ரஜினி ரசிகர்கள் கோவித்துக் கொள்ளக்கூடாது; இதற்கு ரஜினியே கோவித்துக் கொள்ள மாட்டார். ரஜினி, இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார்தான்; வசூல் மன்னன்தான்; ஆனால் கமலை ஒப்பிடும்போது முரட்டுத்தனமான நடிகரா என்றால், அவரே இல்லை என்றுதான் சொல்வார். ஆனால், ரஜினி படமென்றால் கொண்டாட்டமாக இருக்கிறது. காரணம், அவர் சூப்பர் ஸ்டார்!

அதேபோல்தான் ஆட்டோமொபைலில் ராயல் என்ஃபீல்டு! ராயல் என்ஃபீல்டு பைக்குகளை லேட்டஸ்ட் பைக்குகளுடன் ஒப்பிடும்போது, ‘வாவ்! செம பைக்ல’ என்று சொல்லிவிட முடியாது. அட, லேட்டஸ்ட்டாகத்தான் பட்டன் ஸ்டார்ட்டே கொண்டு வந்தார்கள். இதை ஒரு சின்னப் பள்ளத்திலிருந்து ரிவர்ஸ் எடுக்க… பல கலோரிகளைச் செலவழிக்க வேண்டும் என்பது உண்மைதான். அத்தனை வெயிட்! ஆனாலும் இன்னும் மார்க்கெட்டில் வெயிட் காட்டிக் கொண்டிருக்கின்றன ராயல் என்ஃபீல்டு பைக்குகள்.
மாதத்துக்கு சுமார் 75,000 பைக்குகள் விற்பதென்றால் சும்மாவா! அதுவும் ப்ரீமியம் விலையில்! அந்த ‘தட் தட்’ புல்லட் பீட்டுக்கென்று இளசுகள்… இல்லை பெருசுகள் வரை எல்லோரும் ஒரு மாதிரி கிறங்கித்தான் கிடக்கிறார்கள். இது ஒரு லைஃப் ஸ்டைல் பிராண்டாகவே மாறிவிட்டது.

ஒரு குடும்பத்தில் தாத்தா ஒருவர் தன் பேரனுக்கு இப்படி அறிவுரை சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். ‘‘டேய், கண்ட கண்ட பைக்கை வாங்குறேன்னு சொல்லி ஏமாந்துக்கிட்டு நிக்காத! பேசாம புல்லட்டை வாங்கினோமா… ஓட்டினோமானு இரு! உங்க அப்பனும் எங்க அப்பனும் அதைத்தான் ஓட்டிக்கிட்டு இருந்தோம்!’’ என்று 75 வயது முதியவர் ஒருவர் ராயல் என்ஃபீல்டை ரெக்கமண்ட் செய்கிறார் என்றால், அதன் ராயல் வரலாறு அப்படி! இப்படி தலைமுறை தலைமுறைகளுக்கும் மேலாக ராயல் என்ஃபீல்டு மக்களின் மனதில் இடம் பிடித்ததற்கு அதன் மரபு (Legacy)தான் காரணம் என்பேன். ஆரம்பத்தில் புல் வெட்டும் இயந்திரங்களைத் தயாரிக்கத் தொடங்கிய இந்த புல்லட் நிறுவனம், இப்போது இந்தியாவில் தலையெடுத்த வரலாறைப் பார்க்கலாம்.

ஒரு சின்ன… இல்லை பெரிய நாஸ்டால்ஜியாவுக்குப் போக வேண்டும். முதலில் ராயல் என்ஃபீல்டு ஒரு இந்திய நிறுவனம் என்று சொல்பவர்கள் எத்தனை பேர் என்று கை தூக்குங்கள்! அட, இது ஒரு இங்கிலாந்து கம்பெனி. அட அதேபோல் இது ஒரு பைக் கம்பெனியும் கிடையாது.

