சென்னை மாநகரில் இப்போது டிராஃபிக் சம்பந்தமான விதிமுறைகளும், தானியங்கி கேமரா பதிவுகளும் கொஞ்சம் கடுமையாக்கப்பட்டதிலிருந்து, ஹெல்மெட் போடாதவர்களைப் பார்ப்பதே ரொம்பவும் அரிதாகிவிட்டது என்பது நல்ல விஷயம்தான். (ஆனால் ஓவர்ஸ்பீடில் போகும் பசங்களைப் புடிக்க ஏதாச்சும் டெக்னாலஜி கண்டுபிடிச்சா நல்லது!)
சம்பவம் 1:
ஓகே! அண்மையில் நடந்த முதல் சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். சென்னையைச் சேர்ந்த மிடில் க்ளாஸ் நபர் கணேஷ். (பெயர் மாற்றப்பட்டுள்ளது). டெலிவரி மேனாக வேலை பார்க்கும் அவர் ஊரிலிருந்து தனது ஹீரோ பேஸன் ப்ரோ பைக்கை சென்னைக்கு எடுத்து வந்து ஓட்டிக் கொண்டிருக்கிறார். பைக் கொஞ்சம் பழசாகிவிட்டது என்பதால், அதை விற்றுவிட்டு வேறு நல்ல மைலேஜ் கிடைக்கும் பைக்காக வாங்குவது திட்டம். அந்த பைக்கை ஷோரூமில் எக்ஸ்சேஞ்சுக்குக் கொடுத்தபோது, 9,000 ரூபாய்க்கு அதிகமாக பத்து ரூபாய்கூடத் தரமாட்டோம் என்றவர்கள், தங்கள் நிறுவனத்திலேயே புது பைக் எடுத்தால் வேண்டுமானால், 10,000 ரூபாய்க்கு எக்ஸ்சேஞ்ச் எடுத்துக் கொள்வதாகச் சொல்லியிருக்கிறார்கள்.

ரொம்பக் கம்மியா இருப்பதாக ஃபீல் செய்தவர், தனது மெக்கானிக் மூலம் முயற்சி செய்ய… 'ஒரு நல்ல பார்ட்டி வருது; 14,000 ரூபாய்க்கு முடிச்சுக்கலாம்னு டீல் பேசுறாங்க’ என்று பால் வார்த்தது போல் சொல்லியிருக்கிறார் மெக்கானிக். ‘அட, 4,000 ரூபாய் லாபமா இருக்கே; மிச்சத்துக்கு மெஸ் பீஸ் கட்டிடலாம்’ என்று உடனடியாக டீலை ஓகே செய்திருக்கிறார். பைக்கை செகண்ட் ஹேண்டில் வாங்கும் பார்ட்டியானவர், இந்த பேஸன் ப்ரோ பைக்கின் நம்பை பரிவாஹன் ஆப்பில் பதிவு செய்து சோதனை செய்தால், அடக் கொடுமையே… இந்த வண்டியின் பெயரில் 18,000 ரூபாய் சென்னை போக்குவரத்துக் காவல்துறைக்கு அபராத நிலுவைத் தொகை இருப்பதாகக் காட்டியது.
‘என்னடா இது வம்பாப் போச்சு; 4,000 ரூபாய் லாபம் பார்க்கலாம்னு பார்த்தா, இப்போ நான் 4,000 ரூபாய் அவருக்குத் தர வேண்டியிருக்கே’ என்று திணறிக் கொண்டிருக்கிறார் கணேஷ். ஒண்ணு ரெண்டு தடவை ஹெல்மெட் போடாமல் போனது, சிக்னலைத் தாண்டியது, ட்ரிப்பிள்ஸ் அடித்தது – என்று கணேஷும் உண்மையை ஒப்புக் கொள்கிறார்.
சம்பவம் 2:
தென்மாவட்டத்தில் புதிதாகக் கல்யாணம் ஆன நண்பர் ஷ்யாம்குமார் என்பவர், சென்னைக்கு மனைவியுடன் ஊர் சுற்றிப் பார்க்க வந்திருக்கிறார். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) செலவை மிச்சப்படுத்துவதற்காக, சென்னையில் உள்ள தனது நண்பனின் அப்பாச்சி பைக்கைக் கடன் வாங்கி டேங்க்கை ஃபில் பண்ணிக் கொண்டு, மனைவியோடு ஜாலியாக ஈசிஆர் பக்கம் போயிருக்கிறார். மனைவிக்கு ஹெல்மெட் இல்லை; கடமை தவறாத காவல்துறையினர் அவர்களை ஹெல்மெட்டும் பைக்குமாகப் பிடித்து… ‘‘இந்தாங்க புடிங்க சலான்’’ என்று அபராதத் தொகையை நீட்டியிருக்கிறார்கள்.

