‘கல்யாணம் கட்டிப் பார்; வீட்டைக் கட்டிப் பார்’னு சொல்வார்கள். கூடவே ‘கார் வாங்கிப் பார்’ என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம். அப்படிக் கஷ்டப்பட்டு வாங்கிய காரை யாராவது கயவர்கள் ஆட்டையைப் போட்டால் நம் மனநிலை எப்படி இருக்கும்?! துடித்துப் போகும்தானே! விதவிதமான கேமராக்கள், பல தொழில்நுட்பங்கள், சென்சார்கள் இருந்தும் கார்கள் திருடுபோவது சகஜமாக நடக்கத்தான் செய்கின்றன.
அப்படி இந்தியாவில் முக்கியமாக 5 கார்கள் திருடு போகின்றன என்கிறது ஓர் அறிக்கை. ஒரு புள்ளி விவரம் இப்படிச் சொல்கிறது... ஆண்டுக்கு 1 லட்சம் கார்கள் திருடு போகின்றனவாம். அப்படி திருடர்களின் பாசமான கார்களில் முக்கியமான 5 கார்கள் இவைதான்!

மாருதி சுஸூகி ஸ்விஃப்ட்
விற்பனையில் மட்டுமில்லை; திருடுபோகும் லிஸ்ட்டிலும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறது மாருதி சுஸூகி நிறுவனத்தின் ஸ்விஃப்ட். ஹேட்ச்பேக்கான இந்த கார்தான் தேசம் முழுக்க திருடர்களின் லிஸ்ட்டில் பாசமான காராக இருக்கிறதாம். 2005–ல்தான் முதன் முதலாக லாஞ்ச் ஆகியது ஸ்விஃப்ட். இந்தியா முழுக்க ஸ்விஃப்ட் கார் ஓனர்கள், தங்கள் காரைப் பாதுகாப்பதில் மிகவும் அலெர்ட்டாக இருக்கிறார்களாம். மைலேஜ், நம்பகத்தன்மை, ரீ–சேல் வேல்யூ என எல்லா இடத்திலும் முதலிடத்தில் இருக்கும் ஸ்விஃப்ட், திருடு போவதிலும் முதன்மையாக இருப்பதற்குக் காரணம், இதன் ரீ–சேல் மதிப்புதான் என்கிறார்கள். ஸ்விஃப்ட்டில் இருப்பது 1.2 லிட்டர், 4 சிலிண்டர் NA பெட்ரோல் இன்ஜின். இதில் 5 ஸ்பீடு மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் உண்டு. ஆட்டோமேட்டிக்தான் திருடர்களின் பெரும் சாய்ஸாக இருக்கிறது. எனவே, ஸ்விஃப்ட் ஓனர்கள் கொஞ்சம் விழிப்போடு இருப்பது நல்லது!
மாருதி சுஸூகி வேகன்–ஆர்

இரண்டாவது இடத்திலும் இருப்பது மாருதி கார்தான். வேகன்–ஆர் இந்த இடத்தில் இருக்கிறது. வேகன்–ஆர் கார் ஒரு யூஸர் ஃப்ரெண்ட்லியான கார். மிடில் கிளாஸ் மக்கள் எளிதில் பராமரிக்க வசதியான கார். அதனாலேயே இதைத் திருடுவதும் திருடர்களுக்கு ஈஸியான டாஸ்க்காக இருக்கிறது. இப்போது வரும் கார் கொஞ்சம் டெக்னிக்கலாக இன்ஜின் இம்மொபலைஸர் போன்ற சமாச்சாரங்கள் அப்டேட் ஆகியிருப்பதால், திருடர்களின் கண் பழைய வேகன்ஆர் காரில்தான் இருக்கிறது. இதில் இரண்டு இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கின்றன. 1.0 லிட்டர் NA மற்றும் 1.2 லிட்டர் NA என பெட்ரோல் இன்ஜின்கள்தான். இதிலும் ஸ்விஃப்ட்டைப் போலவே 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இருக்கின்றன. வேகன்ஆர் ஓனர்களே… எதுக்கும் உஷார்!
ஹூண்டாய் க்ரெட்டா