1891–ம் ஆண்டில் இங்கிலாந்தில் உள்ள ரெட்டிட்ச், வொர்செஸ்டர்ஷைர் எனும் பகுதியில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது என்ஃபீல்டு நிறுவனம். முதலில் அதாவது 1893 முதல் 1900–ம் ஆண்டு வரை இது ஒரு புல் வெட்டும் இயந்திரங்களைத் தயாரித்து வந்தது. Enfield Manufacturing Co. ltd. என்ற பெயர்தான் இதற்கு முதலில் இருந்தது. கூடவே சைக்கிள், குவாட்ரி சைக்கிள், ட்ரை சைக்கிள் தயாரிப்பிலும் சொல்லியடித்தது என்ஃபீல்டு மேனுஃபேக்ச்சரிங்!
முதன்முதலாக 1901-ம் ஆண்டில்தான் ராயல் என்ஃபீல்டு தனது முதல் மோட்டார் சைக்கிளைத் தயாரித்தது. இந்த சிங்கிள் சிலிண்டர் இன்ஜினின் பீக் பவர் 2.5bhp. இது இப்போதைய ஸ்கூட்டியைவிடப் பல மடங்கு கம்மி! அட, கார்களையும் ராயல் என்ஃபீல்டு தயாரித்தது. இது அப்போதைய இங்கிலாந்து ஆட்டோ எக்ஸ்போவில் பல வெள்ளையர்களின் மவுசைப் பெற்ற வாகனம்.
நீங்கள் ஒரு 60’ஸ் கிட்ஸாக இருந்தால், `Made Like a Gun’ என்கிற ஒரு வாசகத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்க வாய்ப்புண்டு,! இதன் லோகோவே இப்படித்தான் இருக்கும். அதில் ஒரு பீரங்கியும் இருக்கும். இது வடிவமைக்கப்பட்ட ஆண்டு 1893. அப்படியென்றால், போருக்கும் ராயல் என்ஃபீல்டுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?

1914-ம் ஆண்டில் முதல் உலகப்போரில் துப்பாக்கிகளை எடுத்துச் செல்ல என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்கள்தான் பயன்படுத்தப்பட்டன. அதன் பிறகு 1916–ம் ஆண்டு ‘இந்தா பிடி’ என்று துப்பாக்கி பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிளை என்ஃபீல்டு அறிமுகம் செய்தது.

1921–ம் ஆண்டில்… அப்போதே 976 சிசி கொண்ட (1 லிட்டர்) இன்ஜின் பைக்கைத் தயாரித்தது என்ஃபீல்டு கம்பெனி. யோசித்துப் பாருங்கள்; 100 ஆண்டுகளுக்கு முன்பே 1,000 சிசி இன்ஜினைத் தயாரிப்பதென்றால் சும்மா இல்லை பாஸ்!
இப்போதுதான் ஹீரோ என்ட்ரி! ஆம், 1931-ம் ஆண்டில்தான் புல்லட் என்கிற வாகனம் அறிமுகமானது. நிற்க! நீங்கள் நினைப்பதுபோல், புல்லட் என்பது பைக் இல்லை; வெறும் சைக்கிள்தான்.
அதற்குப் பிறகுதான் கம்பீரம் குறையாமல், 1932-ம் ஆண்டில் முதன்முதலாக புல்லட்டை, `பைக்' என்கிற வடிவில் கம்பீரமாகக் கொண்டு வந்தார்கள். 1939–ம் ஆண்டு இரண்டாம் உலகப் போர் நடந்ததல்லவா? அப்போது வெள்ளைக்காரப் படைக்கு 125, 250, 350, 750 சிசி என்று வெரைட்டியான க்யூபிக் கெப்பாசிட்டிகளில் பைக்குகளை உற்பத்தி செய்து வாரி வழங்கியது என்ஃபீல்டு.

இப்போதுதான் Flying Flea என்கிற ஒரு புல்லட் பைக் பிரிட்டிஷ் ராணுவத்தினரின் மத்தியில் மிகவும் பிரசித்தம் ஆனது.
அதன் பிறகு சூப்பர் பைக் தயாரிப்பையும் விடவில்லை; 1951–ல் சூப்பர் பைக் ஒன்றையும் உருவாக்கி விட்டது என்ஃபீல்டு. நீங்கள் இப்போது சில புல்லட்களின் பெட்ரோல் டேங்க்குகளில் ஒரு லோகோவைப் பார்த்திருப்பீர்கள். அது 1953–ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட லோகோதான்.

