மழை செமையாகப் பிடித்துவிட்டது. எல்லோருக்குமே மழை பிடிக்கும்தான். மழையில் நனைந்தபடி மொக்கையாக ஃபீல் செய்வது, தூறலில் ஐஸ்க்ரீம் சாப்பிடுவது, மழைக்காற்றை மேலில் வாங்கிக் கொண்டு டூ–வீலரில் ஜில்லெனப் பறப்பது – எல்லாம் ஓகேதான்.

ஆனால், வாகனங்களுக்கு மழை பிடிக்குமா என்றால், அங்கே சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இந்த மழைக்காலங்களில் வாகனம் ஓட்டும்போது என்னென்ன கவனிக்க வேண்டும் என்பது பற்றிப் பார்க்கலாம்.  இந்த வாட்டி பைக் மட்டும் எப்படி ஓட்டுறதுனு சொல்றேன்; தெரிஞ்சுக்கோங்க!

Bike Riding in Rain
  • மழையில் செல்லும்போது, முக்கியமாக ஹெல்மெட் வைசரை ஏற்றி விட்டுக் கொள்ளுங்கள். காரணம், ஹெல்மெட் வைசர் வழியாக மழை நீர் வழிந்து வெளிச்சாலை விசிபிலிட்டியைக் குலைக்கும். ‘மழைத் தண்ணி ஊசி மாதிரி மூஞ்சில குத்துது’ என்று சிலர் காரணம் சொல்வார்கள். அப்போ மெதுவா போங்க பாஸ்!

  • இன்னும் சில காஸ்ட்லி பார்ட்டிகள் வைப்பர் கொண்ட ஹெல்மெட்டில் பயன்படுத்தி ஜாலியாகப் போய்க் கொண்டிருக்கிறார்கள். அவர்களையெல்லாம் பார்த்துப் பொறாமையாகத்தான் இருக்கிறது.

  • சிலர் ரொம்பப் புத்திசாலித்தனமாக மழையில் குடை பிடித்துக் கொண்டெல்லாம் பைக் ஓட்டுவார்கள். ‘ஒரு கோடிப்பே’ என்பது மாதிரியான சமாச்சாரம்தான் இது. குடை பிடிச்சா மழையில நனையமாட்டீங்கன்னு யாரு பாஸ் சொன்னா! அது இருக்கட்டும்; முதலில் இப்படிச் செய்வது உங்கள் ரைடிங்கைத் திசை திருப்பும். ஒற்றைக் கையில் பைக் ஓட்டும் டாம் க்ரூஸ் முயற்சி வேண்டாமே !

  • ஹைட்ரோ பிளானிங் என்றொரு விஷயம் ஆட்டோமொபைலில் இருக்கிறது. இது பைக்குக்கும் பொருந்தும். நீர் தேங்கிய சாலையில் செல்லும்போது, உங்கள் பைக் திடீரென எடை குறைந்தது போன்ற உணர்வு எழும். அப்போது ஹேண்ட்பார் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்காது. இது இலகுவாக இயங்கினால், நீங்கள் சாலையில் செல்லாமல் நீரின் மீது மிதக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம். இதுதான் ஹைட்ரோ பிளானிங். இதற்கு ஒரே ஒரு தீர்வு என்ன தெரியுமா… ஸ்லோவாகப் போவதுதான். உங்கள் ஹேண்ட்பாரையும் டைட்டாகப் பிடித்து பைக் ஓட்டிப் பாருங்கள். முடிந்தளவு வழுக்காது.

  • பொதுவாக, பைக்குகளுக்கு எப்போதுமே சென்டர் ஸ்டாண்ட்தான் பரிந்துரை செய்யப்படும் விஷயம். சைடு ஸ்டாண்டு என்பது அவசரத்துக்கு வேண்டுமானால் ஓகே! பார்க்கிங்கில்… அதுவும் மழை நேரங்களில் சென்டர் ஸ்டாண்டுதான் பைக்குகளுக்குப் பெஸ்ட். சைடு ஸ்டாண்டில் பைக் இருக்கும்போது, ஹேண்டில்பார் வழியாக மழை நீர் கீழிறங்கி, கார்புரேட்டர் – மழை நீர் சேகரிப்புத் தொட்டியாகி விடும். Fi இன்ஜின் பைக்குகளில், இது ஃப்யூல் டேங்க் ஃப்ளோட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். பேட்டரியின் டெர்மினல்களும் கொஞ்சம் குழம்பிவிடும். உங்களுக்கே தெரியாமல் பெட்ரோல் டேங்க் வழியாகவும் தண்ணீர் உள்ளே புகவும் வாய்ப்பிருக்கிறது.  

Bike Riding in Rain
  • மழை நேரங்களில் எலி போன்ற ஜந்துக்களுக்கு அடைக்கலமே உங்கள் வாகனங்கள்தான். இது காருக்கு மட்டும் இல்லை பாஸ்; பைக்குகளுக்கும் பொருந்தும். ஒரு பைக்கின் டூமில் சாரைப் பாம்பு ஒன்று சரசரவெனப் படமெடுத்து வீல் வழியாக இறங்கிப் போனது எனக்கே நேர்ந்த சம்பவம். இன்னொரு நண்பரின் பைக்கின் டூமில் பல்லிகளும் இருந்தன. 

  • எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் என்றால், மழை நீரில் முடிந்தளவு பயணிக்கவே வேண்டாமே! என்னதான் ஐபி ரேட்டிங் 67 இருந்தாலும், பேட்டரி மற்றும் மோட்டார்கள் கொஞ்சம் எசகுபிசகாகும் நேரம் இந்த மழை நேரம்தான். என்ன, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெயிலில் தீப்பிடிக்கும்; மழையில் பேட்டரி செயலிழக்கும்! பேட்டரி போனால் மொத்த வண்டியும் போச்சு!

  • மழை நேரத்தில் பைக்கை நனையவிட்டு ‘அப்பாடா வாட்டர் வாஷ் பண்ணத் தேவையில்லை’ என்று சிலர் செம கூலாகச் சொல்வார்கள். இது எல்லா மழைக்கும் பொருந்தாது.  நேரடியாக விழும் மழை நீர் என்றால் பிரச்னை இல்லை; கட்டிடம் வழியாக, மரங்கள் வழியாக விழும் நீர் விழுவது சுத்தமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. மழை முடிந்தபிறகும் ஒரு வாட்டர் வாஷ் நல்லது.

  • இப்போதுள்ள பைக்குகள் பற்றிக் கவலையில்லை. நீங்கள் கவனித்தால் தெரியும். சைலன்ஸர்கள் கொஞ்சம் மேல்நோக்கி பீரங்கி போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது சுமாரான மழை நீரில் வாட்டர் வேடிங் செய்வதற்காகத்தான். பழைய மாடல் ஸ்ப்ளெண்டர், டிவிஎஸ் போன்ற பைக்குகளின் சைலன்ஸர்கள் மிகவும் தாழ்வாக இருப்பதால், சைலன்ஸர் மூழ்கும் அளவு தண்ணீர் இருந்தால் போக வேண்டாமே! 

bike
  • நமது வாகனங்களில் ஏபிஎஸ், டிஸ்க் என இருந்தாலும், ஈரமான சாலைகளில் பிரேக் பிடிக்கும்போது ஸ்கேட்டிங் நடக்கும். அதேபோல் வேகமும் வேண்டாம்; சடர்ன் பிரேக்கும் நிச்சயம் வேண்டாம். மழை நேரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பிரேக்குகள்தான். பிரேக் பிடிக்கும் ஒவ்வொரு முறையும் பிரேக் ஷூ தேய்ந்து தூசாக மாறி, பிரேக் டிரம்மிலேயே தங்கிவிடும். மழை நீர் சேரும்போது, பேஸ்ட் போல மாறிவிடும். டிஸ்க் என்றால் இன்னும் சிக்கல். கேலிப்பர் மற்றும் பிரேக் பேடுகளில் லேயர் உருவாகி விடும். இதில் பிரேக் ஃபெயிலியர் ஆக வாய்ப்பு அதிகம்.

  • பொதுவாக கார்/பைக்குகளை பார்க் செய்யும்போது, முடிந்தவரை மரங்களுக்குக் கீழே பார்க் செய்வதைத் தவிர்த்து விடுங்கள். இது வெயிலுக்கு வேண்டுமானால் பொருந்தும்; அப்படி ஒரு மழை நாளில் காற்றடித்து மரக்கிளைகள் விழுந்து என் கார் விண்ட்ஷீல்டே காலியாகிப் போன சோகம் இன்னும் மறக்க முடியவில்லை.

  • மழை வெள்ளத்தில் கார்/பைக் ஆஃப் ஆகிவிட்டால், அதுதாங்க ‘ஹைட்ரோ ஸ்டேட்டிக் லாக்’ இந்த நேரத்தில் - தயவுசெய்து திரும்பத் திரும்ப ஸ்டார்ட் செய்ய முயற்சிக்காதீர்கள். ‘க்க்ஞக்ஞகங’ என்று க்ராங்க் ஆவது இன்ஜினுக்கு நாம் செய்யும் கொடுமை. இன்ஜின் கனெக்டிங் ராடு உடைந்து, இன்ஜின் மொத்தமாக சீஸ் ஆகவும் வாய்ப்புண்டு. 

  • இதுபோன்ற நேரங்களில் இன்ஷூரன்ஸ் கைகொடுக்கும். இது பற்றிப் பலர் அக்கறை எடுப்பதே இல்லை. இன்ஷூரன்ஸ் எடுக்கும்போது, `Engine Protect’ எனும் Add-on பாலிஸியைப் பற்றி விசாரித்து எடுங்கள். எக்ஸ்ட்ரா ப்ரீமியம் இருக்கும்தான்; ஆனால், இது எந்த நேரத்திலும் கைகொடுக்கும்.

  • மழையில் கவனமா பைக் ஓட்டுங்க; கேர்ஃபுல்லா வீட்டுக்குப் போங்க!



from ஆட்டோமொபைல் https://ift.tt/UuFWGYD