Ola: `ஓலாவுக்கு ‘ஓ’ போடலாமா?' ரூ.1 லட்சத்துக்கு வருது ஓலாவின் அடுத்த ஸ்கூட்டர்; என்ன ஸ்பெஷல்?

ஒரு முடிவோடுதான் இருக்கிறது ஓலா. ஆம், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் டாப்–1–ல் வர வேண்டும் என்பது மட்டுமில்லாமல், பெட்ரோல் ஸ்கூட்டர்களின் விற்பனையையே அடியோடு அழித்துவிட வேண்டும் என்கிற முனைப்பில் இருப்பதுபோல் தெரிகிறது.

இது பழிவாங்கும் விஷயமாகத் தெரிந்தாலும், போகும் இடமெல்லாம் இதை மகிழ்ச்சியாகவே உறுதி பூண்டு வருகிறார் ஓலாவின் நிறுவனர் பவிஷ் அகர்வால். பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு எதிரான மீம் கன்டென்ட்களுக்கு இ–ஸ்கூட்டர் பரிசளிப்பது, அதிக ரேஞ்ச் தருமாறு ஓட்டுபவர்களுக்கு ஓலாவின் ப்ரோ ஸ்கூட்டர் தருவது என்று எலெக்ட்ரிக்குக்கு மாறுபவர்களை உச்சிமோந்து வருகிறார். 

‘எல்லாம் ஓகே! விலைதான் பாஸ் இடிக்குது’ என்று புலம்பியபடி மறுபடியும் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் பக்கம் செல்லும் பட்ஜெட் பார்ட்டிகளைக் கவர்ந்தால்தான் இந்த மார்க்கெட்டில் வெற்றி பெற முடியும். ரூ.1.75 லட்சம் ரூபாய் இல்லாமல் ஒரு இ–ஸ்கூட்டர் வாங்க முடிவதில்லை. இதைப் புரிந்து கொண்ட ஓலா – இதற்காகவே,  S1 Air என்றொரு விலை குறைந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இதன் விலை 1.10 லட்சம் எக்ஸ் ஷோரூம். ஏத்தரும் சமீபத்தில் ஏத்தர் 450S என்றொரு விலை குறைந்த (ரூ.1.30 லட்சம்) மாடலை அறிமுகப்படுத்தியது. 

Ola ( Representational Image)

இந்த நேரத்தில் இன்னோர் அதிரடியையும் செய்யவிருக்கிறது ஓலா. ஆம், S1 Air மாடலைவிட இன்னும் விலை குறைந்த ஸ்கூட்டர் ஒன்றை அறிமுகப்படுத்தப் போகிறது. அதற்கான ஸ்கூப் செய்திகள்தான் வலைதளங்களில் புரள ஆரம்பித்திருக்கின்றன. இதன் பெயர் S1X. ‘குறைந்த விலைனு சொன்னீங்களே’ என்று நீங்கள் சொல்வது கேட்கிறது. இதை ரூ.1 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலையில் கொண்டு வரவிருக்கிறார்களாம். வரும் ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று S1X மாடலை லாஞ்ச் செய்து – டெலிவரி பற்றிய விஷயங்களையும், டெக்னிக்கல் அம்சங்களையும் பக்காவாக அறிவிக்க இருக்கிறதாம் ஓலா. 

விலையைக் குறைச்சுட்டு, மற்ற விஷயங்களில் ரொம்பவும் கை வெச்சுடக் கூடாது என்பதற்காக பல விஷயங்களைப் பார்த்துப் பார்த்துச் செய்கிறது ஓலா. இந்த S1X ஸ்கூட்டரின் ரேஞ்ச், சுமார் 100 கிமீ–க்குக் குறையாமல் பார்த்துக் கொள்ளுமாம். இதுவே S1 ஏர் மாடல், 125 கிமீ என்று க்ளெய்ம் செய்கிறார்கள். அப்படியென்றால், ரியல் டைமில் ஒரு 80 கிமீ கொடுத்தாலே பட்ஜெட் பார்ட்டிகளுக்குக் கொஞ்சம் இனிப்பான விஷயம்தான். 

ஓலா எஸ்1 ஏர்

டிசைனிலும் காம்ப்ரமைஸ் செய்யக்கூடாது என்பதற்காக – இதை ஸ்லிம் அண்ட் ஸ்லீக் மற்றும் மினிமலிஸ்ட்டிக் டிசைனில் கொண்டு வரவிருக்கிறார்கள். மற்றபடி அதே எல்இடி லைட் செட்அப் மற்றும் டிஆர்எல் யூனிட்தான் இந்த ஸ்கூட்டரிலும் இருக்கலாம். ரியர் டெயில் லாம்ப்பும் அதே இருக்கலாம். இதற்குக் காரணம் இருக்கிறது – என்னவென்றால், ‘ஓலா ஸ்கூட்டர்னாலே இப்படித்தான் இருக்கும்’ என்று ஒரு டிசைன் மொழியை மக்கள் மனதில் பதிய வைக்க இருக்கிறதாம் ஓலா. இதில் காஸ்ட்லியான எஸ்1 ப்ரோ ஸ்கூட்டரைவிட லோ ரெசொல்யூஷன் கொண்ட டேஷ்போர்டு ஸ்க்ரீன் இருக்கும். S1 ப்ரோ அளவு இல்லையென்றாலும், சில அடிப்படை வசதிகள் மட்டும் நிச்சயமாக இருக்கும். 

முன் பக்கம் டெலிஸ்கோப்பிக் சஸ்பென்ஷன் மற்றும் பின் பக்கம் கேஸ் சார்ஜ்டு ட்வின் ஷாக் அப்ஸார்பர்கள் இருக்கும். இதில் நிச்சயம் டிஸ்க் பிரேக்ஸ் இருக்காது என்கிறார்கள் சில நண்பர்கள். அதேபோல், விலை குறைந்த ஸ்கூட்டராச்சே… அலாய் வீல்ஸும் எதிர்பார்க்க முடியாதுபோல!

மற்றபடி இதில் புளூடூத் கனெக்டிவிட்டி, நேவிகேஷன் (குறைந்தபட்சம் டர்ன் பை டர்ன்), இன்டர்நெட் கனெக்டிவிட்டி போன்ற சில எக்யூப்மென்ட் லிஸ்ட் வசதிகள் இருக்குமா என்பதும் இப்போதைக்குத் தெரியவில்லை. ஆனால், இந்த வசதிகளைக் கொடுத்தால் ஓலாவுக்கு நிச்சயம் ‘ஓ’ போடலாம். காரணம், இனிமேல் 125 சிசி ஸ்கூட்டர்களை வாங்கும் விலைக்கு ஓலாவை வாங்கலாம் என்பது ஸ்வீட் நியூஸ்தானே!



from ஆட்டோமொபைல் https://ift.tt/NSaKI8u

Post a Comment

0 Comments

o