நம் வாசகர்களில் ஒருவர் நேற்று வெள்ளம் வடிந்துவிட்டது என்று நினைத்து, அசோக் நகர் ஏரியா பக்கம் காரில் போயிருக்கிறார். நடுவே ரோடு பிளாக் செய்ததையும் தாண்டி ஒரு வழியாகப் போய்விட்டார். சைலன்ஸருக்கு மேலே தண்ணீர் இருப்பது தெரியாமல் பயணித்தவர், நடு வழியில் கார் ஆஃப் ஆகி நின்றிருக்கிறது. ‘மிக்ஜாமில் ஜாம் ஆகிட்டேன்; என்ன பண்ண’ என்று கேட்டவருக்கு, ‘வண்டியை மட்டும் ஸ்டார்ட் பண்ணிடாதீங்க; பேட்டரியை டிஸ்கனெக்ட் பண்ணிடுங்க!’ என்று கொடுத்த அட்வைஸின்படி நல்லவேளையாக காரை ஸ்டார்ட் செய்யவில்லை.

அவர் செய்த நல்ல விஷயம் என்னவென்றால், கார் ஆஃப் ஆனதும் மறுபடியும் ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யாமல், போன் செய்ததுதான். அவர் ஸ்டார்ட் செய்திருந்தால், நிச்சயம் கார் க்ராங்க் ஆகுமே தவிர, இன்ஜின் ஸ்டார்ட் ஆகியிருக்காது. உடனடியாக, இரண்டு பேர் உதவியுடன் காரை நடுரோட்டில் இருந்து சாலையோரமாக பார்க் செய்து, காரை டோ செய்வதற்கு போன் செய்து ஆட்களை வரவழைத்து, சர்வீஸ் சென்டருக்கு எடுத்துக் கொண்டு போய்விட்டார். இன்னும் 2 நாட்களில் அவரது கார் டெலிவரி ஆகிவிடும் என்று சொல்லியிருக்கிறார்களாம். 

Car driving in Rain

காரோ/பைக்கோ வெள்ளத்தில் நடுரோட்டில் ஆஃப் ஆகிவிட்டது என்றால், ‘எப்படியாச்சும் கொஞ்ச தூரத்துக்காச்சும் போயிடலாம்ல’ என்று நினைத்து, ஸ்டார்ட் செய்ய முயலவே முயலாதீர்கள். ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக் ஆகி, இன்ஜின் கஷ்டப்பட்டு க்ராங்க் ஆனால், கனெக்டிக் ராடு மொத்தமாக உடைந்து போய், நிச்சயம் 60,000 ரூபாய்க்கு மேல் செலவு காத்திருக்கும்.

இன்னொரு முக்கியமான விஷயம் – இன்ஷூரன்ஸ் க்ளெய்மிங்கும் இதில் கிடைக்காது என்பதையும் கவனிக்க வேண்டும். ‘நாம ஸ்டார்ட் பண்ணது அவங்களுக்குத் தெரிஞ்சாதானே… அவங்க எப்படிக் கண்டுபிடிப்பாங்க’ என்று நினைத்துவிடாதீர்கள். கனெக்டிங் ராடின் நெளிந்த தன்மையை வைத்தே நீங்கள் காரை ஸ்டார்ட் செய்ய முயற்சித்ததைக் கண்டுபிடித்துவிட்டால், உங்களுக்கு இன்ஷூரன்ஸ் பணமும் கையைவிட்டுப் போய் விடும். 
Rain Flood Traffic in Chennai

உங்கள் கார் வெள்ளத்தில் நாள் கணக்கில் நின்றுவிட்டால்…  காரை ஸ்டார்ட் செய்ய முயற்சிகள் எடுக்காதீர்கள். முடிந்தால் கதவைக்கூடத் திறக்காதீர்கள். கால்வாசிதான் இருக்கும் தண்ணீர், நீங்கள் கதவைத் திறந்தால், இன்னும் இன்டீரியர் முழுக்கத் தண்ணீர் பரவி, மொத்த காரும் வீணாகிவிடும். நன்றாக மூழ்கிய பட்சத்தில், காரின் கதவைத் திறந்து, பானெட் கீயை ஆன் செய்து திறந்து, முடிந்தால் பேட்டரியை டிஸ்கனெக்ட் செய்துவிடுங்கள். அதேபோல், சிலர் தண்ணீர் வடிந்ததும், காரைத் தள்ளி ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்வார்கள். இது மிகவும் தப்பு.  'சிலர் ஹெட்லைட் எரியுதானு பார்ப்போம்; ஹார்ன் அடிக்கலையே…' என்று எலெக்ட்ரிக்கல் லைன்களையும் சும்மா சோதனை போடுவார்கள். அதுவும் வேண்டாம். இது ஷார்ட் ஷர்க்யூட் ஏற்படுத்த வாய்ப்புண்டு. பேட்டரி லைன்களை டிஸ்கனெக்ட் செய்துவிட்டு, சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து காரை டோ செய்து எடுத்துப் போகச் சொல்லுங்கள். 

