தேர்தல் வந்தால் அரசியல் தலைவர்களோடு அவர்களின் வாகனங்களும் அலெர்ட் ஆகிவிடும். ‘சம்முவம்... எட்றா வண்டியை’ என்று ஒவ்வொரு அரசியல் புள்ளிகளும் தங்கள் பிரசார வாகனங்களில் தொகுதி தொகுதியாகக் கிளம்பிவிடுவார்கள். அப்படி ஸ்டாலின் முதல் கமல் வரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாகனங்கள் இஷ்டம்.
இப்போது நாடாளுமன்றத் தேர்தல் சீஸன். அடுத்த ஆண்டு மே மாதம் நடக்கப் போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் பிரமுகர்கள் இப்போதே பிஸியாக ஆரம்பித்துவிட்டார்கள். இதில் அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி, பிரசாரமாக இருந்தாலும் சரி – பிற பணிகளாக இருந்தாலும் சரி – டொயோட்டா இனோவாதான் அவரது ஃபேவரைட். கடந்த ஆண்டு வரை டொயோட்டா இனோவாவில் வலம் வந்து கொண்டிருந்த அவர், லேட்டஸ்ட்டாக சேலத்தில் நடந்த ஒரு கட்சி நிகழ்ச்சிக்கு, கறுப்பும் கிரேவும் கலந்த கலரில் ஒரு வித்தியாசமான டெம்ப்போவில் வந்து சமூக வலைதளங்களை டெம்ப்ட் ஏற்றிவிட்டு விட்டார். அந்த வாகனம், ஃபோர்ஸ் மோட்டார்ஸின் அர்பானியா (Urbania) என்றொரு டெம்ப்போ ட்ராவலர் வேன்.

கார்களில் வேண்டுமானால், ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஃப்ளாப் நிறுவனமாக இருக்கலாம். ஆனால் வேன்கள், டெம்ப்போ டிராவலர்கள், ஆம்புலன்ஸ்களைப் பொருத்தவரை ஃபோர்ஸ் மோட்டார் அதிரி புதிரி ஹிட்! மூட்டு வலி காரணமாக சேலத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த இ.பி.எஸ், கார்கள் என்றால் நீண்ட தூரப் பயணங்களுக்குக் கால்களை நீட்டி உட்கார்ந்து வரச் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து, மருத்துவர்களின் அறிவுரைப்படி சொகுசாகப் பயணிக்க வேண்டும் என்று நினைத்தபோது, ஃபோர்ஸ் அர்பானியா டெம்ப்போவுக்கு டிக் அடித்திருக்கிறார். TN52A J0010 என்ற பதிவு எண் கொண்ட இந்த அர்பானியா வேன், சங்ககிரியைச் சேர்ந்த கே.வெங்கடாசலம் என்பவரின் பெயரில் மே 5, 2023 அன்றைய தேதியில் பதிவாகி இருக்கிறது.
அ.தி.மு.க-வின் IT விங் செயலாளர் ராஜ் சத்யன்கூட தனது ட்விட்டர் பக்கத்தில், ‘புயல் வேகப் பிரசாரத்துக்குப் புதிய வாகனம்’ என்று டேக் செய்து எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் படத்தைப் பதிவிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் புதுச்சேரிக்கும் இந்த அர்பானியாவில்தான் ரவுண்டு வரப் போகிறாராம் எடப்பாடியார். இந்த அர்பானியா பற்றிச் சில விஷயங்கள் பார்க்கலாம்.

இது ஃபோர்ஸ் மோட்டார்ஸின் ஸ்டைலிஷ் ரக டெம்ப்போ டிராவலர் வேன். இதில் 10, 13, 17 என சீட்கள் கொண்ட 3 வேரியன்ட்கள் இருக்கின்றன. இ.பி.எஸ் வைத்திருப்பது 10 சீட் வேரியன்ட். டிரைவர் தவிர்த்து 10 சீட்டர் வசதி கொண்ட இதில், பேருந்துகள் போன்ற உயரமான ரூஃப் இருப்பதால், உள்ளேயே நின்றாலும் தலை ரூஃபில் இடிக்காது. அதேபோல், ஒவ்வொரு சீட்களுக்கும் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் சீட்களை ரெக்லைன் செய்து கொள்ளும் வசதியும் உண்டு. இந்த அர்பானியாவிலேயே ஷார்ட், மீடியம், லாங் என 3 வீல்பேஸ்கள் கொண்ட வேரியன்ட்கள் இருக்கின்றன. வீல்பேஸ் அதிகரிக்க அதிகரிக்க இடவசதியும் சொகுசும் எக்ஸ்ட்ராவாகக் கிடைக்கும். இ.பி.எஸ்ஸின் வேன் ஷார்ட் வீல்பேஸ் கொண்டது – 3,350 மிமீ. இதன் எடை 2,680 கிலோ. மே 2023 வாகனம் என்பதால், இது BS-6 டீசல் இன்ஜின் கொண்ட வாகனம். இதன் பவர் 115bhp. டார்க் 350Nm. இது 70 லிட்டர் டீசல் டேங்க்கைக் கொண்டிருக்கிறது.

