ஹூண்டாய் நிறுவனம் இப்போ செம ஹேப்பி அண்ணாச்சி! ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய்’ என்பதுபோல், அது நடந்துவிட்டது. ஆம், ஹூண்டாய் கார்கள் என்னதான் ஃப்யூச்சரிஸ்ட்டிலும், சொகுசிலும், ஸ்டைலிலும் அப்பர் கிளாஸாக இருந்தாலும், பாதுகாப்புத் தர ரேட்டிங்கிலெல்லாம் ‘தர’ லோக்கல் காராகத்தான் இருக்கும் என்கிற பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டது.
ஒரு வழியாக ஹூண்டாய் வெர்னா கார், குளோபல் என்கேப் நடத்திய க்ராஷ் டெஸ்ட்டிங்கில் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி அசத்தி விட்டது.
ஹூண்டாய்க்கு இது ரொம்பப் புதுசு! ஏற்கெனவே GNCAP-ல் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கிய நம் ஊர் கார்கள், டாடா அல்ட்ராஸ், டாடா நெக்ஸான், டாடா பஞ்ச், மஹிந்திரா எக்ஸ்யூவி300, எக்ஸ்யூவி 700, மஹிந்திரா ஸ்கார்ப்பியோ N, ஸ்கோடா குஷாக், ஃபோக்ஸ்வாகன் டைகூன், ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ், ஸ்கோடா ஸ்லாவியா! இதில் மற்ற இந்தியத் தயாரிப்பு நிறுவனங்களான மஹிந்திரா, டாடா போன்றவர்களின் கார்களெல்லாம் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கி அசத்திக் கொண்டிருக்க, ஹூண்டாயும் அந்த லிஸ்ட்டில் சேர்ந்திருப்பது வாவ்தானே!
கொஞ்ச நாட்களாகவே பாதுகாப்பில் கவனம் செலுத்தி வந்தது ஹூண்டாய். அதன் முதல்படியாக இனி வரும் எல்லா கார்களிலும் 6 காற்றுப்பைகளைக் கட்டாய ஆஃபராக்கியது ஹூண்டாய். அங்கேதான் இந்நிறுவனத்தின் முதல் வெற்றி தொடங்கியது என்று நினைக்கிறேன். கூடவே நிலைத்தன்மையை கிண்ணென்று வைத்திருக்கும் ESC (Electronic Stability Control), பின் பக்கம் குழந்தைகளுக்கான ISOFIX சீட் மவுன்ட்டிங் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர்கள் போன்றவற்றையும் இதில் குறிப்பிட்டாக வேண்டும்.

Global NCAP சோதனைக்கு எடுக்க வேண்டுமென்றால், நாம் நினைக்கும் கார்களுக்கெல்லாம் டெஸ்ட்டுக்கு எடுக்க மாட்டார்கள். அந்த காரில் சீட் பெல்ட்டில் ஆரம்பித்து ESC, ABS, ட்ராக்ஷன் கன்ட்ரோல், ESP, ஹில் ஹோல்டு அசிஸ்ட் என பாதுகாப்பு வசதிகள் இருக்க வேண்டும். இதனால்தான் காற்றுப்பைகள் இல்லாத டாடா ஜெஸ்ட்டும், ஃபோக்ஸ்வாகன் போலோவும் ஜீரோ ஸ்டார்கள் வாங்கின. Global NCAP சோதனையில் காருக்குள்ளே டம்மியான மனித பொம்மைகளை வைத்து, அந்த காரை 64 கிமீ–ல் ஓடவிட்டு, மோதவிட்டு டெஸ்ட் செய்வார்கள்.
அப்படி நேற்று நடந்த குளோபல் என்கேப் சேஃப்டி சோதனையில், வெர்னா கார் அடல்ட் ஆக்குப்பேஷன் எனும் ஏரியாவில், 34 பாயின்ட்களுக்கு 28.18 பாயின்ட்கள் எடுத்து 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றிருக்கிறது. இத்தனைக்கும் இதன் பாடிக் கட்டுமானம் ஸ்டேபிளாக இல்லையாம். அப்படியும் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.

Frontal Impact எனும் சோதனையில் டிரைவர் மற்றும் கோ–டிரைவர் சீட் பயணிகளுக்கான கழுத்து மற்றும் தலைப் பகுதிகளில் நல்ல பாதுகாப்பு கிடைத்திருக்கிறது. ஆனால், மார்புப் பகுதியில் டிரைவருக்கான பாதுகாப்பு கொஞ்சம் மார்ஜினலாகத்தான்… அதாவது விளிம்பு நிலையில்தான் பாயின்ட்கள் கிடைத்திருக்கின்றன. ஆனால், ரொம்பவும் அடி இல்லை. அதேபோல், முழங்கால்களுக்கான பாதுகாப்பும் மார்ஜினல்தான். இந்நேரம் டேஷ்போர்டில் உள்ள மற்ற பாகங்களால் ஏதாவது சேதாரம் ஆனால்தான் உண்டு. இதற்காகத்தான் டேஷ்போர்டில் குட்டி சாமி சிலைகள் வைப்பது, கூரான பொருட்கள் வைத்துக் கொண்டு பயணிப்பது போன்றவற்றைத் தவிர்த்து விடுவது நல்லது.
இதுவே Side Impact Test எனும் பக்கவாட்டுச் சோதனையில் முன் பக்கப் பயணியின் தலை, வயிறு, இடுப்பு போன்றவற்றுக்கும் நல்ல பாதுகாப்பை அளித்ததாம் வெர்னா. அதேபோல் Side Pole Impact Test எனும் சோதனையில், பயணிகளின் தலை மற்றும் இடுப்பு போன்ற பகுதிகளுக்கு ஓகே எனும் அளவில் பாதுகாப்பு. அதேபோல் மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிக்கு Adequate எனும் போதுமான அளவு பாதுகாப்பு கிடைத்திருக்கிறது.
எப்போதுமே குழந்தைகளுக்கான பாதுகாப்பு க்ராஷ் டெஸ்ட்டும் நடத்தும் குளோபல் என்கேப் நிறுவனம். அப்படி இந்த Child Occupant Crash Test-ல் 49–க்கு 42 பாயின்ட்கள் பெற்று நல்ல ரேட்டிங் பெற்றிருக்கிறது வெர்னா. இதன் இன்னொரு பகுதியாக, இதை CRS (Child Restraint System) என்பார்கள்.

இதில் 12–க்கு 12 பாயின்ட்கள் பெற்றிருக்கிறது வெர்னா. 18 மாதம் மற்றும் 3 வயதுக் குழந்தை டம்மி பொம்மைகளை வைத்துச் சோதனை செய்திருக்கிறது குளோபல் என்கேப் நிறுவனம். CRS சைடு புரொடக்ஷனிலும் நல்ல பாதுகாப்பாம்.
இந்த மிட் சைஸ் செடானில் ஃபோக்ஸ்வாகன் வர்ட்யூஸ் மற்றும் ஸ்கோடா ஸ்லாவியா போன்ற கார்கள்தான் 5 ஸ்டார் ரேட்டிங் வாங்கியிருக்கின்றன. இதில் வெர்னாவும் சேர்ந்து கொண்டிருக்கிறது இப்போது.
‘ஹூண்டாய் காரா… அது சேஃப்டி இல்லை பாஸ்’னு இனிமே யாரும் நாக்கு மேல பல்லைப் போட்டுப் பேச முடியாது! ஹூண்டாய் வந்துட்டீங்க... ஹலோ மாருதி நீங்க எப்போ?
from ஆட்டோமொபைல் https://ift.tt/1uiOym2
0 Comments