ஆனால், மேலே சொன்ன வாசகருக்கு சர்வீஸில் பெரிய செலவில்லை என்றாலும், காரை டோ செய்து எடுத்துப் போக அவர் செலவு செய்ததுதான் மிகப் பெரிய வேதனையான விஷயம். பொதுவாக, கார்களை டோ செய்வதற்கு 1,500 முதல் 2,000 ரூபாய் வரை வசூலிப்பார்கள். 5 கிமீ முதல் 10 கிமீ வரை இந்த சார்ஜ் இருக்கும். இன்னும் சில டோ சர்வீஸ் கம்பெனிகள், கிமீ-க்கு 200 ரூபாய் சார்ஜ் செய்கிறார்கள். 

சீஸன் நேரத்தில் வியாபாரிகள் கெடுபிடி பிடிப்பதுபோல், இந்த வெள்ள நேரத்தில் மெக்கானிக்குகளும், டோ செய்பவர்களும் கிராக்கி பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள். அந்த வாசகர், தனது காரை டோ செய்வதற்கு 7,500 ரூபாய் வரை செலவழித்திருக்கிறார்.
Rain Flood Traffic in Chennai

சில பழைய கார் வைத்திருப்பவர்கள், ‘‘சர்வீஸுக்கே இவ்வளவு நான் செலவு பண்ணதில்லை சார். டோ பண்றதுக்கு இவ்வளவு காசானு விட்டுட்டேன். ரெண்டு நாளாகட்டும் பார்த்துக்கலாம்!’’ என்று மழையிலேயே காரை பார்க் செய்திருக்கிறார்கள்.

இன்னும் சில தனியார் டோ சென்டர்கள், 10 கிமீக்கு 10,000 ரூபாய் வரை கேட்டதாகவும் புகார் சொல்கிறார்கள். ‘‘நிலைமை அப்படி மோசமா இருக்கு சார்… என்ன பண்ண…’’ என்று அதற்கான காரணங்களையும் சொல்கிறார்களாம். 

சென்னையில் உள்ள ஒரு டோ சென்டரின் மேனேஜர், ‘‘ஒரு மாதத்துக்கே 15 டோ கால்கள்தான் வரும். ஆனால், இப்போது ஒரு நாளைக்கே 150 கால்கள் வருகின்றன. ஒவ்வொரு இடங்களுக்கும் வண்டி அனுப்பி டோ செய்வதற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. ஒரே நேரத்தில் 10 கார்களை அட்டெண்ட் செய்து கொண்டிருக்கிறோம். அதனால், மிகவும் சிக்கலான கட்டத்தில் எங்களுக்கும் டிரைவர்கள், வண்டிகள் போன்றவை டிமாண்டாக இருக்கின்றன!’’ என்கிறார். 

‘‘என்னோட ஹூண்டாய் கார் வெள்ளத்தில் பாதி முங்கிடுச்சு. ஹூண்டாய் சென்டருக்கே போன் பண்ணினேன். அவங்களே டோவுக்கும் ஏற்பாடு பண்ணிட்டாங்க. ஆனால், கொஞ்சம் டைம் எடுக்குது’’ என்றார் ஒரு வாடிக்கையாளர். ஆத்தரைஸ்டு சர்வீஸ் சென்டர்கள் மூலமே டோ செய்வதற்கு ஏற்பாடு செய்வதும் ஒரு வகையில் நல்ல ஐடியாதான்.

Bike drowned in flood

வெள்ளத்தில் மூழ்கிய டூவீலருக்கு…

  1. பைக்குகள் வெள்ளத்தில் மூழ்கிவிட்டால், ரொம்பவும் பயப்படத் தேவையில்லை. பைக்கை மறந்துபோய் சாவியைப் போட்டு ஸ்டார்ட் செய்ய முயற்சி செய்யாதீர்கள். இதையும் டோ செய்து மெக்கானிக் ஷெட்டுக்கு எடுத்துப் போய் விடுங்கள். 

  2. சில பைக்குகளுக்கு ஆயில், பெட்ரோலை டிரெயின் செய்துவிட்டு, வழக்கமான ரெகுலர் சர்வீஸ் செய்தால்… புது பைக் போல் ஆகிவிடும்.

  3. இன்னும் சில பைக்குகளை டேங்க் மற்றும் சைலன்ஸரை டிரெய்ன் செய்து, இன்ஜின் ஆயிலையும் டிரெய்ன் செய்து, க்ளட்ச் கேபிள்கள் மாற்றி, செயின் ஸ்ப்ரே அடித்தாலே ரெடியாகிவிட வாய்ப்பு இருக்கிறது. 

  4. முக்கியமாக, பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றுவிட்டு, இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் வரை போய் அவஸ்தைப்படாதீர்கள்!



from ஆட்டோமொபைல் https://ift.tt/lo4EOb0