விற்பனையில் எப்படி மாருதியும் ஹூண்டாயும் முன்னணியில் இருக்குமோ… அதேபோல்தான் இந்த லிஸ்ட்டிலும் மாருதிக்கு அடுத்து இருப்பது ஹூண்டாய். க்ரெட்டா கார், திருடர்களின் சாய்ஸில் 3–வது இடத்தில் இருக்கிறதாம். இது இந்தியாவில் பெஸ்ட் செல்லிங் எஸ்யூவிகளில் முக்கியமான கார். திருடர்களின் லிஸ்ட்டிலும்தான். எஸ்யூவி மார்க்கெட்டில் க்ரெட்டாவுக்கு ரீசேல் வேல்யூ செம ஜாஸ்தி. உதாரணத்துக்கு இப்போது புது டீசல் க்ரெட்டா கார், 15 லட்சம் முதல் 21 லட்சம் வரை ஆன்ரோடு விலையில் விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் யூஸ்டு மார்க்கெட்டில் மிகப் பழைய மாடல் க்ரெட்டா வாங்க வேண்டும் என்றாலே, 7 – 8 லட்ச ரூபாய்க்குக் குறைந்து இதை வாங்க முடியாது. அந்தளவு ரீசேல் வேல்யூ அதிகம். மேனுவல், ஆட்டோமேட்டிக், டீசல், பெட்ரோல் என எல்லா வேரியன்ட்களிலும் இது கிடைக்கிறது. க்ரெட்டாவில் பராமரிப்புச் செலவு அதிகம். இதன் உதிரிபாகங்களின் விலைதான் இதில் மைனஸ். ஆனால், இதுதான் திருடர்களுக்குப் பெரிய ப்ளஸ். ஆம், க்ரெட்டாவின் ஸ்பேர்கள் பழைய கார் உதிரிபாக மார்க்கெட்டில் நல்ல விலைக்குப் போகிறதாம். அதனாலேயே திருடர்களின் முக்கிய சாய்ஸில் எஸ்யூவியாக இது முதலிடத்தில் இருக்கிறது. க்ரெட்டா வெச்சிருந்தீங்கன்னா, ஒரு கண்ணு வெச்சுக்கிட்டே இருங்க! கரெக்ட்டா!
ஹூண்டாய் சான்ட்ரோ

இந்தத் திருட்டு லிஸ்ட்டில் 4–வது இடமும் ஹூண்டாய்க்குத்தான். சான்ட்ரோதான் அந்த 4–வது கார். இந்த ஹேட்ச்பேக், ஒரு ப்ரீமியம் சின்ன கார். நான் சொல்வது பழைய 90’ஸ் சான்ட்ரோ இல்லை. இது லேட்டஸ்ட்டாக 2018-ல் செகண்ட் ஜென் ஆக கம்பேக் கொடுத்ததே அந்த சான்ட்ரோதான். 4 ஆண்டுகளுக்குப் பிறகு இதன் விற்பனை சரிவர அமையவில்லை என்பதால், மறுபடியும் இந்தக் காரின் தயாரிப்பை நிறுத்தியது ஹூண்டாய். க்ரெட்டாவைப் போலவே இந்த சான்ட்ரோவும் திருடர்களின் லிஸ்ட்டில் முக்கியமாக இருப்பதற்கு, இதன் உதிரிபாகங்கள்தான் முக்கியக் காரணம் என்கிறார்கள். இந்த காரின் விற்பனை டிஸ்கன்ட்டினியூ செய்யப்பட்டதால், இதன் உதிரிபாகங்களின் டிமாண்ட் பெரிய அளவில் ஏற்பட்டதால் திருட்டு பயம் சான்ட்ரோவுக்கு அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். இதில் இருப்பது பெட்ரோல் இன்ஜின்தான். மேனுவல், ஆட்டோமேட்டிக் என இரண்டு ஆப்ஷன்களும் இருக்கின்றன. பழைய கார் மார்க்கெட்டில் சுமார் 5 லட்சம் வரை விற்பனையாகிக் கொண்டிருக்கிறது இந்த சான்ட்ரோ. சான்ட்ரோ ஓனர்ஸ், பீ கேர்ஃபுல்!
ஹோண்டா சிட்டி