சலானைப் படித்தவருக்கு அதிர்ச்சி – என்னது 12,000 ரூபாயா! ‘‘ஹெல்மெட் போடாததுக்கு 12,000 ரூபாய் ஃபைனா; என்னங்க அநியாயம்’’ என்று புது மாப்பிள்ளைக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. அப்புறம்தான் தெரிந்தது – அந்த அப்பாச்சி பைக்கின் பெயரில் உள்ள நிலுவை அபராதத் தொகைதான் மீதமுள்ள 11,000 ரூபாய். ‘மொத்த அபராததத்தையும் கட்டினால்தான் பைக் கிடைக்கும்; இல்லேன்னா அப்புறமா ஃபைனைக் கட்டிட்டு கோர்ட்ல வாங்கிக்குங்க’ என்று பைக் சாவியைப் பையில் போட்டு, சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டது காவல்துறை. நண்பனின் அப்பாச்சிக்காக அந்த அபராதத் தொகையைக் கட்டியிருக்கிறார் அந்த அப்பாவிப் புது மாப்பிள்ளை.
இந்தச் சம்பவங்கள் மூலம் உங்களுக்குக் கொடுக்கப்படும் ஒரு டிப்ஸ் என்னவென்றால், எதற்கும் அடிக்கடி பரிவாஹன் வலைதளத்தில் உங்களுக்கு நிலுவை அபராத சலான் இருக்கிறதா என்று அடிக்கடி செக் செய்து கொள்ளுங்கள்.
நம் மொபைலில் இருந்தே இதைச் சோதனை செய்து அபராதத்தைச் செலுத்திவிட முடியும். நீங்கள் கூகுளில் Pariwahan Sewa என்று டைப் செய்யுங்கள். அல்லது https://echallan.parivahan.gov.in/index/accused-challan என்கிற இணையதளத்துக்குச் செல்லுங்கள். அங்குள்ள Pay online எனும் ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். பிறகு 3 விதமான வழிகளில் உங்கள் அபராதத் தொகையைக் கண்டுபிடிக்க ஆப்ஷன் தெரிவிக்கப்படும். உங்களுக்கு அபராத சலான் இருந்தால், அதிலுள்ள நம்பரை வைத்து எளிதில் கட்டிவிட முடியும். இல்லையென்றால், உங்கள் வாகனத்தின் ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர், இன்ஜின் அல்லது சேஸி எண்ணில் கடைசி 5 எண்களை வைத்தும் தேடிக் கொள்ளலாம்.

இன்னொரு ஆப்ஷன் – உங்கள் டிரைவிங் லைசென்ஸ் நம்பரை வைத்தும் உங்களுக்கு ஏதும் அபராதம் இருக்கிறதா என்றும் தேடிக் கொள்ளலாம். உள்ளே போனால், நீங்கள் எத்தனை முறை விதிமீறலில் ஈடுபட்டு இருக்கிறீர்கள், எவ்வளவு அபராதத் தொகை கட்ட வேண்டும் என்கிற தகவல்கள் இருக்கும்.
இதை நீங்கள் கண்டுகொண்ட பிறகு, கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு அல்லது ஆன்லைன் பேங்கிங் மூலம் நீங்கள் அப்படியே பணத்தைக் கட்டி ரசீதை ப்ரின்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம்.
காவல்துறையின் இந்தக் கடமை உணர்ச்சியைப் பற்றி உங்களுக்குக் கமென்ட்கள் இருந்தால் சொல்லுங்களேன்!
from ஆட்டோமொபைல் https://ift.tt/OITfyRt
0 Comments