இந்த மழை வெள்ள சீசனில் மெக்கானிக்குகளும், கார் சர்வீஸ் சென்டர்களும், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும்தான் எல்லோருக்கும் ஆபத்பாந்தவன்கள். இந்த நேரத்தில் அவர்களின் கைதான் ஓங்கி இருக்கும்.
"சைலன்ஸர் ஃபுல்லா தண்ணி ஏறிடுச்சு சார். ரொம்ப வேலை இருக்கு! வண்டி ரெடியாகறதுக்கு 4 நாளாகும்!"
"சிலிண்டர் ஹெட் உடைஞ்சிடுச்சு சார். சாரி... இதுல இன்சூரன்ஸ் கவர் ஆகாது!"
"இன்ஜினை போர் பண்ண வேண்டியிருக்கு. 10000 ரூபாய் ஆகிடும் சார்!" என்று 25 ரூபாய் பால் பாக்கெட்டை 45 ரூபாய்க்கு விற்பதுபோல் பேரம் பேசுவார்கள் மெக்கானிக்குகள்.
- இப்படி கெத்துக் காட்டும் சர்வீஸ் ஆட்கள் மத்தியில் காத்துக் கிடக்காமல் இருக்க சில டிப்ஸ்!

காரோ பைக்கோ... தண்ணீரில் மூழ்கி விட்டால்... A, B, C என சில அளவுகோல்கள் உண்டு.
A லெவல் என்பது தரை வரை... அதாவது சைலன்சர் வரை கார் மூழ்கி இருப்பது...
B லெவல் என்பது கார்களின் சீட் வரை மூழ்குவது...
C லெவல் என்பது காரின் டேஷ்போர்டுக்கு மேலே இருப்பது...
எப்போதுமே சைலன்சர் மூழ்கும் அளவு தண்ணீரில் வாகனம் இருந்தால்கூட, அந்த வண்டியை மறந்து போய்க்கூட ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள். நிச்சயம் ஸ்டார்ட் ஆகாது.
சிலர், 'எப்படியாச்சும் சர்வீஸ் சென்டர் வரைக்கும் போனால்கூடப் போதும்' என்று மாங்கு மாங்கு என்று கிக்கரையோ செல் ஃப் மோட்டாரையோ படுத்தி எடுப்பார்கள். இப்படி ஸ்டார்ட் ஆகாமல் இன்ஜின் லாக் ஆவதை, ‘ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்' என்பார்கள். இந்த நேரத்தில் - தயவுசெய்து திரும்பத் திரும்ப ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள். ‘க்க்ஞக்ஞகங’ என்று க்ராங்க் ஆவது இன்ஜினுக்கு நாம் செய்யும் கொடுமை. இன்ஜின் கனெக்டிங் ராடு உடைந்து, இன்ஜின் மொத்தமாக சீஸ் ஆகவும் வாய்ப்புண்டு. இல்லை, அது தான் நடக்கும். இங்கிருந்துதான் உங்களுக்குப் பிரச்னையே தொடங்குகிறது. வாசகர் ஒருவர், "வெள்ளத்தில் மூழ்கின என்னோட காருக்கு இன்ஷூரன்ஸ் தரமாட்டேங்கிறாங்க!" என்று கம்ப்ளைன்ட் செய்தார். இதில் நிறுவனத்தின் தவறு ஏதும் இல்லை, வாசகரின் தவறே அடங்கியிருக்கிறது. ஆம், இரண்டு நாட்கள் வெள்ளத்தில் மூழ்கியிருந்த காரை ஸ்டார்ட் செய்ய அவர் முயற்சித்ததுதான் காரணம்.