இதன் பயணிகள் கதவு, மாருதி ஆம்னி வேனைப்போல் ஸ்லைடிங் ஸ்டைலில் இருப்பதால், கதவை ஸ்லைடு செய்து திறந்து உள்ளே போக வர வசதியாக இருக்கும். இதில் டிசைனில் இருந்து வசதிகள் வரை பல விஷயங்கள் கார்களைப்போலவே இருக்கின்றன. முதலில் இதன் ஏரோ டைனமிக் டிசைனைச் சொல்லலாம். இதன் பானெட் மற்ற வேன்களைப்போல் இல்லாமல், கார்கள் மாதிரி நீளமாக இருப்பதால், நெடுஞ்சாலை நிலைத்தன்மை ஓரளவு நன்றாகவே இருக்கும். இது ஒரு கட்டுமஸ்தான காளையைப் பார்த்து இன்ஸ்பயர் ஆகி டிசைன் செய்யப்பட்ட வாகனம்.
இதில் உள்ளே ட்ரிப்பிள் ஏசி சிஸ்டம் இருக்கிறது. பனோரமிக் ரூஃப் மாதிரி இதில், பனோரமிக் விண்டோக்கள் இருப்பதால், நன்றாக வேடிக்கை பார்த்துக் கொண்டு வரலாம். உள்ளே ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக இரவு நேரங்களில் புத்தகம் படித்துக் கொண்டு வர ரீடிங் லேம்ப்புகள் உண்டு. தனி சார்ஜிங் பாயின்ட்களும் இருக்கின்றன.

பாதுகாப்பைப் பொருத்தவரை – இதில் முன் பக்கம் மட்டும் 2 காற்றுப்பைகள் உண்டு. அதேபோல், இந்த வேனின் டேஷ்போர்டு விபத்துகளின்போது முன் பக்கப் பயணிகளுக்குக் குறைந்தபட்சத் தாக்கத்தை மட்டுமே கொடுக்கும்படி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. (பின்னாடி இருக்கிறவங்க என்ன பாவம் பண்ணினாங்க! அவ்வ்!) மேலும் இதில் உள்ளது Collapsible Steering. அதாவது விபத்துகளின்போது, இது Crumple Zone விதிப்படி நொறுங்கி, டிரைவருக்கு விழும் மிகப் பெரிய அடியைத் தவிர்க்கும்.
கார்களைப்போலவே இதில் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்கள் இருப்பது ஸ்பெஷல். வீல்கள் லாக் ஆகாமல் இருக்கும் ABS (Anti Lock Brake System) வசதியும், பிரேக்குகளின் ஃபீட்பேக்கைச் சரிசமமாக விநியோகிக்கும் EBD (Electronic Brakeforce Distribution) வசதியும் கொண்ட ESP (Electronic Stability Program) டெக்னாலஜி இதில் இருக்கிறது. இதனால் ஈரமான சாலைகளில் வேகமாகப் போகும்போதும், வேன் வழுக்காமல் போகும். விபத்தின்போது வாகனம் உருளாமல் இருக்க ரோல் ஓவர் புரொடக்ஷன், மலையேற்றங்களில் வேன் பின்னால் சரியாமல் எளிதாகப் பயணிக்க ஹில் ஹோல்டு அசிஸ்ட் கன்ட்ரோல், ஈஸி பார்க்கிங்குக்கு சென்ஸார் வசதி கொண்ட ரிவர்ஸ் பார்க் அசிஸ்ட் சிஸ்டம், வாகனம் திருடு போகாமல் இருக்க இன்ஜின் இம்மொபைலைஸர் தொழில்நுட்பம் என்று பல அம்சங்கள் இதில் உண்டு.

இந்த செக்மென்ட்டில் இந்த வசதி கொண்ட ஒரே வேன், அர்பானியாதான். 10 சீட்டருக்கு உட்பட்ட M1 கேட்டகிரியின்படி பாதசாரிகள் பாதுகாப்புக்கும் ஏற்றபடி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது அர்பானியா. கார்களில் இருக்கும் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் இருப்பதால், மைலேஜும் கொஞ்சம் கையைக் கடிக்காது.
இந்த அர்பானியாவின் விலை சுமார் 32 லட்சம் முதல் 35 லட்சம் வரும். எப்படியோ, டெம்ப்போ டிராவலர்களில் இ.பி.எஸ்ஸால் அர்பானியா இப்போது பிரபலமாகி விட்டது.
from ? ஆட்டோமொபைல் https://ift.tt/I5N3oM7
0 Comments