ஹோண்டா காரை ஏண்டா வாங்கினோம் என்று யாரும் கவலைப்பட்டதாக சரித்திரம் இல்லை. அந்தளவு ஹோண்டாவின் நம்பகத்தன்மை, இன்ஜின் தரம், பெர்ஃபாமன்ஸ், ரீசேல் வேல்யூ என எல்லாமே இதற்குப் பக்கபலமாக இருக்கின்றன. இந்தப் பலங்கள்தான் ஏண்டா இந்த ஹோண்டா காரை வாங்கினோம் என்று திருடர்களைப் பார்த்துப் பயப்பட வைத்திருக்கின்றன. ஆம், இந்த லிஸ்ட்டில் 5–வதாக இருந்தாலும், செடான் கார்களின் வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது ஹோண்டாவின் சிட்டி கார்.
90–களில் இருந்து விற்பனையில் இருக்கும் இந்த ஹோண்டா சிட்டி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற கார். நிஜமாகவே ஒரு சம்பவம்...
அப்பார்ட்மென்ட் ஒன்றில் நின்று கொண்டிருந்த ஒரு ஹோண்டா காரை, அவருக்குத் தெரிந்த நண்பர் ஒருவரே திருடிப் போன ஒரு சுவாரஸ்யமான சம்பவம் நினைவுக்கு வருகிறது. அந்தக் காரில் ஜிபிஎஸ் தொழில்நுட்பம் இருந்ததால், அதைக் கண்டுபிடித்து விட்டார்கள். அதற்கு அந்தத் திருடர் சொன்ன காரணம், இந்த காரின் ஸ்பேர்ஸ் மற்றும் திருடர்கள் மத்தியில் சிட்டிக்கு இருக்கும் மவுசு என்பதாகச் சொன்னாராம். இப்போது ஹோண்டா சிட்டியில் அடாஸ் லெவல், ஆன்ட்டி தெஃப்ட் சிஸ்டம் போன்ற பாதுகாப்புத் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டதால், திருடர்களுக்குப் புது ஹோண்டா சிட்டியைத் திருடுவது கொஞ்சம் சவாலான விஷயமாக இருக்கலாம்(!). இதன் உதிரி பாகங்களும் மார்க்கெட்டில் நல்ல டிமாண்டில் இருப்பதால், சிட்டிக்கு இந்தச் சோகம். இதன் சில ஸ்பேர்கள், வேறு சில கம்பெனி கார்களுக்கும் பொருந்துவதால், இதன் கிராக்கி பயங்கரமாக இருப்பதாகச் சொல்கிறார்கள். 1.5 லி NA மற்றும் 1.5 லி ஸ்ட்ராங் ஹைபிரிட் என 2 பெட்ரோல் இன்ஜின்களுடன் இப்போது விற்பனையாகிக் கொண்டிருக்கிறது சிட்டி. சிட்டிக்குள்ள கவனமா இருங்க சிட்டி ஓனர்ஸ்!
திருடர்களுக்கு ஏன் இந்த கார்களின் மீது கண்?

மேற்கூறப்பட்ட இந்த 5 கார்களும், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களில் முக்கியமானவை. சாலையில் 20 கார்கள் இருந்தால், அந்த 10 கார்கள் இந்த 5 மாடல்களாகத்தான் இருக்கும். அதனால் இதன் போக்குவரத்து அதிகம். அதிகமாக விற்காத ஒரு மாடல் திருடுபோனால், அதைக் கண்டுபிடிப்பது ஈஸி. அதனால்தான் இந்த கார்கள் அதிகமாகத் திருடும் போகின்றன. இந்த கார்களின் உதிரிபாகங்களுக்குப் பழைய கார் மார்க்கெட்டில் டிமாண்டும் அதிகம். மேலும் இந்த கார்களை ரிஜிஸ்ட்ரேஷன் நம்பர் ப்ளேட்டை மாற்றி, இந்தியாவின் எல்லா ஏரியாக்களிலும் விற்பது ஈஸியான டாஸ்க் ஆகவும் இருக்கிறது கயவர்களுக்கு. இவை எல்லாம் சேர்ந்துதான் முக்கியக் காரணங்களாக அமைகின்றன.
from ஆட்டோமொபைல் https://ift.tt/gG7SI8Q
0 Comments