இன்ஜின் ஃபெயிலியர்க்கு இன்ஷூரன்ஸ் க்ளெய்மிங் செய்வதில் பல விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. இது Natural Calamities எனும் இயற்கைப் பாதிப்புப் பிரிவில் வராது. நேற்றுகூட 'பாலிசி பஜார்' மோட்டார் இன்சூரன்ஸ் பிசினஸ் ஹெட் நித்தின் குமார் இப்படிச் சொல்லியிருக்கிறார். "உங்கள் கார் வெள்ளத்தில் மூழ்கும் பட்சத்தில், உடனடியாக உங்கள் சம்மந்தப்பட்ட இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு, சர்வீஸ் சென்டருக்கு காரை Tow செய்து விடுங்கள். நீங்கள் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிப்பது ‘ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்'கை உருவாக்கிவிடும். இந்தச் செயலால் உங்கள் காருக்கு இன்சூரன்ஸ் க்ளெய்ம் கிடைக்காது!" என்று சொல்லியிருக்கிறார் நித்தின்.
சிலர் இன்ஷூரன்ஸ் எடுப்பதில் அவசரம் காட்டுவார்கள். ‘இன்னைக்கு டேட் முடியப் போகுது; எடுத்தாகணும்’ என்கிற அவசரத்தில், சட்டுபுட்டுனு எடுத்து விடுவார்கள். சில நிறுவனங்கள் நமக்கு ரிமைண்டர் கால் எல்லாம் செய்து நினைவுபடுத்தி எடுக்க வைப்பார்கள். நாமும் அவசரத்தில் ஓகே சொல்லி விடுவோம்.
வாகனங்களுக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒரு வாகனத்துக்கு நீங்கள் ஸ்டாண்டர்டு இன்ஷூரன்ஸ் எடுத்தால், அது இன்ஜினுக்கு கவர் ஆகாது. வாகனம் திருடு போவது, விபத்தில் சிக்கி சேதாரமாவது, மற்ற நபர்களுக்கான மூன்றாம் நபர் க்ளெய்மிங் (இதற்கு 3rd பார்ட்டி காப்பீடு அவசியம்), இயற்கைச் சீற்றங்களால் சேதாரம் ஆவது போன்ற பல விஷயங்களுக்கு நீங்கள் சாதாரணமாக க்ளெய்ம் வாங்க முடியும். அதற்கும் சிலர் மூச்சு முட்டப் போராடுவதைப் பார்த்ததுண்டு!

ஒரு காரின் இன்ஜின் பழுதாவது என்பதற்கு விபத்தாக வேண்டும்; இயற்கைச் சீற்றங்களில் பாதிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமில்லை; சாதாரண பார்க்கிங் ஏரியாவில் கார் நின்று எலி கடித்தால்கூட இன்ஜின் பாகங்கள் சேதாரம் ஆகும் வாய்ப்புண்டு. இது தவிர எலெக்ட்ரிக்கலாக, மெக்கானிக்கலாக ஏற்படும் கோளாறுகளாலும் இன்ஜின் பழுது ஏற்படும். ‘இன்ஜின் ஃபெயிலியரா… நோ’ என்று இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் கைவிரித்து விடும். நீங்கள் இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, நன்றாகப் படித்துப் பார்த்துத்தான் பாலிசி எடுக்க வேண்டும். முக்கியமாக Comprehensive Insurance என்பதில் கவனமாக இருங்கள். இதில் கூட எல்லா பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பாகங்களுக்கு 50 % Depreciationதான் அப்ளிகபிள். அதாவது, 50% பாலிசி ஹோல்டரே செலவு செய்ய வேண்டும். அதேபோல் Standalone Comprehensive policy எல்லா பாதிப்புகளையும் கவர் செய்யாது என்பதைக் கவனிக்க வேண்டும்.
கூடவே இதற்கென சில Add-on கவரேஜ் பாலிசியாக வழங்கி வருகின்றன இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள். இதை நீங்கள் க்ளிக் செய்து விட்டால் எல்லா ப்ராப்ளமும் சால்வ்டு. சில நிறுவனங்களின் பாலிசிகளில், Engine Protection Cover என்றொரு Add-on இருக்கும். இதை நீங்கள் டிக் அடித்து விட்டால் எந்தப் பிரச்னையும் இல்லை. Engine protection Cover என்கிற Add on நீங்கள் எடுத்திருந்தால், இன்ஜின் விபத்துக்கு உள்ளாகாமல் பழுதடைந்தாலும்கூட காப்பீடு பெற இயலும். உதாரணத்துக்கு – வெள்ளத்தின் போது மட்டுமில்லை, லூப்ரிகன்ட் ஆயில் லீக்கேஜ்கள், ஹைட்ரோஸ்டேட்டிக் லாக் பழுதுகள் போன்றவற்றுக்கு நிச்சயம் காப்பீடு உண்டு.

இந்த மழை நேரங்களில் தண்ணீரோடு இன்னும் சில சிக்கல்களும் ஏற்படும். எலிகள், ஆம் எலிகளால் வாழ்ந்த கார் உரிமையாளர்கள் யாரும் இல்லை. அவர்களுக்காகவும் ஒரு ஆப்ஷன் இருக்கிறது. Consumables Protection Clause என்றொரு கவர். இதன் கீழ் எலி கடிப்பதால் ஏற்படும் நஷ்டத்துக்குக் காப்பீடு கிடைக்கும். எனவே, இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது கவனமாக இருங்கள்.
from ஆட்டோமொபைல் https://ift.tt/4npibSa
0 Comments