தமிழக காவல்துறை எப்போதுமே டிராஃபிக் விஷயத்தில் அலெர்ட் ஆகத்தான் இருக்கும். அதாவது, எல்லாம் நடந்து முடிந்த பிறகு! ஆனால் ஒரு பாராட்ட வேண்டிய விஷயம். இப்போது நிஜமாகவே அலெர்ட் ஆகி, அதிரடியாகக் காய் நகர்த்தக் காத்திருக்கிறது தமிழகப் போக்குவரத்துக் காவல்துறை. அதாவது, TTF வாசனின் விபத்துக்கும் கைதுக்கும் பிறகு கொஞ்சம் மூளையைக் கசக்கிக் கொண்டிருக்கிறார்கள் காவல்துறையினர்.
அதைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள பைக் ரைடர்களையும், Vlogger–களையும் நோட் செய்து வைத்திருக்கிறது. அதில் மாநிலம் முழுவதும் 92 பேர் அடங்கிய பைக் ரைடர்களுக்கு ஸ்கெட்ச் போட்டிருக்கிறது. இவர்கள் அனைவரும் யூடியூப், இன்ஸ்டா, ஃபேஸ்புக் போன்ற சோஷியல் மீடியா வலைதளங்களில் பல லட்சம் ஃபாேலோயர்கள் கொண்டவர்கள். அந்த வலைதளங்களில் இருந்து இப்போது முறையற்ற பைக் சாகச வீடியோக்களை டவுன்லோடு செய்து கொண்டிருக்கிறது காவல்துறை.

அண்மையில் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டிசத்திரத்தில் விபத்து ஏற்படுத்தி, படுகாயமடைந்த TTF வாசனின் கைதைத் தொடர்ந்து, அவரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு, அவருக்குப் பைக் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுத் தீர்ப்பளிக்கப்பட்டது. இருந்தாலும், அவர் ‘இன்டர்நேஷனல் லைசென்ஸை வைத்து நான் தமிழ்நாட்டில் பைக் ஓட்டுவேன்’ என்று சொன்னதில் இன்னும் கடுப்பாகி இருக்கிறதாம் காவல்துறை.
அதைத் தொடர்ந்து TTF வாசனைப் போன்றே சமூகவலைதளங்களில் அட்ராசிட்டிகள் செய்யும் ரைடர்கள், Vlogger–களை ஸ்கெட்ச் போட்டுத் தூக்க முடிவெடுத்திருக்கிறதாம் காவல்துறை. என்னதான் கைதாகி வெளியே வந்திருந்தாலும், வாசனுக்கு இருக்கும் 4 மில்லியன் சப்ஸ்க்ரைபர்கள் மத்தியில் அவருக்குப் பெரிய பெயர் இழப்பு இல்லை என்கிற ரீதியில் மீம் கன்டென்ட்கள் உருவாகி வந்து கொண்டிருக்கின்றன. ‘தசாவதாரம்’ படத்தில் வரும் ‘ராஜனுக்கு ராஜன் இந்த டிடிஎஃப் வாசன்தான்’ என்கிற பாடல் வரிகளைப் போட்டு வாசனை உயர்த்திப் பிடிக்கும் மீம்கள், இன்னும் பீதியை ஏற்படுத்துகின்றன. அதாவது வாசன் அச்சுறுத்தும் வகையில் பைக் ஓட்டித் தவறு செய்துவிட்டுத்தான் தண்டனை பெற்றிருக்கிறார் என்றே அறியாத அவரது 4 லட்சம் ஃபாலோயர்களும் இப்படிப் பொங்குகின்றனர். இந்த ஃபாலோயர்களில் முக்கால்வாசிப் பேர் 18 வயதுகூட நிறைவடையாத பாலகர்கள் என்பது கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

எனக்கே ஒரு சம்பவம்... அண்மையில் 15 வயதே ஆகாத ஒரு சிறுவன், சாலையில் பைக் ஓட்டிக் கொண்டு வந்தவனைப் பிடித்து விசாரித்தால், ‘‘டிடிஎஃப் வாசன் டை ஹார்டு ஃபேனுங்க நான்’’ என்று ஆக்ஸிலரேட்டர் முறுக்கிப் பறந்தபோது பீதியாகத்தான் இருக்கிறது. 18 வயது பூர்த்தியான பிறகே, முறையான டிரைவிங் லைசென்ஸ் எடுத்தபிறகே, நம் குழந்தைகளுக்கு வாகனங்களை ஓட்டத் தர வேண்டும் என்று பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதைச் சொல்கிறேன்.
நிலைமை இப்படி இருக்கையில், முக்கியமாக பைக் ஸ்டன்ட் செய்பவர்கள், சாகசம் என்கிற பெயரில் சாலைகளில் அட்ராசிட்டிகள் செய்து வீடியோ போடுபவர்களைக் கைது செய்தாலே பாதி விபத்துகள் குறையும் என்று முடிவெடுத்திருக்கிறது காவல்துறை. திட்டமிட்டுப் போடப்பட்டிருக்கும் இந்த ஸ்கெட்ச்சுக்குப் பிறகு, பல பைக் ரைடர்கள் பீதியில் இருக்கிறார்களாம்.
சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண், ரைடர்களாக இருந்தாலும், Vlogger–களாக இருந்தாலும் – சாலை விதிகளை மீறி வீடியோ பதிவிடுபவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.
கோவையில் பேசிய அவர், ‘‘அவர்கள் முறையாக வி–லாக் செய்து வீடியோ போடுவதில் பிரச்னை இல்லை. மற்றவர்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோக்கில் பைக் ஓட்டுவதுதான் இங்கு பெரிய சிக்கலாக இருக்கிறது! இது தெரியாமல், பள்ளிச் சிறுவர்கள் இந்த பைக் ரைடர்கள்தான் ரியல் லைஃப் ஹீரோக்கள் என்கிற கற்பனையில் இருக்கிறார்கள். இது அவர்களையும் தவறு செய்யத் தூண்டுகிறது!’’ என்று சொல்லியிருக்கிறார்.

இதைத் தொடர்ந்துதான் அந்த 92 பேர் அடங்கிய லிஸ்ட்டில், யாரெல்லாம் விதிகளை மீறி அச்சுறுத்தும் வகையில் பைக் சாகசம் செய்து வீடியோ பதிவிட்டு இருக்கிறார்களோ… அதைச் சாட்சியாக வைத்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் காத்திருக்கிறது காவல்துறை.
இதன் முதல் படியாகவோ என்னவோ, தீபாவளி அன்று பைக்கில் பட்டாசு வெடித்தபடி சிட்டாகப் பறந்து வீடியோ வெளியிட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த கள்ளாங்காடு பகுதியைச் சேர்ந்த அஜய் எனும் இளைஞரைக் கைது செய்திருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து, இதே சாகசத்தில் ஈடுபட்ட தஞ்சாவூரைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரையும் தேடி வருகிறதாம் போலீஸ்.
எனவே ஒற்றைக் கையில் பைக் ஓட்டுவது, ஹெல்மெட் இல்லாமல் அதிவேகத்தில் பறப்பது, வீலிங் செய்வது, ஸ்டாப்பி பண்ணுவது, ஹைவேஸில் செல்ஃபி எடுத்துக் கொண்டே பறப்பது – இது மாதிரி தப்பெல்லாம் பண்ணாதீங்க மக்கா!
from ஆட்டோமொபைல் https://ift.tt/vhcZIXF
0 Comments