‘‘மூணே நாளில் பிரேக்டவுன்! எனக்கு XUV700 கார் வேண்டாம்!’’ - ‘மாநாடு’ ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் நாதன்!

லேட்டஸ்ட்டாக, சமூகவலைதளங்களில் ஒரு படம் வைரலாகி வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 கார் ஒன்று சாலையோரமாக பார்க் செய்யப்பட்டிருக்கிறது. அதற்குப் பக்கத்தில் ஒருவர், மிகவும் சோகமாக நடைபாதையில் அமர்ந்திருக்கிறார். இத்தனைக்கும் அது ஒரு பிராண்ட் நியூ மஹிந்திரா எக்ஸ்யூவி 700 எஸ்யூவி கார். ரிப்பன்கூட அவிழ்க்கப்படவில்லை; காரின் நம்பர் பிளேட்டில் Registered என்கிற ஸ்டிக்கர்கூட கழற்றப்படவில்லை. 

அதற்கப்புறம்தான் தெரிகிறது – அவர், ரிச்சர்ட் M.நாதன். தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த ஒளிப்பதிவாளர்களில் ஒருவர். வணக்கம் சென்னை, விஜய் ஆண்டனி நடித்த ‘காளி’, விஷால் நடித்த ‘சமர்’, ‘நான் சிவப்பு மனிதன்’, விஷ்ணு விஷால் நடித்த ‘கட்டா குஸ்தி’, சிம்பு நடித்த ‘மாநாடு’ என்று பல படங்களின் ஒளிப்பதிவாளர். 

அவரின் ட்விட்டர் பக்கத்தில்தான் இப்படி ஒரு சோகப் பதிவைப் பதிவு செய்திருந்தார். ‘‘மூன்று நாள்கள்தான் ஆகின்றன இந்த கார் வாங்கி. லஸ் கார்னரில் பிரேக்டவுன். 2:50 மணியிலிருந்து காத்திருக்கிறேன். ரோடு சைடு அசிஸ்டன்ஸுக்கு யாரும் அசிஸ்ட்டுக்கு வரவில்லை. இந்த காருக்காக 15 மாதங்கள் காத்திருந்தேன். எனக்கு இந்த கார் வேண்டாம்!’’ என்று அந்தப் பதிவில் சொல்லியிருந்தார். கூடவே மஹிந்திராவின் தலைவர் ஆனந்த் மஹிந்திராவையும் அவர் டேக் செய்திருக்கிறார்.

‘‘என்னாச்சு சார்?’’ என்று விசாரிக்க, ரிச்சர்ட் நாதனைத் தொலைபேசியில் பிடிக்க முயற்சி செய்தேன். முடியவில்லை. ஆனால், விஷயம் இதுதான்; கார் வாங்கி மூன்றே நாள்களில் பிரேக்டவுன் ஆகி, தன்னை நடுரோட்டில் மணிக்கணக்காகக் காக்க வைத்த மஹிந்திரா மீது அவர் கொஞ்சம் மனவருத்தத்தில் இருப்பது தெரிகிறது. காரணம், ரோடு சைடு அசிஸ்ட்டன்ஸில் இருந்து சரியான ரிப்ளை வராததும் – தொலைபேசி மூலமாகவே அவர்கள் பிரச்னையைச் சரி செய்ய முயற்சி செய்ததும் – அதற்குப் பிறகு 3 மணி நேரம் கழித்தே Tow Van உடன் சர்வீஸ் ஆட்கள் வந்ததும் ரிச்சர்ட் நாதனை இன்னும் மனவருத்தத்தில் தள்ளியிருக்கிறது.

இப்போது, மஹிந்திராவின் எக்ஸ்யூவி 700 கார்தான் இந்தியாவிலேயே அதிக வெயிட்டிங் பீரியட் – அதாவது காத்திருப்புக் காலம் கொண்ட கார். சுமாராக 18 மாதங்கள் வரை புக் செய்திருந்து காத்திருந்தால்தான் எக்ஸ்யூவி 700 கைக்குக் கிடைக்கும். ரிச்சர்ட் எம்.நாதன், இந்தக் காருக்காக 15 மாதங்கள் காத்திருந்ததாகச் சொல்லியிருக்கிறார்.

இப்போது கார் நிறுவனங்கள், ரோடு சைடு அசிஸ்டன்ஸ் எனும் விஷயத்தைச் சொல்லித்தான் வாடிக்கையாளர்கள் மனதில் இடம்பிடித்து கார்களை விற்பனை செய்கின்றன. அப்படி இருக்கையில், மஹிந்திரா போன்ற மிகப் பெரிய நிறுவனங்கள், ரோடு சைடு அசிஸ்டன்ஸில் கவனம் செலுத்தாதது கவலைக்குரியதே! 

XUV700

அதைத் தாண்டி, வாங்கி மூன்றே நாள்களில் காரின் இன்ஃபோடெயின்மென்ட் ஸ்க்ரீன் ஷட் டவுன் ஆகி, கார் Froze ஆனதும் வியப்பாகவே இருக்கிறது. காரின் ஆக்ஸிலரேட்டரை மிதித்தால், ஸ்க்ரீன் அப்படியே உறைந்து, கார் ஆஃப் ஆவது – எலெக்ட்ரானிக்ஸ் சிஸ்டத்தில்தான் பிரச்னை இருக்க வேண்டும் என்றும் தெரிகிறதாகச் சந்தேகப்படுகிறார் ரிச்சர்ட் நாதன்.

இதுபோன்ற சர்ச்சைகள் மஹிந்திராவுக்கு ஒன்றும் புதிதில்லைதான் என்றாலும் – குளோபல் என்கேப் க்ராஷ் டெஸ்ட்டில் பாதுகாப்பில் 5 ஸ்டார் ரேட்டிங், ADAS போன்ற பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள், ப்ரீமியமான சொகுசு வசதிகள் என்று எக்ஸ்யூவி 700–க்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல பேர் இருந்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் மஹிந்திரா பார்த்துக் கொள்ள வேண்டும்.


from Automobile https://ift.tt/LIWFJkX

Post a Comment

0 Comments

o