜினியரை மேனேஜிங் டைரக்டராக நியமித்து, தனது பொறுப்புக்களிலிருந்து பெரிதும் விலகிக் கொண்டார் மேஜர் இவான் ஹிர்ஸ்ட்.
ஜனவரி 1, 1948 அன்று, ஃபோக்ஸ்வேகன் தொழிற்சாலையின் நிர்வாக இயக்குநராக நார்ட்ஹாஃப் பொறுப்பேற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஃபோக்ஸ்வேகன் மீண்டும் புத்துயிர் பெற்றது. அமெரிக்க பிரிட்டிஷ் முதலாளிகளால் நிராகரிக்கப்பட்ட நிறுவனம் அவர்களை எல்லாம் லெஃப்ட்டில் தள்ளி ரைட்டில் முன்னேறத் தொடங்கியது. இன்று வரை அந்தப் பயணம் ஒரு மாபெரும் வெற்றிப் பயணமாகவே தொடர்கிறது.
இன்று உலகில் விற்பனையாகும் நான்கில் ஒரு கார் ஃபோக்ஸ்வேகனுடையது. 2016-ல் டொயோட்டாவை பின் தள்ளி உலகின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக மாறியது ஃபோக்ஸ்வேகன். அந்த ஆண்டு மட்டுமே 10 மில்லியனுக்கும் அதிகமான கார்கள் விற்பனை செய்யப்பட்டன. அன்று ஹிட்லரால் போடப்பட்ட விதை, இன்று எந்தப் புயலாலும் அசைத்து விட முடியாத ஆலமரமாக விஸ்வரூப வளர்ச்சி பெற்று, உலகெங்கும் கிளை பரப்பி நிற்கிறது.

6 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக, உலகின் பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக, உலகின் முதலாவது வருவாய் அடிப்படையில் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளராக, உலகின் மிகச்சிறந்த பத்து கம்பெனிகளில் ஒன்றாக, Bugatti, Bentley, Porsche, Audi, Skoda, Lamborghini மற்றும் SEAT எனும் உலகின் தலைசிறந்த கார்களை உற்பத்தி செய்யும் நிறுவனமாக, பிரமாண்டமாக வளர்ந்து நிற்கிறது ஃபோக்ஸ்வேகன்.
- Euro Tech Loading...
from ஆட்டோமொபைல் https://ift.tt/WzSoNiK
0 Comments