1954–ம் ஆண்டுக்குப் பிறகுதான் இந்திய ராணுவத்தினரின் எல்லைப் பாதுகாப்புப் பணிக்காக 800 புல்லட் OHV Singles மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்பட்டது. இதுதான் பிரிட்டிஷ் கம்பெனி இந்தியக் கம்பெனியான தருணம். அப்போது, மெட்ராஸ் மோட்டார் நிறுவனமும் என்ஃபீல்டு இங்கிலாந்து நிறுவனமும் இணைந்து இந்தியாவில் மோட்டார் சைக்கிள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டார்கள்.

இந்திய அரசாங்கம், காவல்துறை மற்றும் ராணுவத்துறையின் பாதுகாப்புப் பணிக்காக 800, 350சிசி வகை புல்லட்டைத் தேர்வு செய்கிறார்கள். இந்தியாவுக்குள் என்ட்ரி கொடுத்து விட்டது ராயல் என்ஃபீல்டு.
அதன் பிறகு 1956–ம் ஆண்டு, நம் சென்னை திருவொற்றியூரில் 2.96 ஏக்கர் பரப்பளவில் ராயல் என்ஃபீல்டு தொழிற்சாலை தொடங்கப்பட்டு, ஓர் ஆண்டுக்கு சுமார் 160 பைக்குகளைத் தயாரித்தது. இப்போது நீங்கள் சாதா புல்லட்டில் பார்க்கிறீர்களே… ஒரு ‘டப் டுப் டப் டுப்’ இன்ஜின்… இதற்குப் பெயர்தான் UCE (Unit Construction Engine). இந்த இன்ஜின்தான் இப்போது வரை இந்தியாவின் இதயத்துடிப்பாக இருக்கிறது. ஆனால், லேட்டஸ்ட்டாக ‘புல்லட் மேரி ஜான்’ என்று விளம்பரப்படுத்தி, அந்த UCE–க்குப் பதிலாக J சீரிஸ் இன்ஜினில் வரவிருக்கிறது புல்லட். இந்த ஜே சீரிஸ் ப்ளாட்ஃபார்மின் சொந்தக்காரர் – நம் மயிலாடுதுறைத் தமிழர் கோவிந்தராஜன் என்பது காலர் தூக்க வேண்டிய விஷயம்.

1962–ம் ஆண்டு ஒரு ஸ்கூட்டரையும் கொண்டு வந்தது RE. அதன் பெயர் ஃபேன்ட்டா ப்ளஸ். அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு கஃபே ரேஸர் ஸ்டைல் பைக். இப்போதுள்ள கான்டினென்ட்டல் ஜிடி மாடல், நீங்கள் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவை பில்லியனில் வைத்து ஓட்டிக் கொண்டு வருவாரே… அதே பைக்தான்!
அதன் பிறகு 1966–ல் இங்கிலாந்தில் உள்ள ரெட்டிட்ச் தொழிற்சாலையை மூடியது என்ஃபீல்டு. 1970–ம் ஆண்டு முழுசா சந்திரமுகியான தருணம். அதாவது, என்ஃபீல்டு முழு இந்திய நிறுவனமான நேரம். இருந்தாலும் என்ஃபீல்டு இந்தியா நிறுவனத்தை இயக்கிய மெட்ராஸ் மோட்டார் நிறுவனம், 1973–ம் ஆண்டு 2 ஸ்ட்ரோக் கொண்ட க்ரூஸர் பைக்கையும் அறிமுகம் செய்தது ராயல் என்ஃபீல்டு. 1984–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு இந்தியாவிலிருந்து புல்லட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.
1988–ம் ஆண்டு ஜன்டாப் எனும் நிறுவனத்துடன் இணைந்து என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள்களைத் தயாரித்தது. எக்ஸ்ப்ளோர், சில்வர் ப்ளஸ், ஃப்யூரி மாடல்களெல்லாம் நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இதில் அப்போதே இந்தியாவின் முதல் டிஸ்க் பிரேக் கொண்ட மாடல் எக்ஸ்ப்ளோர்தான். இதற்கு முன்பு 1980–ம் ஆண்டு மினி புல்லட்டையும் அறிமுகம் செய்தார்கள். இதில் இருந்தது வில்லியர்ஸ் 200சிசி இன்ஜின்.

