கேரள மாநிலத்தில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் எனப்படும் ஏ.ஐ கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கும் திட்டம், கடந்த 5-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. கார் ஓட்டுபவர்களும், முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும். பைக்கில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும். பைக்கின் வேகம் 60 கிலோமீட்டர் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காரில் டிரைவர் மற்றும் முன் சீட்டில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். டிரைவிங் செய்யும்போது செல்போனில் பேசினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பைக் ஓட்டுபவர் மட்டுமல்ல, பின் சீட்டில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயமாகும். ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பைக்கில் இரண்டு பேருக்கு மேல் பயணித்தால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். சாலை விதிமுறைகளை மீறுபவர்கள் குறித்து ஏ.ஐ கேமராக்கள் வண்டி எண், புகைப்படங்களுடன் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அனுப்பும். அந்தத் தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவரின் முகவரிக்கு சம்மன் அனுப்பப்படும். சம்மன் கிடைத்த 14 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்யலாம். சம்மன் கிடைத்த ஒரு மாதத்திற்குள் அபராதம் செலுத்த வேண்டும் என்ற விதி அமலில் உள்ளது.

இந்த நிலையில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்களுக்கும் சீட் பெல்ட் கட்டாயம் என கேரளப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆன்றணி ராஜூ தெரிவித்துள்ளார். கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளப் போக்குவரத்துத்துறை உயர்மட்ட அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு அமைச்சர் ஆன்றணி ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில்...
"மத்திய அரசின் விதிகளின்படி ஹெவி வாகனங்களுக்கு சீட்பெல்ட் மிகவும் அவசியமானதாகும். ஆனால், கேரள மாநிலத்தில் இதுவரை தளர்வு அளித்து வந்துள்ளோம். ஹெவி வாகனங்களில் சீட் பெல்ட் சட்டம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்கி உள்ளோம். செப்டம்பர் 1-ம் தேதி முதல் பஸ், லாரிகளில் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

லாரி டிரைவரும், முன் சீட்டில் அமரும் மற்றொருவரும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம் ஆகும். பஸ்களில் டிரைவர் சீட் பெல்ட் அணிய வேண்டும். பஸ்ஸில் முன் பக்கம் கேபின் இருந்தால் அதில் அமரும் இரண்டு பேருக்கு சீட்பெல்ட் அணிவது கட்டாயம். முன்பக்கம் கேபின் இல்லாமல் உள்ள பஸ்களில் டிரைவர் மட்டும் சீட்பெல்ட் அணிந்தால் போதும்.
கே.எஸ்.ஆர்.டி.சி பஸ்களில் பழைய இருக்கைகளே உள்ளன. அவை மாற்றப்பட்டு சீட் பெல்ட் ஏற்படுத்தப்படும். சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள ஏ.ஐ கேமராக்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக உள்ளன. கூடுதல் சம்மன்கள் அனுப்ப அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளேன். சாலை விதிமீறல்கள் குறித்த போட்டோக்களை ஆய்வு செய்ய கூடுதல் ஊழியர்கள் நியமிக்கப்படுவார்கள். வி.ஐ.பி வாகனங்களுக்கு சாலை விதிகளில் இருந்து தளர்வு வழங்கப்படவில்லை. இதுவரை 56 வி.ஐ.பி வாகனங்கள் சாலை விதிகளை மீறியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஆனால், அமைச்சர்களின் வாகனங்களுக்குத் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.
from Automobile https://ift.tt/hcAJ5mo
0 Comments