ஒரு 40 வருடங்கள் டைம் மிஷினில் பின்னால் போய்ப் பார்த்தால்… ‘டொர்ர்ர்’ என்கிற இந்தச் சத்தம் சாலைகளை நிரப்புவதைக் கேட்பீர்கள். அது, கைனடிக் லூனா.
நீங்கள் 80’ஸ் அல்லது 90’ஸ் கிட்ஸாக இருந்தால், நிச்சயம் கைனடிக் லூனா மொபெட்டை ஞாபகம் வைத்திருப்பீர்கள். 20’ஸ் கிட்ஸுக்கு வேண்டுமானால் இப்படி நினைவுபடுத்தலாம்; நீங்கள் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் ஓட்டிக் கொண்டு… ஸாரி தள்ளிக் கொண்டு போவாரே ஒரு மொபெட்… அதை நினைவில் கொண்டு வாருங்கள். கிட்டத்தட்ட அதேபோல், லூனா மொபெட் இருக்கும்.
ஸ்கூட்டர் தெரியும்; அதற்கு முந்தைய வெர்ஷன் மொபெட் தெரியுமா! அதற்கு முன்னோடிதான் இந்த லூனா. அப்புறம் டிவிஎஸ் 50XL மொபெட் வந்து ராஜ்யம் புரிந்தது தனிக்கதை! கைனடிக் ஹோண்டா என்றொரு 2 ஸ்ட்ரோக் ஸ்கூட்டரும் 2000–ம் ஆண்டு வரை சக்கைப் போடு போட்டது!
50 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் 2,000 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்த இந்த லூனா மொபெட், இப்போது இந்த மில்லினியனில் மீண்டும் கம்பேக் கொடுக்க இருக்கிறது; அதுவும் எலெக்ட்ரிக் வடிவில்! ஆம், இதை உறுதிப்படுத்தி இருக்கிறார், கைனடிக் குரூப்பின் நிறுவனர் அருண் ஃபிரோடியாவின் மகள் சுலாஜ்ஜா ஃபிரோடியா மோத்வானி.

அவர், தனது அதிகாரப்பூர்வ வலைதளப் பக்கத்தில் தனது தந்தை அருண் ஃபிரோடியா, கைனடிக் லூனாவில் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பதிவிட்டு நாஸ்டால்ஜியாவைக் கிளறியதோடு, இந்த லூனா கம்பேக்கையும் உறுதிப்படுத்தி இருக்கிறார். இப்போது எலெக்ட்ரிக் மொபெட்களைத் தயாரிக்கப் போகும் கைனடிக் கிரீன் நிறுவனத்தின் CEO, சுலாஜ்ஜா ஃபிரோடியாதான்.
கைனடிக் கிரீன் நிறுவனத்துக்கு புனேவில் தொழிற்சாலை இருக்கிறது. இந்தத் தொழிற்சாலையில்தான் இந்த எலெக்ட்ரிக் கைனடிக் உருவாகப் போவதாகச் சொல்கிறார்கள். இப்போதுதான் லேட்டஸ்ட்டாக இரண்டாவது தொழிற்சாலையையும் திறந்திருக்கிறது கைனடிக் கிரீன். அதுவும் புனேவுக்குப் பக்கத்தில் உள்ள Supa எனும் இடத்தில். இந்த 2–வது தொழிற்சாலை, ஆண்டுக்கு லட்சக்கணக்கில் எலெக்ட்ரிக் டூ–வீலர்களையும், 3– வீலர்களையும் தயாரிக்கும்படி டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. இப்போதே இந்த எலெக்ட்ரிக் லூனாவுக்கான சேஸி, சைடு ஸ்டாண்டு, மெயின் ஸ்டாண்டு, ஸ்விங்ஆர்ம் போன்றவற்றைத் தயாரிக்கும் சப் அசெம்பிளிகளில் வேலையைத் துவங்கி விட்டதாம்.
நானே ஒரு 80’ஸ் கிட்ஸ் என்பதால், லூனாவை நன்றாக நினைவிருக்கிறது. இந்த மொபெட்டில் டபுள்ஸ் அடித்தால்… ‘VIP’ தனுஷ் மாதிரி நடந்து செல்பவர்களே ஓவர்டேக் செய்யும் அளவுக்குப் பாதுகாப்பான பவர் டெலிவரி இந்த லூனாவில் இருக்கும். அதேபோல், எடை குறைவான ஹேண்ட்லிங்கும் இதன் பெரிய பலம். கொஞ்சம் ஆஜானுபாகுவான ஆசாமிகளாக இருந்தால், சைக்கிளைப்போல் தடாலெனச் செல்லமாகத் தூக்கி வைத்துக் கொண்டும் நடந்து விடலாம்
ஆனால், இந்த லேட்டஸ்ட் எலெக்ட்ரிக் லூனா – கொஞ்சம் ரஃப் அண்ட் லுக்கில் இருக்குமாம். ரஃப்பான சாலைகளைச் சமாளிக்க முன் பக்கம் லேட்டஸ்ட் ஸ்கூட்டர்களைப்போல் டெலிஸ்கோப்பிக் ஃபோர்க் – பின் பக்கம் டூயல் ஷாக் அப்ஸார்பர், ஒரு கேஸ் சிலிண்டரை ஏற்றிக்கொண்டு லோடு அடிக்கும்படியான கட்டுமானம், தரம் வாய்ந்த IP67 பேட்டரிகள் என்று மில்லினியல் ஸ்டைலுக்கு ஏற்றபடி இது தயாரிக்கப்பட இருக்கிறது என்கிறார்கள். வயர்டு ஸ்போக் வீல்கள் மற்றும் இரண்டு பக்கமும் டிரம் பிரேக்ஸ் இருக்கும். இதன் ஃப்ளோர் போர்டு டிவிஎஸ் எக்ஸ்எல் 100 மொபெட்டைவிடப் பெரிதாக இருக்குமாம்.
மற்றபடி இதன் பவர்ட்ரெயின்களைப் பற்றிய தகவல்கள் வெளிவரவில்லை. முக்கியமாக, இது மார்க்கெட்டில் இருக்கும் B2B எலெக்ட்ரிக் டூ–வீலர்களுக்கு முக்கியமான போட்டியாக வருமாம். அப்படியென்றால், பே லோடு அதிகம் கொண்ட வசதியோடு வரும். மேலும் ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா CX, பவுன்ஸ் இன்ஃபினிட்டி E1, ஆம்பியர் மேக்னஸ் போன்றவற்றுக்குப் போட்டியாகவும் வருகிறது.
இதன் டாப் ஸ்பீடு பற்றிய விஷயங்கள் லேட்டஸ்ட்டாகக் கசிந்திருக்கின்றன. இது 50 கிமீ வேகத்தில் போகக்கூடிய எலெக்ட்ரிக் மோட்டார் இதில் இருக்குமாம்.
அநேகமாக – இந்த ஜூலை அல்லது ஆகஸ்ட் இறுதிக்குள் இந்த e-Luna லான்ச் ஆகலாம். 70,000 முதல் 80,000 ரூபாய்க்குள் வரப் போகும் இந்த எலெக்ட்ரிக் லூனா, 20’ஸ் கிட்ஸையும் கவருமா என்று பார்க்கலாம்!
from Automobile https://ift.tt/6bm7BrI
0 Comments