இதே 1989–களில்தான் மோஃபா என்ற பெயரில் ஒரு குட்டி வண்டியை அறிமுகம் செய்தது. இதை மொபெட் என்று சொல்ல வேண்டும். ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ், ‘என் வண்டி நின்னா தள்ளிக்கிட்டே வீட்டுக்கு வந்துடுவேன்; 60 கிமீ மைலேஜ் தரும்’ என்று வசனம் பேசுவாரே… அதே மொபெட்தான்.
அதன் பிறகு 1991–ம் ஆண்டு ஆட்டோமொபைல் வரலாற்றில் ஓர் உலக சாதனையைச் செய்தது RE. டாரஸ் என்கிற பெயரில் ஒரு டீசல் புல்லட்டை அறிமுகம் செய்தது என்ஃபீல்டு. 1993–ம் ஆண்டு ஒரு 500 சிசி புல்லட். அதன் பிறகு 1994–ம் ஆண்டு எய்ஷர் நிறுவனம் என்ஃபீல்டு இந்தியா நிறுவனத்தை வாங்கி, மீண்டும் ராயல் என்ஃபீல்டு என்று பெயர் சூட்டியது.
அதன் பிறகு 2000–ம் ஆண்டில்தான் ராயல் என்ஃபீல்டுக்கான இணையதளம் தொடங்கப்பட்டது. 2011–ம் ஆண்டில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில், சென்னை ஒரகடத்தில் இரண்டாவது தொழிற்சாலையை நிறுவியது ராயல் என்ஃபீல்டு.

புல்லட் எலெக்ட்ரா, 2002–ல் தண்டர்பேர்டு, க்ளாஸிக் 500, க்ளாஸிக் 350, தண்டர்பேர்டு 500, ட்வின் சிலிண்டர் கான்ட்டினென்ட்டல் ஜிடி, இன்ட்டர்செப்டர், ஹிமாலயன், மீட்டியார், சூப்பர் மீட்டியார், ஸ்க்ராம் 411, ஹன்ட்டர் என்று ராயல் என்ஃபீல்டில் அதகளம் பற்றி உங்களுக்கே தெரியும்.
இதில் ஹிமாலயன் பைக் மாடல் தோன்றிய வரலாற்றை அதன் தலைவர் கோவிந்தராஜன் சொன்னபோது ‘வாவ்’ என்றிருந்தது. ‘‘ராணுவத்துக்கு சப்ளை செய்து கொண்டிருந்தது ராயல் என்ஃபீல்டு. ராணுவத்தின் வேலை எங்கே இருக்கும்? ஹிமாலயாஸ் போன்ற பனிபடர்ந்த அட்வென்ச்சர் ஏரியாக்களில். பொதுவாக இமயமலையில்தான் எங்கள் டீம் மீட்டிங்கே நடக்கும்.

அப்போது 500 சிசி புல்லட்களில்தான் பயணம் இருக்கும். ஏன் இதுபோன்ற டெரெய்ன்களில் ஓட்டுவதற்கென்றே ஒரு அட்வென்ச்சர் பைக் உருவாக்கக் கூடாது என்று தோன்றியதுதான் ஹிமாலயன் பைக். அதற்குப் பெயரே ஹிமாலயன் என்று வைத்துவிட்டோம்!’’ என்றார்.
1997–ம் ஆண்டு டெல்லியில் இருந்து உலகின் உயரமான சாலையான கார்துங்லா பகுதிக்கு 40 பைக்குகளுடன் பயணம் போனார்கள். அப்படித்தான் ஹிமாலயன் ஒசிடி `Himalayan Odyssey’ என்றொரு ரைடு பயணம் உருவானது.

இப்போதும் ஹிமாலயன் ஒடிசி திட்டத்தில் நீங்கள் ஒரு முறை ரைடு போய்விட்டு வந்தால்… கிட்டத்தட்ட 18 நாட்கள் பனி படர்ந்த மலைப்பகுதிகளில் நடக்கும் இந்த ரைடில் மெஷினுக்கும் சாலைக்கும் உண்டான நட்பைத் தெரிந்து கொள்ளலாம்.
இப்போ சொல்லுங்க! ராயல் என்ஃபீல்டை எல்லோருக்கும் பிடிக்கும்தானே!
(ராயல் என்ஃபீல்டு பற்றியும், பைக் அனுபவம் பற்றியும் உங்களுக்குப் பிடித்த அதன் பைக் பற்றி கமென்ட்டில் சொல்லுங்கள்!)
from ஆட்டோமொபைல் https://ift.tt/mrA6uMH
0 Comments