உலக செஸ் சாம்பியனான கார்ல்சனுக்கு நம் பிரக்ஞானந்தா கடும்போட்டியை ஏற்படுத்துவதும், உலகின் எந்த நாடுமே தொடாத நிலவின் தென்துருவப் பகுதியில் பிரக்யான் ரோவர் பயணிப்பதும் தன்னிச்சையாக நடைபெறும் சம்பவங்கள் இல்லை. இவற்றுக்குப் பின்னால், நீண்ட உழைப்பும் திட்டமிடலும் இருக்கின்றன. இதுபோல பல துறைகளிலும் இந்தியா சத்தம் இல்லாமல் பல படிகள் முன்னேறிக் கொண்டுதான் இருக்கிறது. ஆட்டோமொபைல் துறையை எடுத்துக் கொண்டால், மஹிந்திராவும் நம் ஊர் டிவிஎஸ்ஸும் உலகை வெற்றி கொள்ள எடுத்த முயற்சிகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
பல ஆண்டுகளுக்கு முன்பாகவே நம் மஹிந்திராவின் ஸ்கார்ப்பியோ, தென் ஆப்பிரிக்காவில் பெறும் வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், அந்த வெற்றியை அடித்தளமாக்கி தான் எடுத்து வரும் புதிய முயற்சிகள் பற்றி மஹிந்திரா சில தகவல்களை இப்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது. மஹிந்திராவின் தார் மாபெரும் வெற்றியை ஈட்டி இருக்கும் நிலையில், ஐந்து கதவுகள் கொண்ட தார் எப்போது வரும் என்று தார் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். இந்த நிலையில், ஐந்து கதவுகள் கொண்ட தார் மின்சார வாகனமாக எப்படி வரப்போகிறது என்பதை தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் வைத்து அது காட்டியிருக்கிறது. அது மட்டுமல்ல; ஸ்கார்ப்பியோ N பிக்அப் துவங்கி, INGLO பிளாட்ஃபார்மில் அது தயாரிக்க இருக்கும் மின்சார வாகனங்கள், அத்துடன் உலகுக்கு அது அளிக்க இருக்கும் 7 புதிய டிராக்டர்கள் என்று பலவற்றைக் காட்சிப்படுத்தி இருந்ததுடன், இவற்றைப் பற்றி தனக்கு இருக்கும் எதிர்காலத் திட்டங்களைப் பற்றியும் விரிவாகச் சொல்லியிருக்கிறது.
அதேபோல நம்மூர் டிவிஎஸ் கம்பெனியும், தான் அடுத்து அறிமுகப்படுத்த இருக்கும் டிவிஎஸ் எக்ஸ் மின்சார ஸ்கூட்டரை உலகின் மிக உயரமான கட்டிடமான துபாய் நகரின் புர்ஜ் கலிஃபாவின் மீது வைத்துக் காட்சிப்படுத்தியிருக்கிறது.
இந்த இதழில் புதிதாக அறிமுகமாகியிருக்கும் ஹோண்டா எலிவேட், பென்ஸ் GLC 300 4Matic, சிட்ரன் C3 Aircross, ஸ்கோடா கோடியாக், ஏத்தர் 450S, ஓலா S1 AIR மற்றும் ஹோண்டா SP160 ஆகிய வாகனங்களின் டெஸ்ட் ரிப்போர்ட்டை பல்வேறு ஊர்களுக்கும் சென்று கொடுத்திருக்கிறோம். இவை நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி!
- ஆசிரியர்
from ஆட்டோமொபைல் https://ift.tt/06iTc4D
0 Comments