ஒருமுறை பத்திரிகையாளர்கள் கேள்விகளுக்குப் பதிலளித்த கமல்ஹாசன், `நான் என்ன மாதிரி படங்களைப் பார்க்க ஆசைப்படுகிறேனோ... அப்படிப்பட்ட படங்களைத்தான் தயாரிக்கிறேன்' என்றார்.
அவர் எடுக்கும் சினிமாக்களுக்கு அவர்தான் முதல் ரசிகர் என்பதையும் அவர் பல முறை சொல்லியிருக்கிறார். ஒரு வகையில் கமல்ஹாசன் சொன்னது ராயல் என்ஃபீல்டு CEO கோவிந்தராஜனுக்கும், அவரது தலைவர் சித்தார்த் லாலுக்கும்கூடப் பொருந்தும். ஆம், ராயல் என்ஃபீல்டில் இருப்பவர்கள் என்ன பைக்குகளை ஓட்ட ஆசைப்படுகிறார்களோ, அந்த பைக்குகளைத்தான் அவர்கள் தயாரிக்கிறார்கள். யார் யாரெல்லாம் அவர்களின் பைக்குகளை ஓட்டுகிறார்களோ, அவர்களாகவும் இவர்கள் மாறிப் போகிறார்கள்.
அண்மையில் சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரை கோவிந்தராஜனுடன் RE மோட்டார் சைக்கிள்களில் ஒரு ரைடு சென்று விட்டு வந்தபோது, இந்த எண்ணம் மேலும் உறுதிப்பட்டது.
இந்திய ராணுவ வீரர்களின் அடையாளமாகவே ராயல் என்ஃபீல்டு புல்லட் இருந்த காலகட்டங்கள் எல்லாம் உண்டு. இமயமலைப் பகுதிகளில், சவால்கள் நிறைந்த மேடு பள்ளங்களில் எல்லாம் ராணுவ வீரர்கள் இந்த பைக்கைப் பயன்படுத்தியதால், இந்த இமயமலையின் பாதைகளே, ராயல் என்ஃபீல்டுக்குச் சோதனைக் கூடங்களாக எப்படி மாறியது? இமயமலையில் தானும் சித்தார்த் லாலும் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை ஓட்டும்போது பிறந்த புதிய மோட்டார் சைக்கிள்களுக்கான ஐடியாக்கள் என்று பல விஷயங்களை கோவிந்தராஜன் இந்தப் பயணத்தின்போது நம்முடன் பகிர்ந்து கொண்டார். இந்த இதழில் இடம்பெற்றிருக்கும் கோவிந்தராஜனின் பேட்டி, ராயல் என்ஃபீல்டு பைக்கை நிச்சயம் உங்களுக்கு மேலும் நெருக்கமானதாக மாற்றும்.
இமயமலையில், நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்களுக்குப் பக்கபலமாக இருக்கும் இன்னொரு ஐக்கானிக் வாகனம் மாருதியின் ஜிப்ஸி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இது ஜிம்னி என்ற பெயரில், புதிய வடிவில் வருகிறது. ராயல் என்ஃபீல்டு பைக்குகளைப் போலவே இதற்கும் ஒரு Cult Status உண்டு. ஆனால், இப்போது களம் மாறியிருக்கிறது. மஹிந்திராவின் தார், ஃபோர்ஸ் மோட்டார்ஸின் கூர்கா போன்ற லைஃப் ஸ்டைல் எஸ்யூவி வாகனங்கள் இப்போது இதற்குப் போட்டியாகக் களத்தில் நிற்கின்றன. இருந்தாலும், விற்பனைக்கு வருவதற்கு முன்பே ஜிம்னியை வாங்க, முப்பதாயிரம் பேர் முன்பணம் கட்டியிருக்கிறார்கள்.
ஜிம்னி எப்படி இருக்கிறது என்பதை இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் கரடுமுரடான ஆற்றுப்படுகைகளிலும், மலைச் சாலைகளிலும் ஓட்டிப் பார்த்த நமது குழுவினரின் அனுபவமும் சுவையானது. மாருதி சுஸூகி ஜிம்னியின் First Drive ரிப்போர்ட்டில் இதை நீங்கள் அனுபவிக்க முடியும்.
நன்றி!
- ஆசிரியர்
from Automobile https://ift.tt/4BwNaqT
0 Comments