கேரள மாநிலத்தில் விதிகளை மீறும் வாகனங்களுக்குச் செயற்கை நுண்ணறிவுக் கேமராக்கள் என்ற AI (Artificial Intelligence) கேமராக்கள் மூலம் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று காலை 8 மணி முதல் அமலுக்கு வந்தது.
`சேஃப் கேரளா' என்ற திட்டத்தின்படி கேரள மாநிலம் முழுவதும் 726 செயற்கை நுண்ணறிவுக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 692 கேமராக்கள் இன்று காலை 8 மணி முதல் செயல்படத் தொடங்கியது. இந்தத் திட்டத்தின்படி போக்குவரத்துக் காவலர்கள் நேரடியாக அபராதம் விதிக்கவேண்டிய அவசியம் ஏற்படாது. விதிகளை மீறும் வாகனங்களின் எண் மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரின் முகவரியை செயற்கை நுண்ணறிவுக் கேமராக்கள் கண்டறிந்துவிடும். பின்னர் சம்பந்தப்பட்ட வாகனத்தின் விதிமீறல் போட்டோவுடன் அவரது முகவரிக்கு அபராத நோட்டீஸ் சென்றுவிடும். நகரங்கள், கிராமங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எவையெல்லாம் விதி மீறல்கள் எனவும், அதற்கான அபராதங்கள் எவ்வளவு என்பதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

காரில் செல்லும்போது டிரைவரும், முன் சீட்டில் இருக்கும் பயணியும் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். முன் சீட்டில் இருப்பது கர்ப்பிணியாகவோ, குழந்தையாகவோ இருந்தாலும் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாகும்.
பின் சீட்டில் இருப்பவர்களும் சீட் பெல்ட் அணிய வேண்டும். தற்காலிகமாக அதற்கு மட்டும் தளர்வு வழங்கப்பட்டுள்ளது. முன் சீட்டில் இருக்கும் நபர் சீட் பெல்ட் அணியாமல் இருந்தால் 500 ரூபாய் அபராதம்.
டிரைவிங்கின்போது செல்போனில் பேசினால் 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். புளூ டூத், லவ்டு ஸ்பீக்கர் வழியாகப் பேசினால் தற்காலிகமாக அபராதம் விதிக்காமல் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பைக் ஓட்டுபவர் மட்டுமல்ல; பின் சீட்டில் இருப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும். நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தையாக இருந்தால் ஹெல்மெட் அணிய வேண்டியது கட்டாயம் ஆகும். ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
பைக்கில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க வேண்டும். இரண்டு பேருக்கு மேல் பயணித்தால், 1,000 ரூபாய் அபராதம். அதே சமயம் பெற்றோருடன் குழந்தை பயணிக்க அனுமதி அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்குக் கேரள அரசு கடிதம் எழுதி உள்ளது.
எனவே, இரண்டு பெரியவர்களுடன் 12 வயதுக்குக் கீழ் உள்ள ஒரு குழந்தையையும் பைக்கில் அழைத்துச் செல்லலாம். அல்லது பைக் ஓட்டுபவர், இரண்டு குழந்தைகளை அழைத்துச் செல்லலாம்.
இதுபோக நோ பார்க்கிங்கில் பார்க்கிங் செய்தால் 250 ரூபாய், அதிவேகமாகச் செல்லும் வாகனங்களுக்கு 1,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இப்போது ஒரு நாள் 25,000 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்கப்பட உள்ளன. ஒவ்வொரு முறை கேமராவில் பதியும்போதும் அபராதம் விதிக்கப்படும்.
இது குறித்துப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆன்றணி ராஜூ கூறுகையில். "சாலை விபத்தில் கேரளா முன்னிலை வகிக்கிறது. ஒரு நாளைக்குச் சராசரியாக 161 விபத்துக்கள் நடக்கின்றன. சராசரியாக ஒரு நாளுக்கு 12 மரணங்கள் பதிவாகி வருகின்றன. வாகனப் பெருக்கத்தால் விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன. எனவே, சாலை விதிகளைக் கடுமையாக்கவும், மக்களின் உயிர்களைப் பாதுகாக்கவும் இந்த ஏஐ கேமராக்கள் உதவும்!" என்றார். அதே சமயம் விஐபி வாகனங்கள், அவசர ஊர்திகள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகளுக்கு விலக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
from Automobile https://ift.tt/E2qYLGg
0 Comments