Video: பச்சை நிற BMW, சாம்பலாக மாறிய சம்பவம்! காஸ்ட்லி கார் தீப்பிடிக்கக் காரணம் என்ன?

இப்போதெல்லாம் எலெக்ட்ரிக் வாகனங்களோடு பெட்ரோல்/டீசல் வாகனங்களும் அங்கங்கே தீப்பிடித்து எரிந்து அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. அதுவும் காஸ்ட்லி கார்களும் இதில் விதிவிலக்கில்லை என்பதுதான் இன்னும் பேரதிர்ச்சியான விஷயமாகி இருக்கிறது. 

இன்று காலை சென்னையில் ஒரு சம்பவம். செம ஸ்டைலான பச்சை நிற BMW GT ரக சொகுசு கார் ஒன்று, நடுரோட்டில் தீப்பிடித்து சாம்பலாக மாறிப் போன வீடியோ ஒன்று வலைதளங்களில் வைரலாகப் போய்க் கொண்டிருக்கிறது. சென்னை குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலையில் காலைவேளைப் பரபரப்பில் இந்தச் சம்பவத்தால், கிட்டத்தட்ட அரைமணி நேரத்துக்கும் மேலாக டிராஃபிக் ஜாம் வேறு ஆகி பீதியைக் கிளப்பியிருக்கிறது. இந்த வீடியோவை நித்தேஷ் ரத்தோர் என்பவர், தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 37 வயதான அருண் பாலாஜி என்பவர்தான் இந்த பிஎம்டபிள்யூ GT காரின் உரிமையாளர். திண்டிவனத்துக்குப் பயணம் போகும்போதுதான் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால், அருண் பாலாஜி தனது நண்பருடன் வேறு ஒரு காரில் பயணிக்க, இந்தப் பச்சை நிற பிஎம்டபிள்யூ காரை ஓட்டியவர், அவரின் டிரைவர் பார்த்தசாரதி. திருவல்லிக்கேணியில் இருந்து குரோம்பேட்டை பஸ் நிலையத்துக்குப் பக்கத்தில் வந்தபோது, திடீரென காரின் பானெட்டுக்கு அடியில் இருந்து புகை மண்டலமாகக் கிளம்பிவர, சற்று நிதானித்திருக்கிறார் பார்த்தசாரதி. ஏதோ ஒரு பிரச்னை என்பதை யூகித்துக் கொண்ட பார்த்தசாரதி, காரை சட்டென நடுரோட்டில் விட்டு அப்படியே இறங்கிய அடுத்த சில நிமிடங்களில்… தபதபவென கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்திருக்கிறது. 

BMW Car Fire

உடனே தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிந்துவந்து, காரை அணைத்து முடிப்பதற்குள், கார் முழுவதுமாக சாம்பலமாகப் போனது பார்க்கவே கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. நல்லவேளையாக புத்திசாலித்தனமாக பார்த்தசாரதி அதில் இருந்து இறங்கித் தப்பித்திருக்கிறார். இதுபோன்ற எலெக்ட்ரானிக் தொழில்நுட்பங்கள் அதிகம் கொண்ட காரில், சென்சார்கள் அதிகம் என்பதால், கொஞ்சம் சென்சிட்டிவ் ஆகவே இருக்கும். அதனால், உள்ளே டோர் லாக் ஆக வாய்ப்புண்டு. இருந்தாலும், கோடி ரூபாய் சொகுசு கார் எப்படித் தீப்பிடித்து எரியும் என்பதுதான் பலரது கேள்வியாக இருக்கிறது.

ஒரு கார் தீப்பிடிப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அந்த வீடியோ பதிவின் கமென்ட் செக்ஷனில் முக்கியமாக எல்லோரும் அந்த காரின் மாடிஃபிகேஷன்களைப் பற்றித்தான் சொல்லியிருந்தார்கள். அதாவது, மிக ஸ்டைலாக அந்த கார் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு காரை மாடிஃபிகேஷன் செய்யும்போது, அதில் ஒயரிங் வேலைப்பாடுகளில் கை வைக்க வேண்டியிருக்கும். அதனால் வெளிமார்க்கெட்டில் மாடிஃபிகேஷன் செய்யும்போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். 

முக்கியமாக இந்த அதிக வெளிச்சம் தரும் ஹெட்லைட்களை மாற்றுவது, ஏசி லைன்களில் கை வைப்பது, பின் சீட்டில் டிவி ஸ்க்ரீன் மாட்டுவது, காரைச் சுற்றிக் கலர் கலராக நியான் லைட்கள் பொருத்துவது, எக்ஸாஸ்ட் சத்தம் தெறியாக இருக்க வேண்டும் என்று ஃப்ரீஃப்ளோ எக்ஸாஸ்ட்டை விட்டு அதிக டெசிபல்களில் சத்தம் போடும் எக்ஸாஸ்ட் வைப்பது போன்றவற்றை வெளி மார்க்கெட்டில் செய்யும்போது மிகக் கவனமாக இருக்க வேண்டும். 

எனக்குத் தெரிந்து ஒருவர், சொந்தமாக காரை தானே க்ளீன் செய்வார். வாட்டர் வாஷுக்கெல்லாம் போக மாட்டார். இன்ஜினைச் சுத்தம் செய்கிறேன் பேர்வழி என்று ஒரு தடவை இன்ஜின் க்ளீனிங் லிக்விட்டை மறந்து பானெட்டிலேயே வைத்துவிட்டார். கார் ஓட ஓட, அது சூடாகி பட்டெனத் தீப்பிடித்த சம்பவமும் இருக்கிறது. 

அதனால், காரிலிருந்து வித்தியாசமாக புகை போன்று ஏதாவது தென்பட்டால், இந்த பிஎம்டபிள்யூ டிரைவர் பார்த்தசாரதி செய்ததுபோல், சட்டெனக் காரை நிறுத்திவிட்டுக் கீழே இறங்கி எல்லோரையும் அலெர்ட் செய்துவிடுவது நல்லது. ‘முக்கியமான டாக்குமென்ட் எடுக்கணும்; பர்ஸ் எடுக்கணும்; போன் எடுக்கணும்’ என்று சில விஷயங்கள் யோசிக்கவே கூடாது. இந்த நேரத்தில் ஃபயர் எக்ஸ்டிங்யூஸர் இருந்தால்கூடத் தீப்பிடிப்பதைத் தடுத்திருக்கலாம். ஆனால், கொழுந்துவிட்டு எரியும்போது, எக்ஸ்டிங்யூஸர் பயன்படுத்துவது தவறு. 

நெருப்புக்கு காஸ்ட்லி கார்; சொகுசு கார்; பட்ஜெட் கார் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது மக்களே!


from ஆட்டோமொபைல் https://ift.tt/UbuBiIM

Post a Comment

0 Comments

o