‘அமெரிக்காவுக்குப் போயே ஆகணும்’ என்று ஒரு படத்தில் விவேக் க்ளைமாக்ஸ் வரை போராடிக் கொண்டிருப்பார்; அதேபோல், எப்படியாச்சும் ஹார்லி டேவிட்சன் பைக் வாங்கிடணும் என்று நம் ஊரில் பல இளைஞர்கள் இந்த அமெரிக்க பைக்கை வாங்கப் போராடிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், எல்லோராலும் இந்த பைக் வாங்க முடியாததற்குக் காரணம் – இதன் விலை. 10 – 14 லட்சத்துக்கு மேல் இருந்தால்தான் ஹார்லி டேவிட்சன் பைக் வாங்க முடியும் என்கிற நிலையில், ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராட் போன்ற பைக்குகளை சுமார் 7 லட்சத்துக்குக் கொண்டு வந்தது ஹார்லி! ம்ம்ஹூம் அப்படியும் ஹார்லியின் ராஜதந்திரம் எடுபடவில்லை.
இப்போது நம் ஊர் ஹீரோ நிறுவனத்துடன் இணைந்து ஹார்லி டேவிட்சன், வெறும் 2.29 லட்சம் எக்ஸ் ஷோரூம் விலைக்கு ஒரு பைக்கைச் சந்தையில் இறக்கியுள்ளது. அதன் பெயர் ஹார்லி டேவிட்சன் X440 பைக்.


X440 பைக் இப்போது ஹீரோ ஷோரூம்களில் கிடைக்கப் போகிறது. ஹீரோ மோட்டோ கார்ப்பின் வலைதளத்துக்குப் போனாலே ஹார்லிதான் அதிர்கிறது. இந்த X440 பைக்கை ஓட்ட இன்னும் வாய்ப்புக் கிடைக்கவில்லை; சும்மா ஒரு வாக்அரவுண்ட் நியூஸ் மட்டும் பார்க்கலாம்!
X440 பைக் Denim, Vivid மற்றும் S என 3 வேரியன்ட்களில் வந்திருக்கிறது. இதில் டெனிம் வேரியன்ட்தான் அடிப்படை வேரியன்ட். அதன் விலைதான் 2.29 லட்சம். Vivid - 2.49 மற்றும் S - 2.69 லட்சம் என பொசிஷன் செய்திருக்கிறது ஹார்லி டேவிட்சன்.
ஹார்லி டேவிட்சனில் XR1200 என்றொரு ரோட்ஸ்ட்டர் பைக் இருக்கிறது. அதை இன்ஸ்யபர் செய்துதான் இந்த X440 பைக்கை ரெடி செய்திருக்கிறார்கள். ரோட்ஸ்ட்டர் மாடல் என்பதால், ஹன்ட்டர் போன்ற பைக்குகளில் இருப்பதுபோல், சிங்கிள் பாட் TFT இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்… அதாவது வட்ட வடிவ கன்சோல் இருக்கிறது. இதில் கடிகாரம், ஆர்பிஎம், ஸ்பீடு, சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர், ஃப்யூல் விவரம், ட்ரிப் மீட்டர் போன்றவை தெரியும். இந்த ஹெட்லைட் முழுக்க LED யூனிட். இது நல்ல பவர்ஃபுல். இதில் லைட் சென்ஸார் இருப்பதால், ஆம்பியன்ட் லைட் குறையும்போது மெயின் பீம் அதாவது ஹை பீம் ஆட்டோமேட்டிக்காக ஆன் ஆகிறது. இந்த வசதி இந்த செக்மென்ட்டில் இந்த பைக்கில்தான் முதன் முறையாக இருக்கிறது.

இது ஹீரோ தயாரிப்பதால் – ஃபிட் அண்ட் ஃபினிஷ் ஹார்லி அளவுக்கெல்லாம் எதிர்பார்க்க முடியாது. ஆனால், ஓகே ரகம். இதில் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் கொடுத்திருக்கிறார்கள். புளூடூத் கனெக்டிவிட்டியும் உண்டு.
இன்ஜினைப் பொருத்தவரை இதில் 440 சிசி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் இருக்கிறது. இதன் பவர் 27bhp. டார்க் 38Nm. சிங்கிள் சிலிண்டர் மோட்டார் சைக்கிளில் இது சூப்பரான பவர் என்றே சொல்ல வேண்டும். லிக்விட் கூல்டாக இருந்தால், பராமரிப்புச் செலவு பழுக்கும் என்று சொல்லலாம். இது ஏர் – ஆயில் கூல்டு என்பதால் பர்ஸ் வீக்கம் பெரிதாகக் குறையாது. அதேபோல், இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இருப்பது சூப்பர். ஸ்லிப்பர் அசிஸ்ட் க்ளட்ச் இருப்பதால் – ஸ்பீடு பிரேக்கர்களில் கியரைக் குறைக்காமல் ஏறினாலும்… தட் தட் என இடிக்காது. 100 கிமீ–யை அசால்ட்டாகத் தொட முடியும் இந்த X440–ல். ஹீரோவின் CIT ட்ராக்கில் இந்த பைக்கை 146 கிமீ வரை ஓட்டி டெஸ்ட் செய்திருக்கிறார்கள் நமது நண்பர்கள். பெரிய ஹார்லி பைக்குகளைப்போல் ‘தட் தட்’ என இதன் பீட் இல்லை என்றாலும், டீசன்ட்டாக இருக்கும். உங்களுக்கு இதன் பீட்டைக் கேட்க ஆசை என்றால், அதன் அதிகாரபூர்வ வலைதளத்துக்குப் போய் எக்ஸாஸ்ட் சவுண்டைக் கேட்டுப் பாருங்கள்.


கேடிஎம் போன்ற பெரிய பைக்குகளில் இருப்பதுபோல், இதில் 43 மிமீ USD (Upside Down) ஃபோர்க்ஸ் கொடுத்திருக்கிறார்கள். இதனால், எப்படிப்பட்ட மேடு பள்ளங்களில் இறங்கினாலும் கைகளுக்குத் தாக்கம் தெரியாது. இரண்டு பக்கமும் (320/240மிமீ) டிஸ்க் பிரேக்ஸ். மேலும், இதில் டூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்ஸ் இருக்கிறது. அதாவது, முன்/பின் என இரண்டுக்கும் ஏபிஎஸ். அதனால், வீல்கள் லாக் ஆகி பைக் ஸ்கிட் ஆவது நடக்காது. காஸ்ட்லியான முன் பக்கம் 18 இன்ச்; பின் பக்கம் 17 இன்ச் என எம்ஆர்ஃஎப் ஜேப்பர் டயர்கள் நல்ல கிரிப் வேறு கொடுக்கும். 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் என்பதால், டபுள்ஸ் அடித்தாலும் ஸ்பீடு பிரேக்கர்களில் இன்ஜின் கேஸ் தட்ட வாய்ப்பிருக்காது. இதன் எடை 190.5 கிலோ என்பதால், வெயிட் பார்ட்டிகள்தான் இதை எளிதில் கையாள முடியும். அதேபோல் இதன் சீட் உயரமும் 805 மிமீ. உயரம் குறைவான ரைடர்கள் பாவம்! இந்த பெட்ரோல் டேங்க்கின் கொள்ளளவு 13.5 லிட்டர். இதன் மைலேஜ் விவரங்கள் தெரியவில்லை.

தனது மற்ற ஸ்ட்ரீட் 750 மற்றும் ஸ்ட்ரீட் ராடு பைக்குகள் தயாரிக்கப்பட்ட – ஹரியானாவில் உள்ள தனது Bawal தொழிற்சாலையை மூடிவிட்டது ஹார்லி. இந்த X440, ஹீரோ மோட்டோகார்ப்பின் ப்ளான்ட்டில் தயாரிக்கப்படுவதால் – இந்தக் குறைந்த விலைக்கு இது லாஞ்ச் ஆகியிருக்கிறது.
இந்த 440 சிசியைத் தொடர்ந்து – அநேகமாக கம்யூட்டிங் செக்மென்ட்டிலும் அதாவது 150 முதல் 350 சிசி வரையிலும் விலை குறைந்த ஹார்லி பிராண்ட் பைக்குகளைக் களமிறக்குங்கள் ஹீரோ.
from ? ஆட்டோமொபைல் https://ift.tt/eSFWZi4
0 Comments